ADVERTISEMENT

துரை வையாபுரி டூ துரை வைகோ; பிசினஸ்மேன் பொலிடிசியன் ஆன கதை!

07:06 PM Mar 26, 2024 | dassA

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்து விட்டன. அந்த வகையில் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஒரு மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக கூட்டணியில் பெற்றநிலையில், இம்முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே கிடைத்தது. இந்தமுறை காங்கிரஸ் வசமிருந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி, மதிமுகவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழுமனதுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொகுதி ஒப்பந்தத்தில் போட்டியிட கையெழுத்திட்டார்.

ADVERTISEMENT

இதையடுத்து, யார் திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடுவார்கள்? என்ற கேள்வி எழுந்த நிலையில், அக்கட்சியினர் வேட்பாளராக துரை வைகோ ஒருமனதாக களமிறங்கியுள்ளார். துரை வையாபுரியாக இருந்தவர், வாரிசு அரசியலை விரும்பாத வைகோவின் கட்சியிலே வேட்பாளராக வளர, பல தடைகளை கடந்து இந்த உச்சத்தை எட்டியுள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சர்கள். வைகோ - ரோணுகாதேவி தம்பதியின் மகன் துரை வைகோ. கல்லூரி படிப்பு வரை துரை வையாபுரிக்கு அரசியலில் ஈர்ப்பு கிடையாது. கோவையில் கல்லூரி முடித்த பிறகும், அவர் தந்தையின் அரசியல் பாதையின் மீது அதிகம் ஈடுபாடு வாலிப பருவத்தில் இல்லாத காரணத்தால், தனியாக பிசினஸ் செய்து வந்தார். அதன்பிறகு, அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட, ஒருபுறம் மதிமுக கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது, மாநில நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பது என கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், கட்சி நிர்வாகிகளை தவிர பொதுவில் வெளிக்காட்டியது இல்லை.

ADVERTISEMENT

பொடா வழக்கில் வைகோ கைதான சமயத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை கட்சி பணிகளை கவனித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு, கட்சித் தொடங்கிய வைகோ, தொண்டர்கள் மத்தியில் என் குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள் என பேசிவந்தார். இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சியின் முக்கிய பொறுப்பிற்கு வராமலே, கட்சிக்காக பல பணிகளை செய்து வரும் துரை வையாபுரி கட்சியில் இணைய வேண்டும் என்றும், கட்சிப் பணியிலும் களப் பணியிலும் ஈடுபடுவரை தடுக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை பரிசீலனை செய்த வைகோ தொண்டர்களின் விருப்பத்தை உணராமல், கட்சிக்காக பணியாற்றும் ஒருவரை தடுக்கக் கூடாது என முடிவெடுத்தார். ஆனால், எளிதாக தனது மகனிற்கு பதவி கொடுக்க வைகோ விரும்பவில்லை.

மதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 104 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் வாய்ப்பு வழங்க கூடாது என்றனர். இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார். மதிமுக கூட்டத்தில், இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் தியாக தழும்புகளை ஏற்று மிசா, தடா போன்ற அடக்குமுறை சட்டங்களை சந்தித்து குடும்ப சுகபோகங்களை மறந்து தமிழினம், தமிழ் மொழிக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் திராவிட இயக்கத்து போர்வாள் வைகோ அவர்களின் புதல்வர் துரை வைகோ அவர்களை உரிய இடத்தில் வைத்து மதிமுகவில் பணியாற்றிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் கட்சியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பதவி வந்தபிறகும் விடாமல் துரை வையாபுரி முழுவீச்சில் கட்சிப்பணியிலும் களப்பணியிலும் ஈடுபட்டார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், துக்க காரியங்கள் என அனைத்திலும் அவர் பங்கேற்றார். இதனிடையே குறுங்காடுகள் அமைப்பது போன்ற பணிகளையும் தேர்ந்தெடுத்து சூழலியல் ஆர்வலராகவும் துரை வையாபுரி வலம் வந்தார். இத்தனை பணிகளை செய்துதான் துரை வையாபுரி அரசியலில் துரை வைகோவாக மாறியதாக மதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான், துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மகன் போட்டியிடுவது பற்றிய பேசிய வைகோ, ''தொண்டர்களை வசீகரிக்கக்கூடிய திறமை துரை வைகோவிற்கு இருக்கிறது. மனிதாபிமானம் இருக்கிறது. பொதுவாழ்வில் வெற்றிபெற தேவையான அனைத்து குணமும் அவருக்கு இருக்கிறது. எனவே துரை வைகோ வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது..'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்களில் செல்வராஜ், அடைக்கலராஜ், குமார் மூவர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட வைகோவின் மகன் துரை வைகோவும் வெற்றி பெறுவார் என மதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திமுகவைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் மதிமுகவின் எல்.கணேசன் வெற்றிபெற்றிருப்பதால் அதை காரணமாக கூறி திருச்சி தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மதிமுக கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அரசியலில் முதன் முறையாக காலடி எடுத்து வைக்கும் துரை வைகோ பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து பணிகளையும் அவரது கட்சியினர் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், மதிமுகவினர் தேர்தல் பணிகளில் அதிரடி காட்டத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT