Skip to main content

தூத்துக்குடியில் மீண்டும் வேதா(ந்தா)ளம்...!! கதை சொல்லும் அரசுகள்...!!

Published on 10/03/2019 | Edited on 10/03/2019


 

    தூத்துக்குடி என்றாலே  துயரமும், துடிப்புமிக்க ஏதோ ஒரு செயலும் நிகழ்ந்து பரபரப்பிற்கு உள்ளாகும் பின்பு மறைந்தோடும். ஆனால்  கடந்த ஆண்டு மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலை எதிராக நடைபெற்ற  தொடர் போராட்டங்களும்,  துப்பாக்கி சூடு சம்பவத்தில்  14 பேரின் இறப்பின் துயரங்களும் பல மாதங்களாகியும் இன்றளவும் மறக்காமல் நீர் பூத்த நெருப்பாக அவ்வப்போது வெளிவந்த வண்ணமே உள்ளது தூத்துக்குடியில்.

 

   சிபிஐ விசாரணை, ஒரு நபர் விசாரணை கமிஷன் என துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு நியாயமான அறிக்கை கூட வராத நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அரசுமும் அதிகாரிகளும் வேகம் காட்டுவதை பொது மக்கள் பார்க்கும் போது தான் அவர்களுக்குள்ளான மனகுமுறல் அதிகரிக்கின்றன.

sterlite lite issues

    உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. அப்படியொரு அரசாணை தமிழக அரசு போட்டுள்ளது என கூறிய தமிழக  அமைச்சரின் பேட்டி அறிக்கைக்கு இடையே கடந்த டிசம்பர் 15 அன்று பசுமை தீர்ப்பாய உத்தரவில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படலாம் என சில கோரிக்கைகளை நிறைவேற்றும் நிபந்தனையுடன் தீர்ப்பினை வெளியிட்டது. அதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டதற்கு  தடையாணை பெற்றதும், அதனை உச்சநீதிமன்றம் தகர்த்தெறிந்த நிலையில் தான் தமிழக அரசு மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள், நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு, நோய் தொற்று போன்ற  பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டாமல் உப்பாற்று ஓடையில் மண்ணை கொட்டியுள்ளது மிகப்பெரிய தவறென்றும், தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்  ஆலை வேண்டாம் என்கிறார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பசுமை தீர்ப்பாயம் தலையிட முடியாது போன்ற மென்மையான ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் விதமாகவே அரசு தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக அளித்தது.

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எவ்வித நிகழ்வும் போராட்டங்களும் மீண்டும்  நடந்துவிடக்கூடாது என்கிற ஒற்றை பணியே தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பணி என்பதை போல் தூத்துக்குடியின் ஒவ்வொரு காவல் அதிகாரிகளும் இயங்கி வருகின்றனர். அதற்கு சில நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள், " ஸ்டெர்லைட் ஆலை சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருவதோடு ஸ்டெர்லைட் தொடர்பாக ஏதேனும் நீதிமன்ற விசாரணை தினம் வந்து விட்டால் வெளிமாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு  காவல்நிலைய கண்காணிப்பில் 35 காவலர்கள் என பல்லாயிரக்கணக்கான போலிசாரை தூத்துக்குடியில் இறக்கி பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாத சூழலை ஏற்படுத்துகின்றனர் காவல் துறையினர்.  இவை ஒருபுறமிருக்க பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதை போல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எவ்வித போராட்டங்களும் தூத்துக்குடி நகர பகுதிகளில் நடக்க அனுமதிக்க கூடாது என்பதற்கு ஆலை நிர்வாகம் மூலமாகவே நீதிமன்ற உத்தரவு நகலினை பெற்று விட்டு " நாங்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம் இருப்பினும் நீங்கள் நீதிமன்றம் சென்று போராட்ட அனுமதியை பெற்றுக்கொள்ளுங்ஙள் என கூறுவதோடு போராட்ட அனுமதி தொடர்பான மனுக்களை பெற மறுப்பதும்,தூத்துக்குடியில் நடைபெற உள்ள போராட்ட அனுமதி மனுவினை திருநெல்வேலி துணை காவல் துறை தலைவரிடம் அளியுங்கள் என கூறுவது வேடிக்கையான தூத்துக்குடி காவல்துறையினர் செயல்பாடு.

 

   காவல் துறையினர்  மேல் உள்ள துப்பாக்கி சூடு களங்கத்தை துடைக்க பல்வேறு அடக்குமுறைகள், மிரட்டல்கள், விசாரணைகள்,பொய் வழக்குகள்,சிறையில் அடைப்பு  என தங்களின் ஸ்டெர்லைட் விசுவாச பணியை சந்தனம் என நினைத்து  மீண்டும் மீண்டும் தங்கள் மேல் சாக்கடைகளை அள்ளி பூசிக் கொள்ளது காவல்துறையினருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் போலிசாரின் ஒவ்வொரு அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர் பொது மக்கள்.சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னுயிரை தியாகம் செய்ய 14 உயிர்களுக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை,அது தொடர்பாக ஒரு துண்டறிக்கை விநியோகிக்க முடியவில்லை நாமென்ன அடிமை நாடுகளில் வாழ்கிறோமா என்கிற கேள்வியை காவல் துறையினர் எழ செய்வதாக தூத்துக்குடியின் மீனவ மக்களும் பண்டாரம்பட்டி போன்ற கிராம மக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

 

 

   ஸ்டெர்லைட் ஆலை மூலம் தங்களுக்கு பல்வேறு உடற்கூறு நோய்கள் ஏற்படுகிறது என்ற நிலை மக்களிடையே  மாறாதிருக்கிறது.  அதற்காகவும் பின் வரும் இளம் தலைமுறையினரின் வாழ்வினை பாதுகாக்கவும்  எந்த வித உயிர் தியாக போராட்டங்களிலும் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்பது நகர பகுதிகளில் மட்டுமல்ல ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள  கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணவோட்டங்களும் இதுவாகவே உள்ளது.  இவ்வாறான மக்களின் மனநிலையை மாற்ற தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி  ரகசிய கூட்டம் நடத்தி மீன்வளத்துறை, போக்குவரத்து துறை, வருவாய் துறை, காவல்துறையினர் சேர்ந்து  பொது மக்களின் பிரச்சினைகளை தாமே முன்வந்து கண்டறிந்து அதனை எவ்வித நிபந்தனையின்றி மக்களுக்கான வசதிதனை செய்துக் கொடுக்க வேண்டும் என்கிற முடிவில் தான் மீனவர்களுக்கு சுமார் மூவாயிரம் படகிற்கு ஓட்டுநர்/பணி பயிற்சி சான்றுகளும், வியாபாரிகள் சங்கத்தினை அழைத்து உங்களுக்கான வசதிகளையும், குறைபாடுகளையும் தீர்ப்போன் என உறுதியளித்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சுத்தமான குடிநீர் வசதியினை எற்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு உடனடி வேலைகள் நடந்தேறியது.

 

  ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான சமூக செயற்பாட்டாளர் அக்ரி பரமசிவனோ, " "பூட்டிய ஸ்டெர்லைட்  கதவு தானே திறக்கும் என மே மாத இறுதியிலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காகவே எடப்பாடி போட்ட அரசாணை என டிசம்பர் மாதங்களிலும் தனது முன்னோட்ட நக்கீரன் செய்தியை போலவே தற்போதைய  தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான நீதிமன்ற செயல்பாடுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.  மீண்டும் அதனை வெளிப்படுத்தும் விதமாக பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15 அன்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் எவ்வித முன்னோட்ட கருத்தினை கேட்காமல் மூடியது தவறென ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்தில்  திறக்கலாம் என கூறி சில சூழலியல் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தூத்துக்குடி மக்களிடையே மட்டுமல்லாது தமிழக மக்களிடையேயும் அதனை சார்ந்த ஒற்றை கருத்தே வெளிப்படுகிறது.  ஆலையை திறக்கவே முடியாது அது தமிழக அரசின் கொள்கை முடிவென கூறியவர்கள் தற்போது மௌனம் காத்து வருகின்றனர். அவ்வாறான மௌனத்திற்கு விடை சொல்லும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது. வேதாளமென மீண்டும் ஏறிய ஸ்டெர்லைட் ஆலையையும் விக்கிரமாதித்தன் கூறும் கதை போல மத்திய மாநில அரசின் செயல்படுகளுக்கு இடையே தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்ட களங்களை வகுத்து வருவதை உளவுத்துறையினர் கூட கண்டறியாத நிலை.இதுவரை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தது அதனாலே எங்களின் போராட்ட வெளிப்பாட்டை காட்டவில்லை 14 உயிர்களை வேதாந்தா நிறுவனத்திற்கு காவு கொடுத்த பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் திறக்கப்படுமேயானால் அதன் விளைவுகளை மிக பெரிய அளவில் சந்திக்க நேரிடும் என்பதை மட்டும் மனகுமுறலாக கொப்பளிக்கின்றனர் தூத்துக்குடி மக்கள்." என்கிறார் அவர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” - வைகோ நெகிழ்ச்சி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
"Justice has been received in the Supreme Court" - Vaiko

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

"Justice has been received in the Supreme Court" - Vaiko

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.