Skip to main content

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு: நான் அவன் இல்லை என்ற தொணியில் எச்.ராஜா விளக்கம்

Published on 07/03/2018 | Edited on 07/03/2018

 

பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய பதிவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா 06.03.2018 செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பதிவில்,

 

H. Raja


லெனின் யார்
அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு
கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில்
இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை

என குறிப்பிட்டுள்ளார்.
 

நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை என்று கூறியிருந்த இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சிலர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
 

இதனைத் தொடர்ந்து எச்.ராஜா தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். எச்.ராஜாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
 

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய தனது கருத்து தொடர்பாக எச்.ராஜா பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

 

H. Raja

“நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். 
 

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.