ADVERTISEMENT

சீனாவுக்கு கரோனா... இந்தியாவிற்கு மோடி - சுப. வீரபாண்டியன் பேச்சு!

03:20 PM Mar 09, 2020 | suthakar@nakkh…

மத்தியில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் ஆட்சி மாதிரி ஒன்று நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் அதுவும் கிடையாது என்பது தமிழர்களாகிய நமக்கு வாய்த்த அவமானம். ஒரு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய பேச்சுக்கு பதிலாக ஒரு அரசு என்னெவெல்லாம் செய்யக்கூடாதோ அதனை தற்போது மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறார்கள். அதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புக்கள் நம்கைகளில் இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. நாட்டின் ஜிடிபி 4.7 சதவீதத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அதுவும் உண்மையான புள்ளிவிவரம் இல்லை என்று ஒருசாரார் கூறுகிறார்கள். இன்னும் சரியாக கவனித்து பார்த்தால் அதன் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது, தங்கத்தின் விலை விண்ணைத் தொடுகின்றது. ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் குறைந்து வருகிறது. தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எது கூடக்கூடாதோ அது கூடுகின்றது. எது குறைக்கூடாதோ அது குறைகின்றது. இதுதான் இன்றைக்கு நாட்டில் இருக்கும் நிதர்சனமான சூழ்நிலை.

ADVERTISEMENT



50 ஆண்டுகளுக்கு முன்னால் சாதியின் பெயரால் இந்த வீடு இன்னார் உடையது என்று சொல்லிவந்த நிலை மாறி, தற்போது இந்த வீடு பொறியாளர் வீடு, இந்த வீடு மருத்துவர் வீடு, இந்த வீடு வழக்கறிஞர் வீடு என்று வகைப்படுத்தும் வகையில் நிலைமை இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியகாரணம் திராவிட இயக்கங்களின் பங்கு. அவர்கள் போராடியதன் விளைவாகவே இந்த மாற்றம் தமிழகத்தில் சாத்தியமானது. சென்ற ஆண்டு தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து இருபதாயிரம் என்ற அளவில் இருந்தது. இந்த ஆண்டு ஏழு லட்சத்து பத்தாயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. நான் உங்களுக்கு தற்பொது ஒரு புள்ளிவிவரத்தை தெரிவிக்கிறேன். பாஜக ஆளுகின்ற, இன்றைய மோடி. அமித்ஷாவால் ஆளப்பட்ட குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவமனைகளில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்து மூன்று. இது ஒன்றும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடக்கவி்ல்லை. குஜராத் மாடல் என்று மார்தட்டுகின்ற பிரதமரின் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

ஆனால் தமிழகத்தில் பொதுசுகாதாரத்தில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறோம். அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் அதில் காட்டிய அக்கறை. அதனால் தான் இன்றைக்கு மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருக்கின்றது. இன்றைக்கு தொழில்துறையில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்றால், சிலர் கண்ணை மூடிக்கொண்டு மராட்டியத்தையோ அல்லது குஜராத்தையோ கூறுவார்கள். ஆனால், அது உண்மையல்ல. இன்றைக்கு இந்தியாவில் தொழில்துறை வளர்ந்துள்ள மாநிலத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழகம்தான். கலைஞருக்கு பின் வந்தவர்கள் அதனை சீரழித்து வைத்தாலும், இன்றும் தொழிற்துறையில் தமிழகம் முதலிடத்தில்தான் இருக்கின்றது. தமிழகத்தில் 28 ஆயிரம் தொழிற்சாலைகள் இருக்கின்றது. மராட்டியத்தில் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மட்டும்தான் இருக்கின்றது. இன்றைக்கு உத்தர பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் இருக்கின்றது. மனிதர்களுக்கு இல்லை. தில்லியில் நடக்கின்ற கலவரங்கள் எதற்காக நடத்தப்படுகின்றது. இதுவரை அந்த கலவரங்களுக்கு 47 உயிர்கள் பலியாகி இருக்கின்றது. அதனை யார் காப்பாற்றுவது? சீனாவுக்கு ஒரு கொரோனா என்றால் இந்தியாவுக்கு மோடி என்ற அளவில்தான் இந்தியர்களின் நிலைமை இருக்கின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT