Advertisment

ஸ்டாலின் vs மோடி! கேள்விகளா ? புகார்களா ? - தேர்தல் களத்தில் எடுபடுவது எது?

Stalin VS Modi is a hot parliament election field

Advertisment

தேர்தல் சுற்றுப்பயணத்தை முதன் முதலாகத் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’தமிழ்நாடே வெள்ளத்தில் தத்தளித்தபோது வராத பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய்கூட வெள்ள நிவாரணம் தராத மோடி இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதற்கு தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?’’ என்கிற தாக்குதலை அவர் தொடங்கிய போதே தமிழகத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது.

அந்த டெம்போவை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு 29 பைசாதான் நிதியாகத் திருப்பித் தருகிறது’’ என்று குற்றம் சாட்டி பாஜகவை அதிர்ச்சியடைய வைத்தார்.இவைகளுக்கு நேரடியாக எந்த பதிலையும் சொல்ல பிரதமர் மோடியால் முடியவில்லை. மாறாக, கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் திருப்பித் தந்ததாக தனது கோவைப் பிரசாரக் கூட்டத்தில் பொத்தாம் பொதுவாக ஒரு தகவலைகூறினார். எந்த திட்டத்துக்கு, எப்போது, எவ்வளவு நிதி தரப்பட்டது என்பதற்கு விளக்கமாக ஏதும் கூறவில்லை அவர்.

அதேபோல, வெள்ள நிவாரணம் வரவில்லை என்ற திமுக அரசின் குறிப்பான குற்றச்சாட்டுக்கோ, ஒரு ரூபாய் தந்தால் 29 பைசா தான் தமிழ் நாட்டுக்குத் திரும்பி வருகிறது என்கிற குறிப்பான குற்றச்சாட்டுக்கோ, மோடியிடம் இருந்து பாயிண்டாக ஒரு பதிலும் இல்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின், ’புல்வாமா தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்கு எப்படிப் பயன்படுத்தினார்கள் என்றும், மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை, அவருடன் இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்றும் விளக்கமாக ஒரு பேட்டி கொடுத்தார் அந்த மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக். உடனே அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு. எவ்வளவு மலிவான அரசியல்’ என்று தனது பரப்புரையில் விளக்கமாகப் பேசினார் முதல்வர்.

Advertisment

“பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி, இப்போது தொடர்ந்து பேசும் பிரதமர், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது, வாய் திறக்கவில்லையே ஏன்?

குஜராத்தில் பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா? மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவுனமாக ஏன் வேடிக்கை பார்த்தார்? ஒரு தடவையாவது மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாரா? அதுமட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தையைக் கோயிலில் வைத்து வன்புணர்வு செய்தார்களே? அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? இதற்குக் கண்டனம் எழுந்த உடனே, அவர்கள் என்ன கூறினார்கள்? கட்சித் தலைமைதான் எங்களை அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா?

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் ஞாபகம் இருக்கிறதா? வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் வன்கொடுமை செய்தார். இதைப் புகாராக அந்தப் பெண் சொல்லக் கூடாது என்று, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து நாள் கணக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.

காப்பாற்றச் சென்ற தந்தையை போலி வழக்கு போட்டு சிறையிலேயே வைத்து அநியாயமாகக் கொன்றார்களே? நியாயம் கிடைக்காத விரக்தியில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி வீட்டுக்கு முன்பு, அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்! அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர்கள் அத்தை இறந்தார்கள்! இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது யார்? பிரதமராக இருக்கக் கூடிய மோடி தான்!

ஹாத்ரஸ் மறந்து போனதா? அப்பாவி பட்டியலின பெண் ஒருவர், வன்கொடுமை செய்யப்பட்டு இறந்தாரே! அவரின் உடலை பெற்றோர் சம்மதம் இல்லாமல், பெட்ரோல் ஊற்றிப் போலீசே எரித்ததே? பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட சகோதரர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுமதி மறுத்தார்களே? இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பா.ஜ.க. ஆட்சி! பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க.வை சேர்ந்த முதலமைச்சர் யோகி பேசினார். இதையெல்லாம் மோடி தடுத்தாரா?” என்று துல்லியமான தகவல்களைக் கொண்டு பாஜக மீது தாக்குதல் தொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Stalin VS Modi is a hot parliament election field

இதில் ஒன்றுகூட கற்பனைக் குற்றச்சாட்டு இல்லை. பதிவான வழக்குகள், வெளியான ஊடகச் செய்திகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் எழுப்பிய கேள்விகள்.ஆனால், இவைகளுக்குப் பதில் சொல்லாத பிரதமர் மோடி, திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

“ஊழலுக்கு காப்புரிமையை திமுக-தான் வைத்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமாக இருக்கிறது. தமிழ்நாட்டை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. திமுகவின் குடும்ப அரசியல் காரணமாக தமிழ்நாட்டு இளைஞர்களால் முன்னேற முடியவில்லை” என்று பொத்தாம் பொதுவாகப் பேசினார் மோடி. தமிழ்நாட்டு ஆண்களும் பெண்களும் பட்டப்படிப்பு படிக்க உதவியாக மாதம் ரூ.1,000 தருகிறோம், இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பாகச் சொல்கிறார். மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை தமிழ்நாடு அரசு தடுக்கிறது என்கிறார் மோடி. எந்த திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்? எப்போது தடுத்தோம்? என்று பட்டியல் போடுங்கள் என்று கேட்கிறார் ஸ்டாலின். ஆனால், தமிழகத்துக்கு அடிக்கடி படையெடுத்த பிரதமர், தனது அடுத்த கூட்டத்திலும் பதில் சொல்லவில்லை.

திமுக ஊழல் கட்சி என்று பேசும் பாஜக-வால் ஒரே ஒரு ஊழல் குற்றச் சாட்டைக்கூட பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. நாம் 5-ஜி கொண்டு வந்தோம். ஆனால், திமுக 2-ஜியில் ஊழல் செய்துவிட்டார்கள் என்று பேசுகிறார் பிரதமர் மோடி. தீர விசாரணை நடத்தி அது தவறான குற்றச்சாட்டு என்று நீதிமன்றமே நிராகரித்த குற்றச்சாட்டு அது.

இந்த நிலையில், பிரதமரின் இத்தகைய குற்றச்சாட்டை எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின், ஊழலுக்குப் பல்கலைக்கழகம் அமைத்தால் அதற்கு வேந்தராக இருக்கத் தகுதி படைத்தவர் நரேந்திர மோடி என்று பதில் தாக்குதல் தொடுத்தார். அதேசமயம் இந்த குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் வெறுமனே சொல் விளையாட்டில் சொல்லாமல், அடுக்கடுக்காக துல்லியமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார்.

“காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டபோது ஒரு விமானம் 526 கோடி கோடி ரூபாய் விலைக்கு வாங்க ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் ஒரு விமானம் ரூ.1,670 கோடி கொடுத்து வாங்கினார்கள். 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பாஜக ஆட்சி குறித்து சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மூலம் ரெய்டு நடத்தி, மிரட்டி தேர்தல் பத்திரங்கள் வாங்க வைத்து ஊழல் செய்தது பாஜகதான்” என்று துல்லியமான விவரங்களுடன் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இவைகளுக்கு மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பொத்தாம் பொதுவாக தான் வைத்த குற்றச்சாட்டுகளே போதும் என்று மோடி நினைக்கிறாரா?என்பதுஇன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்!

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe