Skip to main content

தமிழகத்துக்கு சிம்பு அறிமுகப்படுத்திய  போராட்ட வடிவங்கள்! 

இந்தக் கட்டுரை தமிழுணர்வுள்ள ஒரு இளைஞரை கிண்டல் செய்யும் கட்டுரையல்ல, அவர் கூறிய கருத்துகளை எடுத்துச் செல்லும் கட்டுரையே. தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. ஸ்டெர்லைட் முதல் நியூட்ரினோ வரை வேண்டாமென்றும், காவிரி நதிநீர் முதல் விவசாயிகளுக்கு இழப்பீடு வரை வேண்டுமென்றும் போராடி வருகிறோம். கடந்த சில வருடங்களாக நாட்டிலேயே அதிக போராட்டங்களை செய்து இந்தியாவின் போராட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.

 

simbu press meetஇந்தியாவுக்கு சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பல போராட்ட வடிவங்களை பல தலைவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். காந்தியின் வழியில் அகிம்சை போராட்டங்களே அதில் அதிகம். உண்ணாவிரதம், தர்ணா போன்ற போராட்டங்களும் தீவிரமாகும் பொழுது சாலை மறியல், ரயில் மறியல், முற்றுகை போராட்டம் போன்றவையும் நடத்தப்படுகின்றன. சமீப காலமாக டோல் கேட் உடைப்புப் போராட்டங்களெல்லாம் நடந்து வருகின்றன. டெல்லியில் நமது விவசாயிகள் நடத்திய எலிக்கறி போராட்டம், நிர்வாண போராட்டம், மண்டை ஓட்டுடன் ஒப்பாரி போராட்டம் ஆகியவற்றைப் பார்த்து தேசமே அதிர்ந்தது. தங்கள் குரலை சற்றும் கவனிக்காத அரசின் மீதான கோபத்தின் உச்ச நிலையில் நடந்த போராட்டம் அது. ஜல்லிக்கட்டுக்காக நாம் நடத்திய அமைதிப் போராட்டத்தையும் அங்கு புரண்டோடிய மனித நேயத்தையும் பார்த்து தேசமே வியந்தது. இப்படி சீரியஸாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பல போராட்டங்கள் நடக்கின்றன. ஒரு புறம் இவையிருக்க, மறுபுறம் நடிகர்களும் வியாபார அமைப்புகளும் கூட போராடுகின்றனர். இவற்றிலெல்லாம் சேராமல் தனியாக நின்று போராடுபவர்கள் சிலர். அப்படி ஒருவர்தான் எஸ்.டி.ஆர் என்ற நடிகர் சிம்பு. இவர் தனியாக போராட்டங்களை ஒருங்கிணைப்பதோடு சமீப காலமாக தமிழகத்துக்கு சில புதிய போராட்ட வடிவங்களை அறிமுகம் செய்தும் உள்ளார். அவற்றை பார்ப்போம். 

வீட்டு வாசலில் நின்று பீட்டாவை எதிர்க்கும் போராட்டம் 

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது, ஜனவரி 11ஆம் தேதி திடீரென்று செய்தியாளர்களை அழைத்த சிம்பு, ஒரு புது விதமான போராட்டத்துக்கு தமிழகத்தை அழைத்தார். "தமிழன் அனாதையில்லைனு காட்டலாம் வாங்கடா... நாளைக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு ஒவ்வொருத்தரும் உங்க வீட்டுக்கு வெளியில வந்து பத்து நிமிஷம் நில்லுங்க. தமிழன் என்ற உணர்வு இருக்கவன் போராடுங்க. பைக்ல போறவன் பைக்கை விட்டு இறங்கி நில்லு, கார்ல போறவன் காரை விட்டு இறங்கி பத்து நிமிஷம் நில்லு. பூகம்பம் வந்தா நிப்பீங்கள்ல? அது மாதிரி ஜல்லிக்கட்டுக்காக நில்லுங்க. உங்க வீட்டுல, ஆபீஸ்ல வாசல்ல நில்லுங்க. எவனும் நம்ம மேல கை வைக்க முடியாது. எங்களுக்கு ஒற்றுமை இருக்கு, உணர்வு இருக்குனு காட்டலாம் வாங்க" என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை விடுக்கும்போதே தன்னிடம் பத்து வருடத்துக்கான அமெரிக்க விசா இருக்கிறது என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு சென்று செட்டில் ஆக முடியுமென்றும் கூறி, "எனக்கு பிரச்சனையில்ல, உங்களுக்குதான் பிரச்சனை" என்று கொதித்துரைத்தார். இந்த அழைப்பை ஏற்று சிம்பு வீட்டு வாசலில் சிம்பு ரசிகர்கள் கூடினர். வேறு எங்கும் இந்தப் போராட்டம் நடந்ததா என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கும் கிடைக்கவில்லை. இந்தப் போராட்டத்தில் சிம்புவுடன் இயக்குனர் ராம் கலந்து கொண்டது பலரையும் குழப்பியது. மறுநாள் சிம்பு நடத்திய இந்தப் போராட்டத்திற்கு பின்பு, சீமான் இவரை சந்தித்து வாழ்த்தினார்.
 

simbu home protest


தேசியக் கொடியின் கீழ் நின்றால் போலீஸ் அடிக்காது 
 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அடுத்த கட்டமாக ஒரு ஐடியாவை வெளியிட்டார். மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசோ ராணுவமோ தாக்கக் கூடுமென்றும், அப்படி ராணுவம் வந்தாலும் அவர்கள் தாக்குவதைத் தடுக்க செம்ம மேட்டர் வைத்திருப்பதாகவும் கூறினார். விஷயத்தை சொல்வதற்கு முன்பு ஒரு செம்ம கைதட்டல் போடுங்கள் என்றும் கூறினார். சுற்றி இருந்தவர்கள் கொந்தளித்துக் கைதட்ட, "ஊரில் எங்கெல்லாம் தேசியக் கொடியிருக்கோ அதெல்லாம் இப்போ மெரினாவுக்கு போய் சேரவேண்டும். மெரினாவில் போராடுபவர்கள் அங்கு தேசிய கொடியை ஏற்றி அதன் கீழ் நின்று போராடினால் இராணுவமே வந்தாலும் நம்மை அடிக்க முடியாது. அப்படி தேசியக் கொடி வச்சு போராடுனதுக்கு அப்புறமும் அடிக்கணும்னா, அடிச்சுப் பாருங்கடா. தூங்கிட்டு இருந்தாலும் அடிச்சு எழுப்புங்கடா. உடனே அங்க போராடுறவங்களுக்கு நேஷனல் ஃபிளாக் உடனே போகணும்" என்று ஆவேசமாகக் கூற, கூடிய கூட்டம் கொந்தளித்தது. இந்த ஐடியாவைக் கொடுத்த மதன் என்பவரையும் அழைத்து அனைவருக்கும் அறிமுகம் செய்தார். தேசியக் கொடியின் கீழ் நின்று போராட்டம் செய்தால் போலீஸ் அடிக்காது என்று சிம்பு சொன்னதைக் கேட்டுக் கிறங்கி நின்றனர் இளைஞர்கள்.

ஐ.பி.எல்க்கு கருப்பு பேட்ச் 

சில காலம் இடைவெளி விட்டு இப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் கேட்டும் ஸ்டெர்லைட்டை எதிர்த்தும் தமிழகம் போராடி வரும் வேளையில் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார் சிம்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை அழைத்த சிம்பு மீண்டும் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். "ஐ.பி.எல்க்கு செல்பவர்கள் கருப்பு பட்டை அணிந்து செல்ல வேண்டும் என்று பலர் சொல்கின்றனர். அதை சிலர் கிண்டல் செய்கின்றனர். யார் சொன்னா என்னடா, தமிழனுக்காகத் தான சொல்றான்? நான் தியானம் பண்ணும் போது அப்துல் கலாம் என் நினைவில் வந்து சொன்னாரு. இப்போ உங்கள்ட்ட சொல்றேன். அப்பிடி செய்யுங்க. அப்புறம் பாருங்க, என்ன நடக்குதுன்னு.." என்று கூறியதைக் கேட்டவர்கள் லெமன் சோடா குடித்து தெளியும் முன்பே மீண்டும் ஒரு புதிய போராட்ட யுக்தியை அறிமுகம் செய்தார். 

 

simbu advice


இந்த முறை தமிழக மக்களை விடுத்து கர்நாடக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். "காவிரி தர முடியாதென்று அரசியல்வாதிகள் சொல்வதை நாங்கள் ஒத்துக்கொள்ள முடியாது. அங்கிருக்கும் தாய்மார்கள் சொல்ல வேண்டும்" என்றவர், கர்நாடக தாய்மார்களை நாளை (11-04-2018) அன்று ஒவ்வொரு கன்னட தாய்மாரும் ஒரு டம்ப்ளர் தண்ணீரை அங்கிருக்கும் தமிழருக்குக் கொடுத்து, அதை வீடியோ எடுத்து தனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். "அப்படி அனுப்பவில்லையெனில், தமிழ்நாட்டு மக்களுக்கு தண்ணீர் தர  கன்னட மக்களுக்கு விருப்பமில்லையென்று நாங்கள் எடுத்துக்கொள்வோம். அதன் பின்னும் நாங்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம். அறவழியில் தான் கேட்போம்" என்று கூற, நிருபர்கள் சற்று தடுமாற்றம் அடைந்தனர். நண்டு கதை ஒன்றையும் கூறினார். "ஒரு நண்டு என்னைக் கடித்தால், நான் அதை கொல்ல மாட்டேன். அதை தட்டி விடுவேன். 'ஏன்டா உன்னை கடிக்கிற நண்டை அடிக்க மாட்டேன்ற?' என்று நீங்கள் கேட்கலாம். கடிக்கிறது நண்டோட வேலை. காப்பாத்துறது தான் தமிழனோட வேலை. நான் தமிழன்டா" என்று தமிழனுக்கு புது வரையறை கூறி கோஷமிட, அவரது ரசிகர்களும் குதூகலித்தனர்.
 

சிம்புவின் தமிழுணர்வும் பொது அக்கறையும் மிகவும் மதிக்கப்பட வேண்டியது. ஆனால், அவ்வப்போது அவர் அழைக்கும் போராட்ட வடிவங்களும், கொடுக்கும் பேட்டிகளும் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. போராட்ட வாழ்வு வாழும் தமிழர்களுக்கு இந்த எண்டர்டைன்மெண்ட் தேவைதான் என்று இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சரி. நாம் சீரியஸாக கருதுவதால் தான் நாம் இதை பேசுகிறோம். அறிவித்த இந்தப் போராட்டங்களையெல்லாம் நடத்த அவர் எதுவும் முயற்சியெடுத்தாரா, பின் தொடர்ந்தாரா என்பதெல்லாம் சிம்புவுக்கும் அங்கு கொந்தளித்த அவரது ரசிகர்களுக்கும் தான் தெரியும்.                       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்