ADVERTISEMENT

அரியலூர் மாவட்ட பரிசோதனை முடிவுகளை முழுமையாக வெளியிடவில்லை: மறைப்பது ஏன்? எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி

10:47 PM May 10, 2020 | rajavel

ADVERTISEMENT





அரியலூர் மாவட்ட பரிசோதனை முடிவுகளை முழுமையாக வெளியிடவில்லை என்பது தான் அரியலூர் மாவட்ட மக்களின் கருத்தாக இருக்கிறது என்றும் பட்டியல் ஏன் மறைத்து வைக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மே 6 அன்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கும் வகையில் எண்ணிக்கை அமைந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் முற்றிலுமாக குறைக்கப்பட்டு விட்டது. கீழே அந்த எண்ணிக்கையை அளித்துள்ளேன்.

மே 6 - 188
மே 7 - 24
மே 8 - 0
மே 9 - 16
மே 10 - 4

சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகும் போது, அரியலூர் மாவட்டத்தில் மட்டும் எண்ணிக்கை எப்படி குறையும். அந்த மாவட்டங்களில் ஏற்பட்ட கோயம்பேடு பாதிப்பு அரியலூர் மாவட்டத்தில் அதிகம். திருப்பூரில் இருந்தும் நிறைய பேர் வந்துள்ளனர்.

மே 6 ஆம் தேதி பட்டியல் 188 எண்ணிக்கையோடு வெளியான உடன் ஆளுங்கட்சியும், மாவட்ட நிர்வாகமும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

அது வரை பெயர், முகவரியோடு, கரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகிக் கொண்டிருந்தது. அதுவரை 34 பேர் தான் அரியலூர் மாவட்டத்தில் பாசிட்டிவ் என அறிவிக்கப் பட்டிருந்தார்கள். நாள்தோறும் கரோனா பாசிட்டிவ் குறைவான எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்தால் விபரமான பட்டியல் வெளியாவது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அதனால் அந்தப் பட்டியல் வாட்ஸ் அப்களில் எளிதாக வலம் வந்தது.

திடீரென பாதிப்பு 188 ஆக உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாதிப்பு உயர்ந்த அன்று ஆணை போனது, இனி பட்டியலை வெளியிடக் கூடாது என பட்டியல் மாவட்ட அலுவலகத்திற்கு மட்டுமே வர வேண்டும் என்றார்கள். அவ்வளவு தான், அன்றிலிருந்து பட்டியல் வெளியாக வில்லை. மாவட்ட நிர்வாகம் சொல்வது தான் எண்ணிக்கை ஆனது.

அரியலூரில் அனுமதிக்கப்பட்ட கரோனா பரிசோதனை மையம் செயல்பட துவங்கிய அன்று, 35 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவில் 35ம் பாசிட்டிவ் ஆக வந்து விட்டது. நிர்வாகத்திற்கு பயம் வந்து விட்டது. பரிசோதனை கருவிகளில் ஏதாவது கோளாறா அல்லது எண்ணிக்கை எகிறுகிறதா என்று மறு பரிசோதனைக்கு அந்த ரத்த மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி விட்டார்கள். அத்தோடு அரியலூர் பரிசோதனை மையம் மூடப்பட்டு விட்டது.

வெளி மாவட்ட பரிசோதனை மையங்களுக்கு தான் ரத்த மாதிரிகள் அனுப்பப் படுகின்றன. அதனால் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருகின்றன என்று வாய் வார்த்தையாக பதில் சொல்கிறார்கள். ஆனால் அந்த பரிசோதனை மையங்களில் இருந்து முடிவுகள் அனுப்பப்பட்டு விட்டது எனத் தகவல்கள் வருகின்றன.

வந்த முடிவுகளை முழுமையாக வெளியிடவில்லை என்பது தான் அரியலூர் மாவட்ட மக்களின் கருத்தாக இருக்கிறது. மக்கள் மாத்திரமல்ல, அரசு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலதரப்பட்டோரும் இதைத் தான் சொல்கிறார்கள்.

பட்டியல் வெளியிடாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் செல்வதால் பொதுமக்களிடத்தில் பீதி ஏற்படும்.

இரண்டாவது காரணம், பட்டியலில் உள்ள மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் பெயர்கள் வெளியில் வந்து விடும். பாதிக்கப்பட்ட மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக கிராமங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணியாற்றியப் பகுதியை கண்டெயின்மெண்ட் சோன் ஆக அறிவிக்க வேண்டி இருக்கும். அவர்களோடு பழகியவர்களுக்கு சோதனை செய்ய வேண்டி வரும்.


அந்தப் பட்டியல் ஆயிரக்கணக்கில் வரும். கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கையில், சென்னையோடு போட்டி போடும் சூழல் வரும். அதனால் எண்ணிக்கையை வெளியிடாமல் நிறுத்தி விடலாம் என நினைத்து விட்டார்கள் போலும். தாங்கள் பட்டியலை வெளியிடா விட்டால், யாருக்கும் தெரியாமல் போய் விடும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கமே மறைத்து வைத்த பால் கமிஷன் அறிக்கை தலைவர் கலைஞர் கைக்கு வந்து, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் தூக்கம் போன வரலாற்றை இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டியது எனது கடமை.

எடப்பாடி அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது. இன்னும் போக்குவரத்து மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும். அதையும் அனுமதித்து விட்டால், இயல்பு வாழ்க்கை திரும்பி விடும். மத்திய அரசும், "கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்", என அறிவித்து விட்டது.

ஊரடங்கை தளர்த்தி விட்டால், அனைவரும் வழக்கமான வாழக்கைக்கு திரும்பி விடுவார்கள். அவரவர் தொழில், வேலை என அன்றாடப் பிரச்சினைகளில் மூழ்கி விடுவார்கள். கொரோனா பிரச்சினையில் இருந்து, மக்கள் கவனம் திரும்பி விடும். இது தான் அரசின் திட்டம்.

அந்த நிலையில் இன்னும் சில நாட்களில் பரிசோதனைகளை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதற்கான முன்னோட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், அரியலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக புதிய பரிசோதனைகள் மேற் கொள்ளப்படவில்லை. ஆனால், யார் கேட்டாலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்றே சொல்கிறார்கள். கரோனாவை மூன்று நாட்களில் ஒழிப்போம் என்று சொன்னவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா?

அப்படி பரிசோதனைகள் இனி கிடையாது என்றால் வெளிப்படையாக அறிவித்து விட்டுப் போகலாமே, எதற்கு மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும்?

நாற்பது பேர் பாதிக்கப்பட்டிருந்த போது, ஊரையே அடைத்து வைத்து விட்டு, எண்ணிக்கை 275 என அடையும் போது, ஊரடங்கை தளர்த்துவதும், பரிசோதனையை நிறுத்துவதும் என்ன காரணம் என்பதை வெளிப்படையாக சொல்லி விட்டால், பயத்தை விட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவார்கள்.

அதற்கு முன், கரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட நானூறு பேர் பட்டியல் ஏன் மறைத்து வைக்கப்பட்டது என்பதையும் சொல்லலாம்.


கரோனாவால் பாதிப்பு வராது என்றால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடுங்கள்.


கரொனா நல்லது என்று வேண்டுமானாலும் அறிவித்துவிடுங்கள் எடப்பாடி அவர்களே!


இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT