ADVERTISEMENT

ஜெயலலிதா, மம்தா, மாயாவதி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி இவர்!

01:23 PM Mar 18, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT


சுதந்திரத்துக்கு முன்பும், சுதந்திரத்துக்கு பின்பும் எண்ணற்றோர் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்தியாவில் முதன் முதலில் ஒரு பெண் முதலமைச்சரானது இன்றளவும் சர்ச்சைக்குரிய மாநிலமாக உள்ள உத்திரபிரதேசத்தில் தான்.

இன்றைய ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா என்ற இடத்தில் வசித்த அப்பகுதியின் பிரபல மருத்துவர் மஜும்தரின் மகளாக சுசேதா 1908 ஜுன் 5ந்தேதி பிறந்தார். அம்பாலாவில் உயர்கல்வியை கற்ற பின் பட்டப்படிப்புக்காக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டமும், பின்னர் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார். படித்து முடித்ததும் அவருக்கு பனாரஸ் இந்துக்கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. பணியில் சேர்ந்து கல்வி கற்பிக்கும் வேலையில் இருந்தார்.

1936ல் காந்தியின் அகிம்சைவழி போராட்டவாதியும், சோசியலிச தலைவருமாக அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆச்சார்யா கிருபளானியை திருமணம் செய்துக்கொண்டார். அது முதல் இவரது வாழ்க்கை பாதை மாறத்துவங்கியது.

சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டவர் காந்தி தலைமையிலான காங்கிரஸில் இணைந்து கொண்டார். பெண்களை திரட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டுவந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்வு வாழ்ந்த சுசேதா, காங்கிரஸில் மகளிர் பிரிவை தொடங்கி போராட்டக்களத்துக்கு அனுப்பிவைத்தார். அந்த பெண்கள் பிரிவே பின்னர் மகிளா காங்கிரஸ் என மாறியது.

பெண்கள் தைரியமாக வாழவும், தங்களுக்கு ஆபத்து வருகிறது என்றால் தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தான் கற்றிருந்த சிலம்பாட்டம் உட்பட பல ஆயுத பயிற்சிகளை வழங்கினார். அதோடு, தேர்ந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ முதலுதவி செய்வதை கற்றுதந்தார். இதன் மூலம் ஆங்கிலேய அதிகாரிகள் சுதந்திர போராட்ட வீரர்களை தாக்கும்போது, காயம்பட்ட போராளிகளுக்கு முதலுதவியை சுதந்திரபோராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் படையே செய்ய முடிந்தது.

ADVERTISEMENT



நாடு சுதந்திரம் அடைந்த போது சுதந்திர இந்தியாவின் முதல் அவையில் வந்தே மாதரம் பாடியவர் சுசேதா. சுதந்திரத்துக்குப் பின் பிரதமர் நேருவால், ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதியாய் நியமிக்கப்பட்டார். அதோடு, காந்தியின் நவகாளி அமைப்பின் போராட்டத்தில் கலந்துகொண்டு யாத்திரை சென்றார் சுசேதா.

1952ல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக, கட்சியின் தலைவராக இருந்த ஆச்சார்யா கிருபளானி அக்கட்சியில் பிரதமர் நேருவுடன் முரண்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதியதாக கிசான் மஸ்தூர் பிரஜான் பார்ட்டி என விவசாயிகள் பெயரை முன்வைத்து ஒரு கட்சியை உருவாக்கினார்.

இது அவரது மனைவிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுசேதா போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1961ல் மாநில அமைச்சராக பதவியேற்று அந்த பதவியில் இருந்து வந்தார். 1963 அக்டோபர் 2ந்தேதி உத்திரபிரதேச முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டார் சுசேதா. உத்திரபிரதேசத்தின் நான்காவது முதலமைச்சராக பதவிக்கு வந்தார். நான்காவதாக முதல்வர் பதவிக்கு வந்தாலும் உ.பியின் முதல் பெண் முதலமைச்சர் இவர் தான். அதோடு இந்தியாவில் முதன் முதலாக பெண் ஒருவர் முதலமைச்சரானது உத்திரபிரதேசத்தில் தான் என்பது குறிப்பிடதக்கது. 1967 மார்ச் 13ந்தேதி வரை அந்த பதவியில் இருந்தார்.

தனது 66வது வயதில் 1974 டிசம்பர் 1ந்தேதி மறைந்தார். அவர் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்கிற பெயரை பெற்று வரலாற்றில் இடம்பிடித்தாலும் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ள உத்திரபிரதேச மாநில முதலமைச்சராக சுசேதா இருந்தாலும் பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை என்பதால் அவர் பெயர் வரலாற்றில் மங்கியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT