ADVERTISEMENT

ஊழல் இருட்டில் வெளிச்சம் தேடும் தமிழகம்

02:07 PM Oct 12, 2017 | Anonymous (not verified)



வாக்காளர்களான மக்கள் ஒன்றும் செய்ய முடியாதபடி, தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் பிணைக் கைதிகளாகத் தவிக்கிறார்கள். அதிகாரிகள் உண்டு, மந்திரிகள் உண்டு, இந்த இருதரப்பும் இருக்கும்போது லஞ்சமும் உண்டு என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அடையாளத்திற்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது என்பதை நிரூபிப்பது லஞ்சம் மட்டுமே. அரசு விழாக்களும் மந்திரிமார்களின் விழாக்களே, மக்களின் விழாக்கள் அல்ல. ஜெயலலிதா காலத்திலும் இதுதான் நிலைமை. இதே நிலைமை தொடர வேண்டும் என்பதற்காகத்தான் அ.இ.அ.தி.மு.க.வினர் "அம்மா கட்சி, அம்மா ஆட்சி' என்று கரடியாகக் கத்துகிறார்கள். "மக்களே உங்களுக்கு விடிவுகாலம் இல்லை...' என்பதையே இந்தக் கூச்சல், கூப்பாடுகள் உணர்த்துகின்றன.

இதற்கிடையே ம.நடராஜனின் மருத்துவம், சசிகலாவின் பரோல் என்கிற காட்சிகள். இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்கிற வழக்கில் யார் வென்றாலும், அது கொள்ளையர்களைப் புனிதர்களாக்கி விடப் போவதில்லை.

டிசம்பர் மாதம் வந்ததும் ஜெயலலிதாவுக்கு சுவரொட்டிகள், பேனர்கள், அஞ்சலி பொதுக்கூட்டங்கள் என்று மாநிலத்தில் மேடை அலங்காரங்களும், கூச்சல் கூப்பாடுகளும் அதிகரிக்கும். அதேநேரம் சசிகலா, தினகரனுக்கு எதிரான விமர்சனங்களும் தொடரும். இந்த நிலையில் சாதாரண வாக்காளன் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.

ஜெயலலிதா ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் ஆட்சி செய்தாரா? அப்படியானால் சொத்துக்குவிப்பு வழக்கு இருபதாண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டும் சிறைத்தண்டனை பெற்றது எப்படி? சரி... ஜெயலலிதா உத்தமி, சசிகலா குடும்பத்தினர் சகவாசத்தால் கெட்டுப்போனார் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. உடன் இருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நபர் மாநிலத்தை நன்றாக நிர்வாகம் செய்தார் என்று எப்படிச் சொல்வது?

ஒரே இடத்தில் வசித்துக்கொண்டு சதித்திட்டம் தீட்டியவர்கள் என்ற நீதிமன்ற வாசகத்திற்குப் பாமர மனிதன் எடுத்துக்கொள்ளும் பொருள் கூட்டுக்களவாணிகள். அதுதான் உண்மை. அப்படியிருக்க... இன்று "சசிகலாவையும், மன்னார்குடி குடும்பத்தையும் வெளியேற்றுவோம்' என்று சொல்லும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியில் உள்ளவர்கள் "தங்கள் ஆட்சியில் தாங்கள் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை' என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா? மந்திரிமார்களுக்கு அவர்கள் பெயரில் உள்ள சொத்துமதிப்பு எவ்வளவு? பினாமி சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு? என்று உடனிருப்பவர்களுக்குத் தெரியும். அன்றும் சுரண்டினார்கள்... இன்றும் கூட சுரண்டுகிறார்கள்... இனியும் சுரண்டுவார்கள்.

இவர்களில் யாராவது ஒருவர் பொதுஅரங்கத்துக்கு வந்து, "மக்களே, என் மனசாட்சி உறுத்துகிறது. அரசியலில் தவறான முறையில், நான் இவ்வளவு சம்பாதித்துவிட்டேன். இப்போதே அத்தனை சொத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு எழுதிவைக்கிறேன்' என்றோ, "இன்ன மந்திரிகள் இன்னென்ன வழிகளில் இவ்வளவு சம்பாதித்தார்கள்' என்றோ ஒப்புக்கொள்ளும் அறமும், மறமும் இவர்களில் யாருக்காவது உண்டா? அப்படி ஒருவர் நிஜமாகவே மனம் மாறினால் அவரை ஆதரிக்கலாம். அப்படி ஒருவருக்குக்கூட மனமாற்றம் நடக்கும் என்று தோன்றவில்லை. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தரகர்களாக இருந்த மந்திரிகளே இன்று தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும், இன்னும் சேர்த்துக்கொள்வதற்காகவும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து, சசிகலாவைத் தூற்றுகின்றனர். இருவருமே தூற்றப்படவேண்டியவர்கள்தான் என்பதை சரித்திரம் பதிவு செய்துவிட்டது.

எத்தனை அணிகளாகப் பிரிந்தால் என்ன, இவர்கள் செய்த காரியங்களெல்லாம் கறுப்பு. சேர்த்த பணமெல்லாம் கறுப்பு. இதில் ஒருவர் மற்றவரை யோக்கியமில்லாதவர் என்று சொல்வதைக் கேட்டால் சிரிப்பு வருகிறது. வறட்டுச் சிரிப்பு, சோகச்சிரிப்பு, விரக்தியின் சிரிப்பு, இயலாமையின் சிரிப்பு.

Post Calling kettle back என்று ஆங்கிலப் பொன்மொழி உண்டு. கரியேறிய பானை கரியேறிய கெட்டிலை குறை சொன்னதாம். அதுதான் இன்றைய தமிழக அரசியல். இந்தக் கூத்தில் புதிய கவர்னர் வந்துவிட்டதால், தேர்தல் வரும் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. அப்படி வந்தால் இந்தக் கறுப்புகளுக்கிடையே வெளிச்சத்தை தேடுவது எப்படி? அதுவும் வெள்ளித்திரையில் இருந்துதான் வரவேண்டுமா? ஆனால் அங்கும் கறுப்பு இல்லை என்று சொல்லமுடியாது.

வெளிச்சம் வந்தால் தமிழன் விழிப்பான் என்ற நிலை மாறி, தமிழன் விழித்தால் வெளிச்சம் வரும் என்கிற நிலையை உருவாக்குவது எப்போது?

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT