Skip to main content

இந்தி தெரியாது போடா என்பதை கூட ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறதே? - சுப.வீ பதில்

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
ரர

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு ஹேஷ்டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட் வடிவில் பிரபலங்கள் அணிந்து வந்து அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தனர். 

 

சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் எதிர்வினை ஆற்றியிருந்தார். டீ சர்ட் போட்டா தமிழுணர்வை வெளிப்பாடுத்துவார் என்று கேட்டிருந்தார்கள். இதை பற்றிய தங்களின் கருத்து என்ன? 

இதெல்லாம் ரொம்ப பழைய கருத்து. யாரும் தற்போது வேட்டி கட்டுவதில்லை. நான் பேண்ட் அணிந்துள்ளேன். சேர, சோழ மன்னர்கள் எல்லாம் வேட்டி கட்டியதாக தெரியவில்லை. உடை என்பது நாகரீகம் சார்ந்தது, மொழி என்பது பண்பாடு சார்ந்தது. இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. நாகரீகம் மாறிக்கொண்டே இருக்கும். பண்பாடு மாறவே மாறாது என்று நான் சொல்லவில்லை. பண்பாடு மிக நிலையாக காலுன்றி நிற்கும். பண்பாட்டில் வருகின்ற மாற்றம் மெதுவானதாக இருக்கும். நாகரீகம் மிக விரைவாக மாற்றமடையும். உடை என்பது இந்த பருவ நிலைக்கும் நாம் செய்கின்ற வேலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். நாற்று நடுபவர்கள் என்னை போல் உடை அணிந்து கொள்ள முடியாது. நான் வயலில் வேலை செய்பவர்களை போல் உடை அணிந்து கொள்ள முடியாது. உடை என்பது அவரவர் வேலை சார்ந்தது, உடல்வாகு சார்ந்தது. அப்படி என்றால் வேட்டி கட்டியவர்கள் சொன்னார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஒத்துக்கொள்வார்களா? இளைஞர்களிடம் இயல்பாக உடை மாறியிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். 

 

இந்த உடையை வைத்து வியாபாரம் நடத்தப்படலாம் என்பது கூட இதில் இருக்கின்றதே? 

எங்களை போன்றவர்கள் இதை தொடங்கினால் கூட அப்படி சொல்லாம். இதை அவர்கள் தானே தொடங்குகிறார்கள். எந்த தலைமுறையில் இருந்து அது புறப்படுகிறது என்றுதான் நாம் பார்க்க வேண்டும். இது செல்வாக்கான விற்பனை ஆகும் பொருள் என்றால் அதை தேர்தல் நேரத்தில் எல்லோரும் கையில் எடுத்திருப்பார்களே? நேற்றைக்கு இந்த சட்டையை போட்டுக் கொண்டவர்கள் இன்று காலையில் கோடீஸ்வரனாக மாறிவிட்டார்களா என்ன? எனவே இது வெற்றுக் குற்றச்சாட்டு என்பதே என்னுடைய பதில். 

 

இந்தி தெரியாது போடா என்பதை கூட ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறதே? 

அதில் அவர்கள் ஐம் ஏ தமிழ் பேசும் இந்தியன் என்று எழுதி இருக்கிறார்கள். இதில் இருந்து அவர்கள் நாங்கள் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவானர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இதை எல்லாம் அவர்கள் கருதி செய்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. நம்முடைய வீட்டுமொழி தமிழ்தான். உலகளாவிய தொடர்புக்கு ஆங்கிலம் தேவைப்படுகின்றது. எனவே எனக்கு ஆங்கிலமே தேவையில்லை, தமிழ் மட்டும் போதும் என்ற நிலைக்கு நாம் வந்துவிடவில்லை. தமிழ் வேண்டும். உலகத்துக்கே ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது இந்தியாவுக்கும் அது போதும் என்பதே எங்களுடைய கருத்தாக இருக்கிறது. 

 

 

Next Story

"இந்தி தெரியாது போடா" என்ற வார்த்தை சரியான ஒன்றா..? - சுப.வீ பதில்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020
jh

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு வார்த்தை "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட் வடிவில் பிரபலங்கள் அணிந்து வந்து அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தனர். லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். முதலில் இந்தி தெரியாது போடா என்பதை நாகரிகமான ஒன்றாகக் கருதுகிறீர்களா?

 

இதை அந்த நோக்கத்தில் இளைஞர்கள் பார்க்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. மொழி திணிப்புக்கு எதிராக தங்களுடைய கருத்தைக் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அன்றைய தினம் சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த கருத்து மேலோங்கி இருந்து வந்தது. இதே போன்ற ஒரு உணர்வு 1965ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராகச் சாலைகளில் கூடினார்கள். அப்போது நான் மாணவராக இருந்தேன். அதே மாதிரியான ஒரு எழுச்சி இனிமேல் ஏற்பட வாய்ப்பு இருக்காதோ என்று நாங்கள் எல்லாம் நினைத்திருந்தோம். ஆனால் தமிழக இளைஞர்கள் எப்போது மொழியைத் திணித்தாலும் அதனை எதிர்ப்பார்கள் என்பது ஆளும் வர்க்கத்துக்கு தற்போது புரிந்திருக்கும். எனவே இளைஞர்களின் எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

 

இதைக் கவர்ச்சிக்காக இளைஞர்கள் செய்கிறார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது. அப்படி என்றால் அவர்கள் திருவள்ளுவர் படம் போடத் தேவையில்லை. நிச்சயமாக இதை ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது பேன்ஸியாகவோ நான் கருதவில்லை. 'இந்தி தெரியாது போடா' என்ற வார்த்தையை யாரோ ஒரு இளைஞர் எழுதி இருக்கிறார். என்னை எழுதச் சொல்லியிருந்தால் இந்தியை என்னாலும் தமிழகம் ஏற்காது என்று எழுதி இருப்பேன். இளைஞர்களின் சிந்தனை ஒட்டமும், வேகமும் சற்று வித்தியாசமாக இருக்கின்றது. அதை அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஷேர் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது, அது அவர்களின் உணர்வின் வெளிப்பாடாகத்தான் நாம் அதனைப் பார்க்க வேண்டும். வாக்கியமாகப் பார்க்கத் தேவையில்லை. இளைஞர்கள் மாற்றுச் சிந்தனை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் உணர்வை நாம் ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 

 

1965ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் பெயரைக் குறிப்பிட்டு காட்டமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் தற்போது அதை நாங்கள் விருப்புவதில்லை. இது இளைஞர்களின் வேகம். 50 ஆண்டுகளுக்கு முன்பே அப்படி இருந்தது என்றால் தற்போது சொல்லவே வேண்டாம். இளைஞர்கள் தீயாகப் பற்றிக்கொள்வார்கள். அவ்வாறு பற்றிக்கொண்ட விளைவுதான் இன்றைக்கு இந்தியாவைத் தாண்டி செய்தி உலகம் முழுவதும் சென்று சேர்ந்திருக்கின்றது. இந்த சொற்களைத் தாண்டி உள்ளே இருக்கின்ற கோபம், மொழி உணர்வு ஆகியவற்றை நாம் விட்டுவிட்டுப் பார்க்க முடியாது. இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் கூட இதுதான் நடைபெற்றது. அப்புறம் தான் துப்பாக்கிச்சூடு வரைக்கும் மாநில அரசு சென்றது. எனவே உணர்வுகளை எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாது. அதையும் தாண்டி மொழி உணர்வு என்பது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கூடவே உள்ள ஒன்று. எனவே அதிகார பலத்தால் அதனை ஒன்றும் செய்ய முடியாது. 


 

Next Story

பெரியார் இறந்தாலும் இன்றும் அவரின் சிலையைப் பார்த்துச் சிலர் பயப்படுகிறார்கள் - சுப.வீரபாண்டியன் பேச்சு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

l

 

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இணையவழிக் கல்வி தொடர்பாக சில முக்கியக் கருத்துகளை முன்வைத்தார். அந்தக் கருத்துகள் வருமாறு,

 

"ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூற உங்களை எல்லாம் இங்கே அழைத்திருக்கிறோம். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி 'திராவிடப் பள்ளி' என்ற இணைய அஞ்சல் வழி கல்வி இயக்கத்தைத் தொடங்குவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு இயக்கமும் எதிர்ப்புகளைச் சந்திக்கும் என்பது இயற்கையான ஒன்று. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்ப்புகளைச் சந்திக்கும் இயக்கமாக திராவிட இயக்கம் இருந்து வருகிறது. திராவிட இயக்கம் பற்றிய அவதூறுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 

 

அய்யா பெரியார் அவர்கள் இறந்து 47 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அவரது சிலையைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுகிற நிலையை நாம் நேரில் பார்க்கிறோம். திராவிடம் என்ற சொல்லுக்கு பல்வேறு பொருள் உண்டு. திராவிடம் மட்டும் அல்ல. எல்லா சொற்களும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். சங்க இலக்கியத்தில் பயன்பட்ட பொருளுக்கு என்ன பெயரோ அது தற்போது கிடையாது. ஆனால் திராவிடத்தின் மீது திரும்பத் திரும்ப குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். திராவிடம் என்ற சொல்ல சங்க இலக்கியத்தில் இல்லை என்கிறார்கள். அப்பா அம்மா என்ற சொல் கூடத்தான் சங்க இலக்கியத்தில் இல்லை. எனவே அவையெல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லை என்று ஆகிவிடாது. திராவிடம் என்ற சொல் ஒரு கட்டத்தில் இனத்தைக் குறித்தது பிறகு நிலத்தைக் குறித்து, பிறகு மொழியைக் குறித்தது. 

 

ஆனால் இன்றைக்கு திராவிடம் என்ற சொல் சமூக நீதியைத்தான் குறிக்கின்றது. எல்லா சொற்களுக்கும் வெறும் அகராதியில் இருந்து மட்டுமே பொருள் தேட முடியாது. திராவிடம் என்றால் சமூக நீதி, திராவிடம் என்றால் சுய மரியாதை, திராவிடம் என்றால் சமத்துவம், திராவிடம் என்றால் தீந்தமிழ் உணர்ச்சி என்பதுதான் இன்றைய நடைமுறை. இந்த உண்மையை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காகவே திராவிட இயக்கத் தமிழர் பேரவை இந்தத் 'திராவிடப் பள்ளி'யைத் தொடங்குவது என்று முடிவு செய்துள்ளது. பெரியாரின் மொழியிலே சொல்ல வேண்டுமானால் கல்வி வள்ளல் காமராசரின் பிறந்த தினம் (15 ஜூலை) அன்று, எனவே கல்வி வள்ளல் காமராசரின் பிறந்த நாளில் இந்த அறிவிப்பை நாங்கள் வெளியிடுகிறோம். 

 

எங்கள் ஐயா பெரியாரின் பிறந்த தினத்தில் இந்த இணைய வழி அஞ்சல் வழி கல்வியகம் தொடங்கும். ஆண்டுக்கு 300 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதலில் அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சேரும் முதல் 300 மாணவர்கள் இந்த இணையவழிக் கல்வியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை ஒரு கல்வி ஆண்டாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்தடுத்த தலைமுறையினருத்து திராவிட இயக்க வரலாற்றை, சிந்தாந்தத்தைக் கொண்டு சேர்க்கும் வழியாக இது இருக்கும். திராவிட இயக்க ஆட்சியில் நடைபெற்ற விஷயங்களை இன்றைய இளம் தலைமுறையினர் அறியாமல் இருக்கக் கூடாது என்பதற்கு இந்த இணைய வழிக் கல்வி உதவியாக இருக்கும்" என்றார்.