Skip to main content

பா.ஜ.க.வை பதறவைக்கும் மாநிலங்கள்! 

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி முடிவதற்கு முன்பே, மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. மாநில அரசின் மீதான கோபங்களுடன், மத்திய அரசின் மீதான ஏமாற்றமும் அதற்குக் காரணமென்பதைச் சொல்லத்தான் வேண்டும். சிவ்ராஜ் சிங்கின் முதல்வர் நாற்காலியில் தற்போது கமல்நாத் அமர்ந்திருக் கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற, எதிர்பாராதது ஏதாவது நடந்தாக வேண்டும்.
 

bjp


ஆனால் கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலில் நிலைமை இப்படியிருக்கவில்லை. ஹெவி வெயிட் சாம்பியன், முதல்முறை யாய் ரிங்குக்குள் வரும் ஒருவனை ஒரே குத்தில் சாய்ப்பதுபோல், மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 26 இடங்களில் வெற்றிவாகை சூடியது பா.ஜ. 3 இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி. அன்றைக்கு மெலிந்து… தளர்வாய் காட்சியளித்த காங்கிரஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சரிக்குச் சரி மல்லுக்கட்டிய துடன் 114 இடங்களைப் பிடித்து சுயேட்சைகளை யும் இணைத்துக்கொண்டு ஆட்சியமைத்திருக்கிறது. இதில் நகைமுரண் என்னவெனில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவிகிதம் 40.9. ஆனால் 41 சதவிகிதம் வாக்கு வாங்கிய பா.ஜ.க. 109 இடங்களையே வென்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு, தங்களது ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை காங்கிரஸ் கிடப்பில் போட்டதாகக்கூறி, ஆட்சியர் அலுவலகங்களை பா.ஜ.க.வினர் முற்றுகை செய்ய, பதிலுக்கு காங்கிரஸ் மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் இழுத்தடிப்பதாக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.
 

madhyapradesh political

கடந்த 14 வருடங்களில் தோராயமாக 18,000 வேலைகள் மட்டுமே மத்தியபிரதேச அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வேலை யில்லாத இளைஞர்கள் 24 லட்சத்துக்கும் அதிகமான பேர் மாநிலத்தில் இருக்கிறார்கள். மாண்டசூரில் போராட்டம் நடத்திய விவ சாயிகளை, பா.ஜ.க. அரசின் உத்தரவுப்படி கொடு மையாக போலீஸ் ஒடுக்க 6 பேர் இறந்து போனார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் 21 சதவிகிதமாக அதிகரித் திருக்கிறது. வழக்கமாக பி.ஜே.பி.க்கு ஓட்டுபோடு பவர்களிடையேகூட அதிருப்தி அதிகரித்திருக் கிறது. சாவர்னா இனத்தினர் தனிக்கட்சி ஆரம்பித்திருக் கின்றனர். இவர்கள் வழக்க மாக பா.ஜ.க.வுக்கு முத்திரை குத்துபவர்கள்.
 

rajastan political

காற்று திசைமாறி வீசுவதை பா.ஜ.க.வும் உணர்ந்திருக்கிறது. இருந் தாலும் பி.எஸ்.பி.- எஸ்.பி. கட்சிக் கூட்டணி உத்தரப் பிரதேசத்தைத் தாண்டி மத்தியப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருக் கிறது. கடந்த தேர்தலில் 6.5 சதவிகிதம் வாக்குகளை இந்தக் கட்சி பிரித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலைப்போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும், இரு கட்சிகளுக்குமான வாக்குவித்தியாசம் நூலிழை யில் அமையுமெனில் அது காங்கிரஸுக்குதான் பாதிப்பாக அமையும். தவிரவும், பாகிஸ்தான்மீதான விமானத் தாக்குதல் பிரதாபங்களை, வாக்காக மாற்றவும் பா.ஜ. முனையும்.  மத்தியப்பிரதேசத்தில் வெற்றி என்பது மதில்மேல் பூனையாக அமர்ந்து இருதரப்பையும் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது.
 

bsp party

ராஜஸ்தான் நிலவரம் மத்தியப் பிரதேசத்தி லிருந்து வெகுவாக வித்தியாசமில்லை. கடைசியாக நடந்த சட்டமன்றத்துக்கான தேர்தலில் பா.ஜ.க. பறிகொடுத்த 3 மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தி யாசமான அரை சதவிகிதத்துக்கு 27 இடங்களை பா.ஜ.க. இழக்கநேர்ந்தது துயரம்தான். வசுந்தரா வின் நாற்காலியில் இப்போது அசோக் கெலாட். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 20 இடங்களை வென்ற காங்கிரஸ் 2014-ல் வெறும்கையோடு நிற்க, மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டது பா.ஜ.க.. 1996-க்குப் பின்பு வந்த தேர்தல்களில் ஏதோ ஒரு கட்சிக்குத்தான் பொதுமக்கள் மெஜா ரிட்டி அளித்துவந்திருக்கின்றனர். அதேபோக்கு தொடருமெனில், ராஜஸ்தானில் இம்முறை காங்கிரஸுக்கு பெருவாரியான தொகுதிகளில் வெற்றிகிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ.(எம்.எல்.), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் போன்ற கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.வை எதிர்த்தன. அதற்குரிய பலனும் இருந்தது. ஆனால் நாடாளு மன்றத் தேர்தலிலோ 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களையே நிறுத்தப்போவதாக பைலட் அறிவித்திருப்பதால், இம்முறை கூட்டணி இல்லையென்றே தோன்றுகிறது.
 

பகுஜன் சமாஜ், ஆர்.எல்.பி., பாரதிய ட்ரைபல் பார்ட்டி மூன்றும் சேர்ந்து கூட்டணி அமைத்து செல்வாக்குள்ள தொகுதிகளில் போட்டியிடலா மெனத் தெரிகிறது. அப்படி கூட்டணி அமைந்தால் அதனால் காங்கிரஸுக்குத்தான் இழப்பு. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த கன்ஷியாம் திவாரி, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சந்திரா மீனா போன்ற பெருந்தலைகள் பா.ஜ.க.வை விட்டு விலகியது அக்கட்சிக்கு இழப்பாக அமையும். சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்டிருக் கும் நம்பிக்கை இழப்பைச் சரிக்கட்ட, சாத்தியமான கூட்டணி எதையும் அமைக்கவிருக்கிறதா என்பதும் இதுவரை தெளிவாகவில்லை. கட்சிக்குள்ளேயே நடைபெற்ற உட்கட்சி மோதல்கள் ராஜஸ்தானில் பா.ஜ.க.வை பாதித்திருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக் கிடைக்காமல் கட்சியிலிருந்து வெளியேறி கணிசமான வாக்குகளைப் பிரித்தவர்களை இனம்கண்டு, அவர்களை சமாதானப்படுத்தி கட்சியில் சேர்க்கும் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது பா.ஜ.க. என்னதான் சூழல் பதட்டத்தைத் தந்தாலும், வெற்றியை எளிதில் விட்டுத் தந்துவிடாது பா.ஜ.க. நல்லநாளைத் தருவதற்கு பா.ஜ.க.வைவிட தாங்கள்தான் தகுதியானவர்கள் என்பதை மக்கள் மனதில் விதைப்பதில் வகுக்கும் வியூகத்திலிருக்கிறது காங்கிரஸ் வெற்றி!


-க.சுப்பிரமணியன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்