ADVERTISEMENT

அரசியலுக்கு வர விரும்பும் ரஜினிகாந்த் வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!

09:32 AM Jan 20, 2020 | suthakar@nakkh…

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT



துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழா மலரை துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு வெளியிட அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்தின் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பொய்சொல்கிறார் என்று நீங்களும் உங்களின் முகநூல் பதிவில் தெரிவித்து இருந்தீர்கள். அவர் என்ன பொய் சொன்னார்?

அந்த பேச்சில் நடிகர் ரஜினிகாந்த் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு உடையில்லாமல் கொண்டு வந்தார் என்று சொல்லியிருக்கிறார். இதை விட ஒரு வடிக்கட்டிய பொய் வேறு எதுவும் இருக்க போவதில்லை. இதை நான் இன்று மறுக்கிறேன். ஆனால் பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை மறுத்து தலையங்கம் எழுதியிருந்தார். இதை பற்றி விரிவாக கூறுவதற்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்ற ஆண்டை கூறுகிறேன். இந்த சம்பவம் சரியாக 1971ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி சேலத்தில் நடைபெற்றது. இந்த சம்பவத்தை பற்றி அய்யா அவர்கள் அப்போதே விடுதலையில் எழுதியிருக்கிறார்.பொய், பொய், அயோக்கியத்தனமான பொய் என்று. நானாவது தவறான தகவல் என்று தான் கூறினேன். ஆனால் ஐயா அவர்கள் சற்று காட்டமாகவே தன்னுடைய தலையங்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஏன் அவ்வாறு சொன்னார் என்றால் அங்கு நடைபெறாத ஒரு சம்பவத்தை இவர்கள் திரித்து அப்போதே தெரிவித்திருந்த காரணத்தால் அவர் அவ்வாறு எழுதினார்.

இவர்கள் சொல்லும் அந்த குறிப்பிட்ட குறிப்பிட்ட தினத்தில் சேலத்தில் திராவிடர் கழகத்தின் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதே தினத்தில் சென்னையில் திமுகவின் தேர்தல் தொடர்பான கூட்டமும் நடைபெற்றது. அப்போது தமிழகம் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த சமயம். மூட நம்பிக்கை மாநாடு என்பதால் கடவுள் சிலைகளை வாகனத்தில் வைத்து திராவிட கழகத்தினர் எடுத்துச்சென்றனர். கடவுளை நம்பாதீர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த சிலைகளை எடுத்துச் சென்றனர். அப்போது இன்றைய பாஜகவின் அப்போதைய பிரிவான ஜனசங்கத்தினர் அந்த மாநாட்டிற்கு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று அரசிடம் அனுமதி கேட்டனர். அப்போது காபந்து அரசிற்கு பொறுப்பேற்று இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அதற்கு அனுமதி கொடுத்தார். ஒரு முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பேரணி செல்லும் போது கருப்பு கொடி காட்டினார்கள். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் பெரியார் மீது செருப்பை எடுத்து வீசியுள்ளார்.

அது தவறுதலாக பின்னால் வந்த சாமி சிலைகள் வைத்திருந்த வாகனத்தில் விழுந்தது. அங்கிருந்த ஒருவர் அவர்களின் எண்ணத்தை மெய்ப்பிக்கும் வகையில், அந்த சிலைகளை அவர்கள் எரிந்த செருப்பை கொண்டே அடித்துள்ளனர். இது பெரியாருக்கு அப்போது தெரியாது. கூட்டம் முடித்து அவருக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்தே அவர் தன்னுடைய விடுதலையில் தவறான தகவல் வெளியிட்ட ஜனசங்கத்தினரை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். எனவே அரசியலுக்கு வர விரும்பும் ரஜினி போன்ற ஆட்கள் குறைந்த பட்சம் வரலாறுகளை நன்றாக படிக்க வேண்டும். அவ்வாறு தெரிந்திருந்தால் இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருக்காது. எனவே கருத்துக்களை அவர் போன்ற ஆட்கள் திரித்து சொல்வதனால் அவ்வாறு நடந்ததோ என்று எதிர்கால சந்ததியினர் நம்ப வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். எனவே எதையும் தெரிந்துகொண்டு பேசுவது அவருக்கும், அவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இல்லை என்றால் அவரின் பேச்சு நகைப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT