ADVERTISEMENT

சுகாதாரத்துறை செயலர் "பீலா ராஜேசு"க்கு எதிராக வலுவடையும் போராட்டம்...!            

02:55 PM Jan 28, 2020 | kalaimohan

கருவுற்ற நிலையிலிருந்து பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களுக்கு மருத்துவம் ஒன்றே உயிர் போன்று அத்தியாவசியமானது. இந்த துறையில் பணிபுரிபவர்கள் கடவுளுக்கு நிகராக மனிதர்களால் பார்க்கப்படுபவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளை அன்போடும் கருணையுடன் அரவணைத்து சென்று ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் ஒரு நல்ல உயரதிகாரிக்கு பண்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு எல்லாமே வம்பாக இருக்கிறது என வேதனை குரல் கொடுக்கிறார்கள் தமிழக அரசு பொது சுகாதார துறையின் கீழ் பணிபுரியும் மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இத்துறையின் செயலாளராக டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இருந்தவரை எதார்த்த நிலைய புரிந்து கொண்டு பணியாளர்களை வழி நடத்தினார். அவருக்கு பிறகு ஹெல்த் செகரெட்ரியாக பீலா ராஜேஸ் வந்த பிறகு எல்லோருக்குமே நெருக்கடி கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என குமுறுகிறார்கள் சுகாதார துறையில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மாவட்ட இணை இயக்குனர் வரையிலான அதிகாரிகள் வரை.


வேறு வழியே இல்லாமல் போராட்டத்தில் இறங்கி விட்டனர் சுகாதார செவிலியர்கள். "பணிச்சுமையை அதிகரிக்க கூடாது. அறிக்கை.., அறிக்கை என ஒவ்வொரு நாளும் தொல்லை கொடுக்க கூடாது. ஆன்லைன் பதிவு என்கிற பிக்மி பதிவுகளில் ஈடுபட வைத்து டார்ச்சர் கொடுக்க கூடாது. வாரம் தோறும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், மருத்துவ அலுவலர்களை வைத்து நடத்தும் வீடியோ கான்பரசிங் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அக்கூட்டத்தில் சென்னையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளிடமும் செகரெட்ரி பீலா ராஜேஸ் கடுமையான முறையில் பேசுவதோடு உடனே சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என்றெல்லாம் சர்வாதிகார முறையில் உத்தரவு போடுவதை நிறுத்த வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27 ந் தேதி மாலையில் ஈரோடு, தேனி, தருமபுரி, கடலூர், மதுரை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் (VHN, SHN, CHN,) பணியாளர்கள் பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்தி ஹெல்த் செகரெட்ரி பீலா ராஜேசு க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

"பொது சுகாதாரத் துறையில் உயிர் நாடியாக இருப்பது கிராம சுகாதார செவிலியர்கள் தான். சாதாரண குக்கிராமங்கள் வரையிலும் அவர்கள் பணி செய்கிறார்கள் கிராம சுகாதார செவிலியர்கள் முழுமையான பணி என்பது தாய் சேய் நலம் தான் அதாவது ஒரு பெண் கருவுற்ற நிலையிலிருந்து அடுத்து குழந்தைப்பேறு அந்த குழந்தை வளர்ச்சி அதற்குத் தேவையான மருத்துவம் மருத்துவம் சார்ந்த ஆலோசனை தடுப்பூசி என அனைத்தையும் வழங்குபவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் தான். அடிப்படையான இவர்களின் இந்தப் பணியை செய்ய முடியாத அளவிற்கு இப்போது பணிச்சுமை களை மிகவும் அதிகப்படுத்தி விட்டனர் அதுவும் ஆன்லைன் என்கிற பிக்மி பதிவில் என் நேரமும் லேப்டாப் கையுமாகவே இருக்க வேண்டும் என சொல்லாமல் சொல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ரிப்போர்ட் ஒரு நாளுக்கு ஒருமுறை ரிப்போர்ட் ஒரு வாரத்திற்கு பல ரிப்போட் ஒரு மாதத்திற்கு மேலும் மேலும் ரிப்போட் அடுத்து வருடக் கணக்கு என தொடர்ந்து அறிக்கை, அறிக்கை என பல்வேறு தொந்தரவுகளை மேலிடம் கொடுக்கிறது.


அதேபோல் மகப்பேறு நிதி வழங்குவது, கருவுற்ற பெண் பிக்மி பதிவில் பதிவு செய்த பிறகு அவர்களுக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும் அதன் மூலம்தான் பிறப்பு சான்றிதழ் அவர்கள் பெறமுடியும் மகப்பேறு நிதியில் வழங்குவது குளறுபடி ஏராளமாக உள்ளது. அதற்கு காரணம் மேலிடம் தான். கிராம சுகாதார செவிலியர் முதலில் பதிவு செய்து அந்த விண்ணப்பத்தை அடுத்தடுத்த நிலைகளுக்கு அனுப்புவார். ஒவ்வொரு மாவட்ட அதிகாரியிடமிருந்து இறுதியாக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு வரும் இவை எல்லாமே ஆன்லைன் மூலமாக நடப்பதுதான் ஆனால் நிதியை வழங்க வேண்டிய சுகாதாரத்துறை தலைமை மிகப்பெரிய குளறுபடியை செய்துவருகிறது. இந்த நிதி மத்திய அரசு மூலமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆதார் எண் மூலமாக கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கு நிதியை அனுப்புகிறது. இதில் ஏற்படுகிற குளறுபடி கீழ் மட்டதில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு என்பது சுகாதாரத்துறையின் தலைமையின் கையில் தான் உள்ளது ஆனால் கிராம சுகாதார செவிலியர்கள் பலிகடா ஆக்குகிறார்கள்.

தாய் சேய் நலத்தை கவனிக்கவேண்டிய சுகாதார செவிலியர்கள் கணக்கு வழக்கு பார்க்க அனுப்புகிறார்கள் மேலும் தொடர்ச்சியான பல்வேறு ரெக்கார்ட் வேலைகளையும் திணிக்கிறார்கள். தொடர்ந்து பல வேலைகளை கொடுப்பதால் அவர்கள் மன அழுத்தத்திற்கு உட்பட்டு பலபேர் நோயாளியாக மாறிவிட்டார்கள். பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது சில செவிலியர்கள் தற்கொலையும் செய்து உள்ளார்கள். அவர்கள் குடும்பத்திலும் தற்கொலை நிகழ்ந்துள்ளது இவை எல்லாவற்றுக்கும் காரணம்.., மன அழுத்தம் வேலைப்பளு நெருக்கடியும் தான்.

இவைகள் அனைத்தையும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்றும் அவரும் இதை கவனிக்காமல் எல்லாவற்றையும் செகரெட்ரியே பார்த்துக் கொள்வார் என ஒதுங்கி நிற்கிறார். செகரெட்ரி பீலா ராஜேஷ் இதில் பணிபுரியும் பெண்களின் உண்மையான வேலைநிலை கண்டு கொள்லாமலும் அவர்களின் வாழ்வியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து அதன் மூலமாக அவர் தனது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தி வருகிறார்.


இது ஒரு வகையான சேடிஸ்ட் குணம் இது இப்படியே தொடருமானால் மிகப்பெரிய விளைவுகளை தான் இந்த துறை சந்திக்க நேரிடும்" என கண்ணீரோடு கூறுகிறார்கள் கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட அத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள்.

பீலா ராஜே சின் அதிகாரமிரட்டலால் நேற்று திருச்சியில் அரசு மருத்துவ பேராசிரியை வேலையை விட்டே ராஜினாமா செய்துள்ளார். தமிழகம் முழுக்க கடந்த ஒரு வருடத்தில் நான்கு சுகாதார செவிலியர்கள் தற்கொலை செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வில் சென்று விட்டனர். கணவன், மனைவி, குழந்தைகள் என பல குடும்பத்தில் தகராறு முற்றிப் போய் குடும்ப சிக்கல் எழுந்துள்ளது. இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்வாரா தனி மனிதரான ஐ.ஏ.எஸ்.அதிகாரி பீலா ராஜேஸ், அல்லது துறையின் அமைச்சரான விஜயபாஸ்கர் செகரெட்ரி பீலா ராஜேஸ் சொல்வதே வேத வாக்கு என இப்படியே விட்டு விடுவாரா? என்பது தான் இப்போது பொது சுகாதார துறையில் எழும்பியுள்ள கேள்வி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT