Advertisment

"விட்டுடாதீங்கப்பா என்று அந்த குழந்தைகள் கதறுவது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.." - கண்கலங்கிய முதல்வர்!

asd

தமிழ்நாட்டில் சில வாரங்களாக பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "கடந்த சில நாட்களாக நாம் வருத்தமான செய்திகளைத் தொடர்ந்து கேட்டுவருகிறோம். பெண்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலியல் ரீதியான தொல்லைகளும், அதனால் அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வது எனதொடர்ந்து இந்த மாதிரியான செய்திகள் வெளியாகிவருகின்றன. இது உண்மையாகவே கேவலமான ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாடு போன்ற நாகரிகமும், கல்வியும் வளர்ந்த நிலையில் உள்ள மாநிலத்தில் இத்தகைய கொடூரமான சம்பவங்களும் நடக்கிறதே என்று நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. அதற்காக இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ‘விட்டுடாதீங்கப்பா’ என்று அந்தக் குழந்தைகள் கதறுவது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதை யாரும் விடப் போறதில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் வசனம் எழுதியிருப்பார். "மனசாட்சி உறங்கும்போது மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது" என எழுதியிருப்பார்.

Advertisment

அப்படி மனசாட்சி இல்லாத மனிதர்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை நாம் நாகரிகத்தையும், பண்பாட்டையும் பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. பெண்களுக்கு உடல்ரீதியாக பாலியல் சீண்டல்கள் அளிக்கும் நபர்களைத் தண்டிக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கு. அவ்வாறு செய்யும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நிச்சயம் கடுமையான தண்டனையை நாம் பெற்றுத் தருவோம் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப் பற்றி வெளிப்படையாக புகார் கொடுக்க வேண்டும். பள்ளிகளில், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அங்கிருக்கும் உரிய பொறுப்பாளர்களிடம் சொல்லத் தயங்கக் கூடாது. அதேபோல் அவர்கள் கூறும் புகார்களை அலட்சியம் செய்யும் எண்ணம் அவர்களுக்கு அறவே இருக்கக் கூடாது. அதன் உண்மைத் தன்மை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும். புகார் வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பள்ளி நிர்வாகமோ, அல்லது தனது மகளுக்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் குடும்பப் பெயர் கெட்டுவிடும் என்று பெற்றோரோ கண்டிப்பாக நினைக்கக் கூடாது. என்ன தவறு நடந்தாலும் அதனை உரிய முறையில் புகார் அளித்தால்தான் அதுதொடர்பாக தீவிர விசாரணை செய்ய முடியும். அவ்வாறு செய்யாமல் அதை மறைத்தால் உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு அது மிகப்பெரிய துரோகமாக மாறிவிடும்.

Advertisment

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் உளவியல் ரீதியாக தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உடல் வலியோடு சேர்ந்து உள்ளத்திலும் ஆறாத வலி ஏற்படுகிறது. இந்தச் சூழலில் நம்பிக்கை தளர்ந்து போகிறது. சக மனிதர்கள் மீது வெறுப்பு வளர்கிறது. கல்வியிலோ, வேலையிலோ கவனம் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் எல்லா செயல்பாடுகளுமே இதனால் தடைபடுகிறது. அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. இப்படியான சூழ்நிலைகளில் நாம் அவர்கள் பக்கம் முழுவதுமாக நிற்க வேண்டும். அதனால்தான் மாநில அரசு இதை மிக முக்கிய பிரச்சனையாக தொடர்ந்து பார்த்துவருகிறது. இவ்வாறு புகார்களில் சிக்குபவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதை நீங்கள் சில நாட்களாக தொலைக்காட்சிகளில் பார்த்துவருகிறீர்கள். உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர இந்த அரசு தயங்காது. குழந்தைகளுக்கு உதவி எண் 1098. யாருக்கு பாதிப்பு என்றாலும் குழந்தைகள் இந்த எண்ணுக்கு அழைத்துக் கூறுங்கள். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்படுபவர்களின் ரகசியம் காக்கப்பட்டு, அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். எனவே யாரும் எதற்கும் பயப்படாமல் உங்களுக்கு யார் பாதிப்பு ஏற்படுத்தினாலும் தயங்காமல் கூறுங்கள், இந்த அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்" என்று கூறியுள்ளார்.

Child abuse sexual harassment stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe