Advertisment

பள்ளியில் மாடியிலிருந்து குதித்த மாணவி! -அமுக்கப்பட்ட அருப்புக்கோட்டை அசம்பாவிதம்!

“எல்லா உண்மைகளும் வெளியில் வருவதில்லை. காவல் நிலையங்களும் எல்லா புகார்களையும் பதிவு செய்வதில்லை. பணபலம் பல கொடுமைகளை வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைத்துவிடுகிறது.” என்று நொந்துபோய்ச் சொன்னார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவா. விசாரணையில் இறங்கினோம்.

Advertisment

மறைக்கப்பட்ட விவகாரம் இதுதான்

பொன்விழா கண்ட அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளியில், நர்மதா என்ற 11-ஆம் வகுப்பு மாணவி, தற்கொலை மனநிலையில் மாடியிலிருந்து கீழே குதித்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இதுகுறித்து, அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவாகவில்லை. மாணவியின் பெற்றோரை பள்ளி நிர்வாகம் சரிக்கட்டி விட்டது.

Advertisment

investigation

மாணவி ஏன் தற்கொலைக்கு முயன்றார்?

காலாண்டு வேதியியல் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்களைப் பெற்றாள் நர்மதா. அவள் மீது எரிச்சலான ஆசிரியை, “எல்லா சமுதாயத்தினரும் நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டுமென்றுதான், இந்தப் பள்ளியை நடத்திவரும் சமுதாயம் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறது. இதை உணராத சில சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், படிப்பில் அக்கறை காட்டாமல், குறைந்த மதிப்பெண்கள் பெற்று, பள்ளிக்கும் ஆசிரியருக்கும் கெட்ட பெயர் வாங்கித் தருகிறார்கள்.” என்கிற ரீதியில் பேசியதாகவும், அதனால் மனம் உடைந்த நர்மதா, பள்ளியின் மேல் தளத்திலிருந்து குதித்ததாகவும், சமுதாய ரீதியாக சிலர் குற்றம் சாட்டினர்.

மாணவிகள் தரப்பில் ஒருவர் “மார்க் ரொம்ப கம்மியா எடுத்திருந்தாள் நர்மதா. விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்து, ‘நான் நல்லாத்தான் எழுதியிருக்கேன். மார்க் ஏன் குறைச்சு போட்டீங்க? திருப்பிச் சரி பாருங்க.’ என்றாள். அதற்கு ஆசிரியை “மார்க் போட்டது போட்டதுதான்.” என்று கூறினார். அந்தக் கோபத்தில்தான் மாடியிலிருந்து குதித்தாள்.” என்றார்.

‘பள்ளி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நர்மதா விஷயத்தில் காவல்துறை மவுனமாகி விட்டதாமே?’ அருப்புக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பாலமுருகனிடம் கேட்டோம்.

investigation

“யாரும் புகார் தரவில்லை. ஆனாலும், போலீஸ் தரப்பில் விசாரித்தோம். சிகிச்சை பெற்றுவரும் நர்மதா ‘நானே வழுக்கி விழுந்துட்டேன்.’ என்று சொன்னாள். சிசிடிவி ஃபுட்டேஜும் அவள் சொல்வது போலவே இருந்தது. இது தற்கொலை முயற்சி கிடையாது.” என்று ஒரே போடாகப் போட்டார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தங்கரதியிடம் பேசினோம்.

“கெமிஸ்ட்ரில 70-க்கு நர்மதா வாங்கிய மார்க் வெறும் 8½ தான். தன் கைக்கு வந்த விடைத்தாளில் மார்க்கைப் பார்த்த நர்மதா, ஒரு இடத்தில் திருத்திவிட்டு, ஆசிரியையிடம் கொடுத்து மார்க் போடச் சொல்லியிருக்கிறாள். ஆசிரியை புதியவர் என்பதால், அவள் திருத்தியதை அறியாமல், கூடுதலாக 2 மார்க் போட்டு, 10 ½ மார்க் ஆக்கியிருக்கிறார். மீண்டும் விடைத்தாளில் திருத்தம் செய்த அவள், கூடுதலாக மார்க் போடச் சொல்லியிருக்கிறாள். அப்போது சக மாணவிகள், ‘டீச்சர்.. உங்களுக்குத் தெரியாம பேப்பர்ல இவ திருத்திட்டு, திரும்பத் திரும்ப மார்க் கேட்கிறாள்.’ என்று உண்மையைச் சொல்லியிருக்கின்றனர். உடனே அந்த ஆசிரியை, ‘வாம்மா.. தலைமை ஆசிரியை அறைக்குப் போவோம்.’ என்று நர்மதாவை அழைத்திருக்கிறார். ஆசிரியை முன்னே செல்ல, பின்னால் வந்த நர்மதா, மாடியின் கைபிடிச்சுவரில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். ஆசிரியை தடுக்க முயன்றும், கீழே குதித்திருக்கிறாள். உண்மையிலேயே நடந்தது இதுதான்.” என்று விளக்கம் தந்தார்.

investigation

தங்கரதியின் கணவர் ஆனந்தராஜ் அதே நிர்வாகம் நடத்துகின்ற ஆண்கள் மேல்நிலைப்பளியின் தலைமை ஆசிரியர் ஆவார். அவர் நம்மிடம் “மாணவர்களுக்குப் பயப்பட வேண்டிய நிலையில் ஆசிரியர் சமுதாயம் இருக்கிறது. பள்ளியில் காலையிலிருந்து மாலை வரையிலும் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதுதான், ஆசிரியர் சமுதாயத்தின் பெரும் கவலையாக உள்ளது. இப்படியே, பயந்து பயந்து ஆசிரியர் வேலை பார்த்தால், மாணவ சமுதாயத்தை எப்படி திருத்த முடியும்? அதனால், அடுத்த தலைமுறையின் வளர்ச்சி என்பது கேள்விக்குறி ஆகிவிட்டது.” என்று வேதனைப்பட்டார்.

investigation

மாணவர்கள் நலனில் ஆசிரியருக்குக் கவலை! பள்ளி நிர்வாகத்துக்கு, நடந்த அசம்பாவிதம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்ற கவலை! பள்ளி நிர்வாகிகளின் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பது காக்கிகளின் கவலை! மதிப்பெண் போன்ற விஷயங்களுக்காக உயிரைவிடத் துணியலாமா என்பது பெற்றோரின் கவலை! மாணவர்களில் சிலருக்கோ, படிப்பதும், தேர்வு எழுதுவதும், மதிப்பெண்கள் பெறுவதும், தவறைச் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் வழிநடத்துவதும் பெரும் கவலையாக இருக்கிறது.

Investigation police Suicide student schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe