Skip to main content

தோனி கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்திய யுக்திகள்!  

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், சேவாக் ஆகியோரை மட்டுமே மலைபோல் நம்பிய காலம் அது. அப்படி ஒரு நாள் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பரம கிரிக்கெட் எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்திற்கிடையே விசாகபட்டனத்தில் நடந்து கொண்டிருந்தது.
 

msdhoni



பெரும்பாலும் பகல் இரவு ஆட்டங்களாக நடக்கும் அந்த காலகட்டத்தில் அன்று நடந்தது பகல் ஆட்டம் என்பதால் கிரிக்கெட் போட்டி காலையிலேயே ஆரம்பித்துவிட்டது. அந்நேரம் பார்த்து சென்னையில் பலத்த மழை மற்றும் வேலை நாள் வேறு என்பதால் பல இடங்களில் கரண்ட் கட், மற்றும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் சென்று விட்டதால் அந்த ஆட்டத்தைக் காண பலரால் இயலவில்லை. இருந்தும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமாச்சே எப்படியாவது ஸ்கோர் தெரிந்து கொள்ள வேண்டுமே என்று ரேடியோவை நாட வேண்டியிருந்தது. எனவே அந்த சமயத்தில் கையடக்க ரேடியோவை பள்ளியிலும், கல்லூரியிலும் மறைத்து வைத்து பலரும் அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்துகொண்டனர். வழக்கம் போல் நானும் என் நண்பனிடம் அவ்வப்போது ஸ்கோர் என்னவென்பதை கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தேன். பிறகு சிறிது நேரம் தடங்கலாகி மீண்டும் ஆட்டத்தை கவனித்தபோது முதல் பாதி ஆட்டம் முடிந்து விட்டது. இது தெரியாமல் நான் என் நண்பனிடம் எப்போதும் போல் ஸ்கோர் என்ன என்று கேட்ட சமயத்தில் அவன் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது.

நண்பன் : மாப்ள ஸ்கோர் 350ஐ தாண்டி போயிருச்சு...

நான் : என்னடா சொல்ற? சச்சின், சையத் அன்வர் ரெக்கார்ட ஒடச்சிட்டாரா...' 

நண்பன் : இல்லடா தோனினு ஒரு பரட்ட தலை கீப்பர் இருக்கான்ல... வெளுத்து வாங்கிட்டான் மச்சி... ஒன் டவுன்ல இறங்கிப் பேய் அடி அடிச்சான் பாரு.... ப்பா... 148 ரன்டா மாப்ள

நான் : ????

இப்படித்தான் 'தோனி' என்ற தலைவன் எங்களுக்கு அறிமுகமானார். அன்று முதல் எந்த ஆட்டம் என்றாலும் சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக் ஆகியோர் அவுட் ஆனதும் டிவியை ஆஃப் செய்த காலம் போய் தோனிக்காகவும் ஆட்டத்தைக் காண ஆரம்பித்தோம். அது போலவே அவர் அசால்ட்டாக சிக்ஸர்களை அடித்துத் தள்ள ஆரம்பித்தது முதல் இந்த (2018) ஆண்டு சென்னைக்கு ஐ.பி.எல் கோப்பையை வென்று தந்தது வரை அவருடைய சாதனைகள் ஈடு இணையற்றது. அப்படி தோனி செய்த சாதனைகளுக்கு அவர் பயன்படுத்திய புதிய யுக்திகள் முக்கிய காரணம். ஏற்கனவே ஒரு சிலரால் பயன்படுத்தப்பட்ட யுக்திகள் கூட அவர் அதை பயன்படுத்தி செய்த சாதனைகளால் புகழ் பெற்றன. அந்த யுக்திகளையும் அவர் எப்படி அதை அறிமுகப்படுத்தினார் என்பதையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

 

 


ங்கிலாந்துக்கு எதிராக புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதான சேஸிங்கை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அப்படி பெரிய இலக்கை சேஸ் செய்கையில் பெரும்பாலான அணிகள் கடைசி கட்டத்தில் ரன்னை நெருங்கும் சமயம் ஒன்று, இரண்டு ரன்களாக குருவி சேர்ப்பது போல் சேர்த்து வெற்றி பெரும் காலமது. அதுவும் எப்போதாவது அத்திப்பூத்தாற் போல்தான் நடக்கும். அப்படியான காலகட்டத்தில் 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தனி ஒரு மனிதனாக கடைசி வரை களத்தில் நின்று 183* (நாட் அவுட்) ரன்கள் அடித்து 300 ரன்களை அசால்டாக சேஸ் செய்து அசத்தினார் தோனி. அன்று ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இலக்கை நெருங்கும் சமயம் 5 ஓவர்களுக்கு 30 ரன்கள் தேவை என்று இருக்கையில் அதை ஒன்று, இரண்டு ரன்களாக எடுப்பார் என்று எதிர்பார்த்த சமயத்தில் தன் மேல் இருந்த அபாரமான நம்பிக்கையின் காரணமாக சிக்சர்களைப் பறக்க விட்டு ஆட்டத்தை டென்ஷன் இல்லாமல் இப்படியும் தித்திப்பாக முடிக்கலாம் என்று இந்த உலகத்திற்கு தெரியப்படுத்தியவர் இவரே. அன்று முதல் இவர் சிறந்த ஃபினிஷர் என்று அழைக்கப்பட்டார்.

  msdhoni



ரு நாள் கிரிக்கெட் போட்டியின் ஒவ்வொரு இன்னிங்ஸ் நடுவிலும் 20 முதல் 40 ஓவர்கள் வரை பெரும்பாலும் பீல்டர்கள் 30 யார்டு வட்டத்திற்கு வெளியே எல்லைக் கோட்டிற்கு அருகில் நின்று பீல்டிங் செய்து கொண்டிருப்பர். அப்போது பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது பவுண்டரியும், தொடர்ந்து சிங்கள்களும் கணிசமாக எடுத்து ரன்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பது வழக்கம். அந்த மாதிரியான சமயங்களில் தூரத்தில் இருக்கும் பீல்டர்களிடம் பந்தை மித வேகத்தில் தட்டி விட்டு அவர்கள் ஓடி வந்து பந்தை எடுக்கும் நேரத்தில் கிடைக்கும் தாமதத்தை பயன்படுத்தி எப்போதும் ஒரு ரன் கிடைக்கும் சமயத்தில் தொடர்ந்து இரண்டு ரன்களாக எடுக்கவைக்கும் யுக்தியை முதன் முதலில் அதிகமாக பயன்படுத்தியவர் தோனியே.

 

msd running



ப்படி ஒரு ரன் எடுக்கவேண்டிய இடத்தில் இரண்டு ரன்கள் எடுக்க ஃபிட்னஸ் என்பது மிகவும் முக்கியம் என்பதால் சரியாக பீல்டிங் செய்யாத மூத்த வீரர்களை ஓரம் கட்டி இன்று இந்திய அணியில் இருக்கும் தலை சிறந்த இளம் வீரர்களாக இருக்கும் வீரர்களை அறிமுகப்படுத்தி இன்றளவும் அவர்களுக்கு நிகராக ஃபிட்னஸுடன் இருக்கும் தோனியை மனதில் கொண்டு இந்திய கேப்டன் விராட் கோலி 'யோ யோ' ஃபிட்னஸ் டெஸ்டை இந்திய கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியதற்கு தோனியும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

 

 


குறுகிய நேர கிரிக்கெட் (20-20) அறிமுகம் ஆன காலம் அது. நான்கு மணி நேரத்திலேயே ஆட்டம் முடிந்து விடும் என்பதால் பெரும்பாலும் எல்லா அணிகளும் சேசிங் செய்வதையே விரும்பும். அதன் படி ஆடிய ஆட்டங்களில் ஆடிய அணிகள் அதிகம் வெற்றியும் பெற்று இதை உறுதி செய்தன. அந்த சமயம் 2007ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை போட்டி தொடரில் படுதோல்வி அடைந்து முதல் சுற்றுடன் நடையைக் கட்டியதால் பெரும்பாலான மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு அணியை விட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர் அதே ஆண்டு 20-20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு முதன்முதலாக இளம் இந்திய அணி தோனி தலைமையில் அதில் பங்கேற்றது. வழக்கம்போல் போட்டித்தொடரில் டாஸ் ஜெயித்த அணிகள் பெரும்பாலும் சேஸிங்கை தேர்வு செய்த சமயத்தில் தோனி மட்டும் தொடர் முழுவதும் முதல் பேட்டிங்கை தேர்வு செய்து உலகக்கோப்பையையும் வென்று மகத்தான சாதனையை படைத்து முதல் பேட்டிங்கிலும் ஜெயிக்கமுடியும் என்று கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி ஜெயித்துகாட்டினார்.... 

பெரும்பாலும் ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களை வேகப் பந்துவீச்சாளர்கள்தான் வீசுவார்கள். முதலிலேயே அதிக ரன்கள் விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காகவும், எளிதில் விக்கெட்டுகள் வீழ்த்துவதற்காகவும் இந்த யுக்தி காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதேபோல் ஆட்டத்தின் நடுவில் மட்டும்தான் ஸ்பின்னர்கள் பந்து வீசினால் பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுக்கும் சமயம் அவுட் ஆவார்கள் என்பதையும் கடைபிடித்து வந்தனர். அதை முதன்முதலில் உடைத்து முதல் பத்து ஓவர்களில் ஸ்பின்னர்கள் பந்து வீசினாலும் விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றி பெற முடியும் என்று முதன்முதலில் நிரூபித்தவரும் தோனியே...

 

 


யார்க்கர் பந்துகளை ஆடுவது என்பது கடினமான காரியமாகும். அதுவும் அதில் பவுண்டரிகள் அடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்த சமயத்தில் 'ஹெலிகாப்டர் ஷாட்' என்ற ஷாட்டை அறிமுகப்படுத்தி யார்க்கர் பந்துகளில் முதன்முதலில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்டது தோனியே... 

  helicopter shot



டம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், ஆண்டி பிளவர் போன்ற தலை சிறந்த கீப்பர்கள் கிரிக்கெட்டில் உலகில் கோலோச்சியிருந்தாலும் அவர்கள் செய்யாத அதிவேக ஸ்டம்பிங்கை செய்து சாதனை படைத்தவர் தோனி. கீப்பர்கள் பந்தை வாங்கி ஸ்டம்பில் அடிப்பதை வாடிக்கையாக செய்துவந்த சமயத்தில் வேகமாகவும், சுழன்றும் வரும் பந்துகளை லாவகமாக அதன் எதிர் திசையில் இரு கைகளை முன்னோக்கி நகர்த்தி பந்தைத் தடுத்து நிறுத்தி அப்படியே ஸ்டம்பில் அடித்து ஸ்டம்பிங் செய்யும் புது யுக்தியை முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் தோனியே...

 

stumping



ன்றைய காலகட்டத்தின் நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி வரும் கலாச்சாரமான, உலகக்கோப்பை உட்பட எந்த கோப்பையை ஜெயிக்கும் அணியின் கேப்டன்கள் கோப்பையை வாங்கி இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு அப்படியே ஓரமாக ஒதுங்கி நின்று அவர்களை உற்சாகப்படுத்துவதை அதிகம் செய்தவர் தோனியே....

 

msd



இதுமட்டுமில்லாமல் இதுபோல் பல்வேறு வியக்கவைக்கும் யுக்திகளை கிரிக்கெட் உலகிற்கு இன்றும் அறிமுகம் செய்துகொண்டிருக்கும் 'தல' தோனிக்கு ஹேப்பி பர்த்டே.