Advertisment

கல்லிலே கலைவண்ணம் கண்ட பாண்டிய மன்னர்கள்... கட்டிடக்கலை குறித்த ஒரு மாணவியின் ஆராய்ச்சி...

Found Pandiyas inscription near Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகிலுள்ள திருமாலுகந்தான் கோட்டை கோயில் பாண்டிய மன்னர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ள பழம்பெரும் கோயில். இக்கோயில் பற்றி ஆய்வு செய்த கல்லூரி மாணவி அக்கோயிலின் கட்டிடக்கலை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அந்நிறுவனத்தின் மூலம் கல்வெட்டு, கோயில் கட்டிடக்கலை ஆகியவை குறித்த கற்பித்தலை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே செய்து வருகிறார். இதுதொடர்பாக மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் அவர் வழங்கி வருகிறார். இப்பயிற்சிகளைப் பெற்ற ராமநாதபுரம் அருகேயுள்ள பால்கரையைச் சேர்ந்த, சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவி வே.சிவரஞ்சனி, திருமாலுகந்தான் கோட்டை கோயில் பற்றி ஆய்வு செய்துள்ளார்.

Advertisment

Found Pandiyas inscription near Ramanathapuram

இதுபற்றி மாணவி வே.சிவரஞ்சனி கூறியதாவது; ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிதும் அறியப்படாத பழமை வாய்ந்த கோயில்களில், திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோயிலும் ஒன்று. இங்கு சிவன், அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதில் சிவன் சன்னதி, அடி முதல் முடி வரை கருங்கற்களால் அமைக்கப்பட்ட கற்றளியாக, பாண்டியர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இது மட்டுமே முழு கற்றளி (கற்கோயில்கள்) என்பது இதன் சிறப்பு.

முற்காலப் பாண்டியர்களால் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கழுகுமலை வெட்டுவான்கோயில், திருப்பத்தூர் சிவன் கோயில் ஆகியவற்றுக்கு இணையான சிறப்புடையதாக இக்கோயில் திகழ்கிறது. இவை மூன்றும் சதுர வடிவில் அமைந்த நாகர விமானம் கொண்டவை. திருப்பத்தூர் கோயில் மூன்று தளங்களுடனும், மற்றவை இரண்டு தளங்களுடனும் உள்ளன. மூன்று கோயில்களிலும் முதல் தளத்தில் உள்ள கர்ணக்கூடு தேர் போன்ற அமைப்பிலும், வண்டிக்கூடு போன்ற அமைப்பில் உள்ள சாலை சிறிய கோயில் போன்றும் உள்ளன. இதில் சிற்பங்கள் உள்ளன.

கழுகுமலையில் உள்ள யாளி வரிசைகள் சிம்ம யாளிகளாகவும், மற்றவற்றில் மகர யாளியாகவும் உள்ளன. பூதகணங்கள் ஆடிப்பாடி மகிழும் சிற்ப வரிசை, நாசிக்கூடுகள், கொடிக்கருக்குகள் ஆகியவை மூன்று கோயில்களிலும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

Found Pandiyas inscription near Ramanathapuram

திருப்பத்தூர் கோயில் முதல் தளத்தில் உருளை போன்ற அமைப்பில் உள்ள விருத்தஸ்புடிதம் என்ற அமைப்பு, இக்கோயில் அம்மன் சன்னதியின் வெளிப்புறச்சுவரில் நீளமான தூண் போன்ற அமைப்பில் உள்ளது. கர்ணக்கூடு, சாலைக்கூடு, தேவகோட்டம், பஞ்சரம், விருத்தஸ்புடிதம் ஆகியவை சிறு கோயில்கள் போன்ற அமைப்பில் இருப்பவை. இவற்றை கோயிலின் பின்பக்கச் சுவர், விமானத்தின் மேல் தளங்களில் அமைத்து அழகுபடுத்தியுள்ளார்கள்.

விமானத்தின் வெளிப்பகுதி சுவரில், சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. இதில் லிங்கத்தின் மீது கால் வைத்த கண்ணப்ப நாயனார், நந்தி மேல் உமாமகேஸ்வரர் எனப் பல சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

inscription Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe