Advertisment

யூகங்களை பொய்யாக்கிய ஸ்டாலின்!

Stalin

Advertisment

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகும் தினந்தோறும் திமுகவைப் பற்றியே ஊடகங்கள் விவாதங்களை நடத்தி வந்தன. ஸ்டாலின் சமாளிப்பாரா? அழகிரி திமுகவை உடைப்பாரா? உள்கட்சிக் குழப்பங்கள் வெடிக்குமா? என்றெல்லாம் ஆளாளுக்கு யூகமான தலைப்புகளில் விவாதங்களை நடத்தினார்கள்.

திமுக அப்படி போய்விட முடியாது. அப்படிப் போனால் அது திமுகவாக இருக்க முடியாது. அண்ணா, கலைஞர் வழியிலிருந்து திமுக பிசகினால்தான் பிரச்சனை வெடிக்கும் என்று வாதிட்டவர்கள் பலர். திமுகவையும், ஸ்டாலினையும், கலைஞர் குடும்பத்து உறுப்பினர்களையும் வைத்து பின்னப்பட்ட ஊடக விவாதங்களையும், பத்திரிகை செய்திகளையும் பார்த்தும் பாராததுபோல எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக கடந்தார் ஸ்டாலின்.

பல்துறை வித்தகர் கலைஞரின் புகழஞ்சலி நிகழ்ச்சிகளை அருமையாக திட்டமிட்டு நடத்திக் கலந்துகொண்டிருந்தார். ஊடகவியலாளர்கள், கலைத்துறையினர், இலக்கிய வித்தகர்கள், மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள்,நீதித்துறையினர் என்று அர்த்தம் பொதிந்த புகழஞ்சலிக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

Advertisment

அகில இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி நிகழ்ச்சியில் பாஜகவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதையே வைத்து திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கப்போகின்றன என்கிற அளவுக்கு விமர்சனங்கள், விவாதங்கள்கடந்த சில நாட்களாக ஒடிக்கொண்டிருந்தன. கலைஞருக்கு பாரதரத்னா விருது பெறத்தான் பாஜகவை திமுக அனுசரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரைத் திருப்ப பாஜகவின் உதவியை வேண்டித்தான் திமுக நெருக்கம் காட்டுகிறது. காங்கிரஸை கழற்றிவிட்டு புதிய அணியை உருவாக்கவே திமுக பாஜகவை அழைக்கிறது என்றெல்லாம் யூக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Stalin

புகழஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கேலியும் கிண்டலுமாக திமுகவை காய்ச்சி எடுத்தார்கள். இந்த அழைப்பில் அரசியல் இல்லை என்று திமுகவே அறிவித்தபிறகும்கூட அதை மறைத்து, திமுகவும் பாஜகவும் நெருங்க வேண்டும் என்ற ஆசையை மறைமுகமாக பலர் வெளியிட்டனர்.

எதற்கும் ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. அதேசமயம் கலைஞரின் புகழஞ்சலிக் கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற 99 சதவீதம் பேர் சமூகநீதி, மதசார்பின்மை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளில் கலைஞரின் உறுதியை மட்டுமே முன்னிறுத்தி பேசினார்கள். இந்தியாவில் தமிழகம் மட்டுமே உதாரண மாநிலமாக இருப்பதையும் அவர்கள் பெருமையாக பேசினார்கள். நவீன தமிழகத்தை உருவாக்கியதில் கலைஞரின் பங்களிப்பை ஆய்வுபூர்வமாக பல்வேறு துறை அறிஞர்கள் விரிவாக பேசினார்கள்.

இந்நிலையில்தான் பரவலாக உருவாகியிருந்த முதல் யூகத்தை ஸ்டாலின் உடைத்தார். தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் திமுகவினர் மத்தியில் புதிய நம்பிக்கை வெளிப்பட்டது. ஸ்டாலின் ஏதோ புதிய வியூகத்தை வகுத்திருக்கிறார் என்பது புரிந்தது.

அப்போதும்கூட பாஜகவை திமுக நெருங்குகிறதா என்ற கேள்வியை மய்யப்படுத்தி விவாதங்கள் தொடரத்தான் செய்தன. இதுதொடர்பான வினாக்களுக்கு இன்று விடைகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக பொதுக்குழுவில் புதிய தலைவராக பதவியேற்கும் ஸ்டாலின் நிச்சயமாக திமுகவின் எதிர்கால பாதையை தெளிவுபடுத்துவார் என்ற எதிர்பார்ப்பை அவர் பொய்யாக்கவில்லை.

திமுக என்றும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கும். சமூக நீதியையும் மதசார்பின்மையையும் உயிராக கொண்டு இயங்கும் என்று ஸ்டாலின் அறிவித்தார். அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதும் காவிச்சாயம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு எதிராக களம் அமைத்து போராட திமுக தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்து மிகப்பெரிய கரவொலியை பெற்றார்.

கலைஞரின் தொடர்ச்சியாய் ஸ்டாலினும், பெரியார், அண்ணா வழியில் கொள்கை தீபத்தை ஏந்தி திமுகவை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்.

Leader
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe