ADVERTISEMENT

வேலை நிறுத்தம் செய்த கால்பந்து வீரர்கள் !

05:06 PM Oct 04, 2017 | Anonymous (not verified)

வேலை நிறுத்தம் செய்த கால்பந்து வீரர்கள் !




'பார்சிலோனா', உலகம் எங்கும் புகழ் பெற்ற கால்பந்தாட்ட அணி. இந்த அணி 'ஸ்பெயின்' நாட்டில் உள்ள 'கேட்டலோனியா' எனும் மாகாணத்தில் உள்ளது. உலகப் புகழ் பெற்ற அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி இந்த அணிக்காக ஆடுகிறார். 'பார்சிலோனா' அணியும் 'ரியல் மாட்ரிட்' அணியும் ஆடும் போட்டியென்றால், இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை விட அதிக ஆர்வத்தோடும் வெறியோடும் ரசிகர்கள் இருப்பர். வீரர்களுக்குள் இருக்கும் போட்டியை விட பார்வையாளர்களுக்குள் அதிக போட்டியிருக்கும். பல முறை அந்தப் போட்டி முற்றி, அடிதடியிலும் முடிந்திருக்கிறது. இந்த அணிகளுக்கிடையிலான போட்டிகள்தான் முதலில் 'எல்-கிளாசிகோ' என்று அழைக்கப்பட்டன. இத்தனைக்கும் இரண்டுமே ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிளப்புகள் தான். கடந்த ஞாயிறன்று (01-10-2017) 'ஸ்பெயின்' நாட்டில் உள்ள 'கேட்டலோனியா' மாகாணம், தங்களுக்கு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை வேண்டுமென்பதைப் பற்றி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடந்த மையங்களில் நுழைந்த ஸ்பெயின் காவல்துறை அங்கிருந்தவர்களைத் தாக்கி, பலரையும் வெளியே இழுத்துச் சென்றது. இந்த நடவடிக்கையைக் கண்டித்துதான் நேற்று (03-10-2017) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. பார்சிலோனா கால்பந்து அணி வீரர்கள் மட்டுமல்ல, கேட்டலோனியாவில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் களத்தில் இறங்கியுள்ளனர்.




கேட்டலோனியா மாகாணம் பல வருடங்களாக ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனி நாடு வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துக் கொன்டே இருக்கிறது. கேட்டலோனியா, ஸ்பெயின் நாட்டில் இருந்தாலும் தன்னாட்சி பெற்ற, தனக்கென நாடாளுமன்றமெல்லாம் கொண்ட பெரிய மாகாணம் ஆகும். 75 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்தில் 20 சதவீத பங்களித்து உந்துச்சக்தியாகவும் இருந்தது. இவ்வாறு இருக்கையில் கடந்த 2008 ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலையின் போது ஸ்பெயின் அரசு, கேட்டலோனியா மீது பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. இதனால் அங்கு வேலை இல்லா திண்டாட்டம் ஏற்பட்டு மக்கள் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகினர். அதுமட்டுமல்லாது கேட்டலோனியா மக்கள் தங்கள் தாய் மொழியான 'கேட்டலான்' எனும் மொழியை பேசி வருகின்றனர். ஆனால் ஸ்பெயின் அரசு தங்கள் மொழியை அவர்களிடம் திணித்து ஸ்பானிஷ் மொழியை வளர்க்கப் பார்க்கிறார்கள். இதனால் கோபமடைந்த மக்கள், 2014 ஆம் ஆண்டே ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் தனி நாடு கேட்டனர். ஆனால், அந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று ஸ்பெயின் அரசு நிராகரித்தது. மீண்டும் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தான் இந்த வன்முறை.




20 லட்சத்தி 26 ஆயிரம் மக்கள் வாக்களித்துள்ள இந்த வாக்கெடுப்பில், 90 % சதவீத வாக்கு தனி நாடு வேண்டியுள்ளது. வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்பெயின் காவலாளிகள் உள்ளே நுழைந்து தடுத்துள்ளனர். இதனால் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர்.கேட்டலோனியா தீயணைப்பு துறை மக்களின் வாக்கெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்களுக்கு அரணாக செயல்பட்டு வாக்கெடுப்பு நடைப்பெற வைத்துள்ளனர். ஸ்பெயின் பிரதமர் மரியனோ 'இது தேசத்துரோக காரியம்' என்று கூறியுள்ளார். ஸ்பெயின் மன்னர் ஃபெலிப்பி, 'விசுவாசமற்ற இந்த செயலை, பொறுப்பில்லாமல் செய்திருக்கிறது கேட்டலோனியா அரசாங்கம். விரைவில் அமைதி ஏற்படுத்தப்படும்' என்று கூறியுள்ளார். இன்றுவரை கேட்டலோனியா மாகாணத்தில் பதற்றமான நிலையே உள்ளது. கேட்டலோனியா மக்கள் ஐரோப்பிய யூனியன் இதில் தலையிட்டுத் தீர்வளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 'ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்' என்னும் கொள்கை உலகெங்கும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. மக்களின் தனித்தன்மை மத்திய அரசுகளுக்குப் பிடிப்பதில்லை...?

சந்தோஷ்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT