Skip to main content

ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்...கண்டுகொள்ளாத எடப்பாடி...அதிர்ச்சி ரிப்போர்ட்!

செப்டம்பர் 12-ஆம் தேதி துரைப்பாக்கம் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு குரோம்பேட்டை பவானி நகரிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சுபஸ்ரீ, விதி ஒரு முற்றுப்புள்ளியை கையில் சுமந்துகொண்டு தன்னைத் தொடர்ந்து கொண் டிருப்பதை அறியவில்லை. கோவிலம்பாக்கம் ஜெ.டி. திருமண மண்டபத்தில் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜெயகோபாலின் மகன் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்துக்கு வருகை தரவிருந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்காக பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் நடுவே அவசர அவசரமாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றிலொன்று எதிர்பாராமல் சரிய, அதிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்த சுபஸ்ரீமீது தண்ணீர் லாரி மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

subasriகன்றுக்காக மகனை தேர்க்காலில் ஏற்றிய மனுநீதிச்சோழன் காலம்போய் ஆட்சிக்காக யார் காலடியிலும் தவழும் அரசியல் தலைவர்கள் கோலோச்சும் காலமென்பதால், பேனர் விவகாரத்தை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது காவல்துறை. ஆனால் விபத்தை நேரில் கண்டவர்கள் நடந்த கொடூரத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தங்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமான அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால்  மறுநாள் திருமணம் முடியும் வரை மண்டபத்திலே இருந்தார். சுபஸ்ரீயின் ரத்தம் சாலையில் உலர்வதற்குமுன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

 

admkஇந்நிலையில், பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த அநீதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பேனரால் உயிர்ப்பலி ஆகவில்லையென வழக்குப் பதிவுசெய்த ஆய்வாளர் ரவிக்குமார் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். சென்னை மாநகராட்சி பாதிக்கப்பட்ட சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஐந்துலட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் அந்த பணத்தை தவறுசெய்த அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

  incidentநீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, பீகாரைச் சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் என்பவரைக் கைதுசெய்தது காவல்துறை. பேனரை அச்சிட்டுத் தந்த கோவிலம்பாக்கம் அச்சகத்துக்கு சீல்வைக்கப்பட்டது. தற்போதுவரை சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப் படாத நிலையில்... அவர்மீது இ.பி.கோ. 279, 304 (ஏ), 336 பிரிவுகளின் கீழும் கடைசியாக,308 பிரிவின் கீழும் பரங்கிமலை காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவு 308, மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முற்படுபவரின்மேல் பதியும் சட்டப்பிரிவாகும். ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதன்மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாநில மனித உரிமை ஆணைய நீதிமன்ற வழக்கறிஞர் நைனா முகமது, 2009-ல் இதேபோல ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்தது. அப்போது  உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை ஏற்றது. தீர்ப்பில் இந்த உயிர்ப்பலி ஏற்பட காரணமாக இருந்த கட்சியே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு தரவேண்டுமென தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலும் அதுபோல எதுவும் நடந்துவிடக்கூடாதென தாமாகவே முன்வந்து பேனர் வைப்பதை தவிர்க்கிறோம் என பிரபல கட்சிகள் அனைத்தும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தும்'' என்றார்.


மேலும் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக போராடி பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட அறப்போர் இயக்க நிர்வாகி அக்தர் அகமது இந்த வழக்கில் அலட்சியமாக செயல்படும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இன்னொரு சுபஸ்ரீக்கு இந்த இக்கட்டு நேரக்கூடாது'' என்றார். குடும்பத்தின் ஒரே வாரிசான சுபஸ்ரீ, கனடா செல்லும் கனவிலிருந்தவர், ஜிம்களில் சொல்லித் தரப்படும் ஜூபா டான்ஸுக்கான இன்டர்நேஷனல் ட்ரைனர். பிரகாசமாகத் தெரிந்த மகளின் எதிர்காலம் ஒரு பேனரால் சரிந்ததை தாங்க முடியாமல் தவிக்கின்றனர் பெற்றோரான ரவியும் கீதாவும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்காசன் சுபஸ்ரீயின் பெற்றோரைப் பார்த்து ஆறுதல்கூறி நிவாரணத் தொகையையும் வழங்கினர். இது ஒருபுறமிருக்க, சுபஸ்ரீயின் மரணத்துக்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் தவிர, யாரும் ஆறுதல் தெரிவிக்க வில்லையென்ற சர்ச்சை எழுந்துள்ளது. துணைமுதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் என்பதால், அதை அவரே கவனித்துக்கொள்ளட்டுமென இ.பி.எஸ். தரப்பு விட்டுவிட்டதாக சில முணுமுணுப்புகள் அ.தி.மு.க. தரப்பிலிருந்தே எழுந்துள்ளது.

பல்லாவரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வசந்தகுமார், சுபஸ்ரீ பரிதாப பலிக்கு பின் பேனர்களை ஒன்றுவிடாமல் அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றுவதாக கூறிக்கொண்டு சில கடைகளின்  பெயர்ப்பலகைகளைக்கூட கிழித்து அத்து மீறுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று முறையிட்டார். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றவாளிக்கு ஆளுந்தரப்பு பாதுகாப்பளிக்க, வழக்கம்போல அப்பாவிகளிடம் விதிமுறைகளைக் காட்டி வசூலில் கவனம் செலுத்துகிறது காவல்துறை.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்