Skip to main content

நிர்பந்தத்தால் தேர்வு ரத்து செய்யவில்லை... கேட்ட குரூப் கிடைக்குமா? ஆல் பாஸ் குளறுபடிகள்!

 

admk


பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி என்பது பெரும்பான்மையான மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான முடிவு. அதே நேரத்தில், இதன் தாக்கம் பற்றிய வேறு சில பார்வைகளும் வெளிப்படுகின்றன.
 


சேலம் மேச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன் பேசுகையில், "மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் இருந்து 80 சதவீதமும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. என்னவெனில், முந்தைய இரு தேர்வுகளிலும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, அரசு அறிவித்தபடி கணக்கிட்டு மதிப்பெண் வழங்கியும் 30க்கு மேல் மதிப்பெண் பெறவில்லை எனில், அந்த மாணவனுக்கு மதிப்பெண் சான்றிதழில் என்னவென்று குறிப்பிடுவது என்பதற்கு உரிய வழிகாட்டுதல்கள் இல்லை'' என்றார்.
 

admk


சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், "என் மகன் சூர்யா, இந்தாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு முழுவீச்சில் தயாராகி இருந்தான். கடந்த காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றிருந்தான். அதன்பிறகு அவனுக்கு டியூஷனை மாற்றினோம். முழு ஆண்டுத்தேர்வு நடத்தி இருந்தால் 400க்கு மேல் மதிப்பெண் பெற முடியும் என்றும், அதன்மூலம் பிளஸ்-1 இல் தான் விரும்பும் பாடப்பிரிவை எடுக்க முடிந்திருக்கும் என்றும் என் மகன் புலம்புகிறான்'' என்கிறார்.

சேலம் காட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராதா என்பவர், "என் மகள் அரசுப்பள்ளியில் ஆங்கில வழியில் படித்து வருகிறாள். அவளுக்கு தமிழ்ப்பாடம் கடினமாக இருந்து வந்த நிலையில், பொதுத்தேர்வுக்காக கஷ்டப்பட்டுப் படித்து வந்தாள். ரத்தானதால் ரொம்பவே ஏமாற்றம் அடைந்திருக்கிறாள்'' என மகளின் உள்ளக் குமுறலைச் சொன்னார். ஆத்தூரைச் சேர்ந்த ஜமுனா, என் மகனுக்கு பிளஸ்-1 இல் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.

தமிழக அரசுத்தேர்வுகள் இயக்கக முன்னாள் இயக்குநர் தேவராஜன், "பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். இன்றைய நிலையில், பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது, முடிவுகளை வெளியிடுவது வரையிலான பணிகளுக்கு 12 நாள் போதுமானது. ஆகையால், எப்போது பள்ளிகளைத் திறந்தாலும் பத்தாம் வகுப்புக்கு ஒரு மாதம் புத்துணர்வுப் பயிற்சி அளித்துவிட்டு, அதன்பிறகு தேர்வு நடத்தலாம்.
 

admk


பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகும் என்பதால், அடுத்தக் கல்வி ஆண்டிலும் தேர்வுகளை நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது. அதனால், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளைத் தவிர்த்துவிட்டு, பொதுத்தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்தலாம்'' என்கிறார்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசினோம். "தமிழக அரசின் முடிவு, மாணவர்களின் திறமையை எடைபோட முடியாத சூழலை உருவாக்கி இருக்கிறது. நீதிமன்றத்தை எதிர்கொள்ள முடியாமல் எடுக்கப்பட்ட முடிவு இது இந்த முடிவால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குதான் பின்னடைவு'' என்றார்.
 


இதுபற்றி முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வு மான செம்மலையிடம் கேட்டோம். "கரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் தான் ஜூன் 15ஆம் தேதி முதல் பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு முன்வந்தது. ஆனால், நோய்த்தொற்று தாக்கம் குறையாததால் மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் சரியான முடிவை எடுத்திருக்கிறார். பள்ளிகள் திறக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 நாள்கள் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன்பின் பொதுத்தேர்வு நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்குள் இரண்டு மாத காலம் ஆகிவிடும். அப்படிச் செய்தால் அடுத்தக் கல்வி ஆண்டு முழுவதுமே பாதிப்பதோடு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் டிப்ளமோ, ஐடிஐ மற்றும் இதர தொழிற்படிப்புகளில் சேர முடியாமல் போய்விடும் சிக்கலும் இருக்கிறது. இதையும் கவனத்தில் கொண்டு உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை அரசு எடுத்திருக்கிறது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிர்பந்தத்தால் அல்ல'' என்கிறார் செம்மலை.
 

 

admk


பெற்றோர் எழுப்பும் சந்தேகங்கள், பள்ளிகளில் படிக்காமல் தேர்வுக்குத் தயாரான தனித்தேர்வர்கள் நிலை ஆகியவை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம். "தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி எனச் சொன்னால் அதில் தனித் தேர்வர்களும் உள்ளடங்குவார்கள். கேள்வித்தாள், விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண் சான்றிதழ் அனைத்தும் பள்ளி மாணவர்களைப் போன்றேதான் தனித் தேர்வர்களுக்கும் வழங்கப்படுகிறது. 8ஆம் வகுப்பில் இருந்து நேரடியாக 10ஆம் வகுப்புக்குத் தயாரானவர்கள், கடந்தாண்டு தேர்ச்சி பெறாதவர்கள் இந்தாண்டு தேர்வுக்குத் தயாரானவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாகத்தான் அறிவிக்க வேண்டும். இதில் அரசு எந்தவிதமான பாகுபாடும் காட்டக் கூடாது.

தனியார் பள்ளிகளில் 9ஆம் வகுப்பிலேயே 10ஆம் வகுப்புப் பாடத்தை எடுக்கிறார்கள் இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தாது போல் எனக்குத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டு +1, +2-வில்தான் வருகிறது. அதே நேரத்தில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை மாணவர்கள் முழுதாக படித்து எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதற்கு பிறகுதான் பொதுவாக ஆசிரியர்கள் பாடங்களை முடித்து, எப்படிக் கேள்விகள் வரும் எனப் பயிற்சி கொடுத்து, தேர்வு நெருங்க நெருங்கத்தான் தேர்வுக்கான பயிற்சிகளைக் கொடுப்பார்கள்.

சில பள்ளிகளில் மாணவர்களை இம்ப்ரூப் செய்வதற்காகக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் சின்னச் சின்ன தவறுகளுக்காக மதிப்பெண் குறைப் பார்கள். பொதுத்தேர்வில் இத்தகைய நிலை இருக்காது. பாடத்தைப் புரிந்து கொண்டு சரியாக எழுதியிருக்கிறார்களா என்றுதான் பார்ப்பார்கள். அதனால், காலாண்டு- அரையாண்டு-வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண் என்பது எந்த அளவுக்கு நியாயம் எனத் தெரியவில்லை’’ என்றவரிடம், +1 வகுப்பில் எந்த மதிப்பெண் அடிப்படையில் குரூப் ஒதுக்குவார்கள்'' எனக் கேட்டோம்.

மதிப்பெண்ணை வைத்து +1 அட்மிஷன் கிடையாது. எந்தப் பிரிவை மாணவர் கேட்கிறாரோ அந்தப் பிரிவைக் கொடுக்க வேண்டும். அதுதான் விதி. மதிப்பெண்ணை வைத்து இந்த குரூப், அந்த குரூப் என்பது வடிகட்டுவதற்குத்தான். தகுதிப்படுத்துவதற்காக அல்ல. 50 சீட் உள்ள ஒரு பள்ளியில் 500 விண்ணப்பங்கள் வந்தால், 490க்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும் எனச் சொல்லி கழித்துக் கட்டுவார்கள்.

அசாதாரணமாக உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மட்டுமல்ல எப்போதும் என்ன கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றால், 10ஆம் வகுப்புப் படித்து முடித்து அதே பள்ளியில் +1 சேர விரும்பும் மாணவனுக்கு அவன் கேட்கும் பாடப் பிரிவைக் கொடுக்க வேண்டும். அதுதான் விதி. ஒரே பாடப் பிரிவை அதிக மாணவர்கள் கேட்டால், இரண்டு வகுப்பாக வைத்து கொள்கிறோம் என அரசிடம் பள்ளி நிர்வாகம் கேட்க வேண்டும்.

இரண்டாவதாக, +1 சேர விரும்பும் மாணவருடன் தலைமை ஆசிரியர்கள் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும். எந்தப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறது. இந்தப் பாடப் பிரிவை பெற்றோர்கள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்களா? கட்டாயப்படுத்துகிறார்களா? எனக் கலந்துரையாடி, மாணவனின் ஆர்வத்தின் அடிப்படையில் அவன் விரும்பும் பிரிவைக் கொடுக்கலாம். ஒரே ஒரு சீட் இருக்கிறது. இரண்டு மாணவர்கள் கேட்கிறார்கள் என்றால், பள்ளிக்கு அருகில் உள்ள மாணவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது விதி.
 

http://onelink.to/nknapp


மூன்றாவதாகச் சமூகத்தில் பின் தங்கல், பொருளாதார பின்தங்கல் என இரண்டு விஷயங்கள் இருக்கிறது. இந்த இரண்டிலும் பின்தங்கிய மாணவர்கள் படிப்பு ஒன்றே ஆயுதம் என ஆர்வத்துடன் இருப்பார்கள். இந்த மாணவர்களைப் படிக்க வைத்தால்தான் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்படும்.

இந்த நடைமுறைகளெல்லாம் ஏற்கனவே உள்ளது. புதிதாக எதுவும் உருவாக்கப் படவில்லை. அரசு விதிப்படி +1 அட்மிஷன் நடைபெறுகிறதா எனக் கண்காணிக்க அலுவலர்களை நியமித்தால் இந்த சிக்கலில் இருந்து நிச்சயம் மீள முடியும். +1இல் கேட்ட பிரிவு கிடைக்கவில்லை என்றாலும், 10ஆம் வகுப்பு முடித்த பள்ளியிலேயே +1 சீட் கிடைக்கவில்லை என்றாலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரிடம் புகார் அளிக்கலாம் என்றார். 

-இளையராஜா


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்