Skip to main content

பட்டாசு இல்லாத தீபாவளியா? -மதுரை விமான நிலையத்தோடு மல்லுக்கட்டு!

தீபாவளி நாள் நெருங்கிவிட்டதல்லவா! சிவகாசி பட்டாசு விவகாரமும் ‘மாசு’ என்ற விமர்சனத்தோடு வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.  “வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனச் சொல்வதுபோல் சிவகாசி பட்டாசு குறித்து ஆளாளுக்கு இஷ்டத்துக்குப் பேசுகிறார்கள்.  ரூ.3000 கோடி புழங்கும் தொழில் இது. நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதற்குமுன்,   ‘குழந்தைத் தொழிலாளர்களைப் பட்டாசுத் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். யாரும் சிவகாசி பட்டாசுகளை வாங்க வேண்டாம்..’ என்று பொய்ப்பிரச்சாரம் செய்தது ஒரு கூட்டம். பட்டாசுத் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் அறவே கிடையாது. ஆனாலும், திட்டமிட்டு விஷமத்தனமாகப் பிரச்சாரம் செய்தார்கள். பெரிய அளவில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து சட்ட ரீதியாக எதிர்ப்பு கிளம்பியதும்,  குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து தற்போது யாரும் வாய் திறப்பதில்லை.  
 

spice jet

 

 

பட்டாசுப் புகையால் காற்று மாசு என்று உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பில் பட்டாசு உற்பத்திக்கோ, விற்பனைக்கோ தடையில்லை என்று கூறியது உச்ச நீதிமன்றம். தீபாவளி நாளில் குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அவ்வளவுதான். அதன்பிறகு, இந்த விவகாரம் இப்போது பசுமைப் பட்டாசில் வந்து நிற்கிறது. சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்துக் கடுமையாக உழைக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

இந்தத் தொழில் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல்,  பட்டாசு குறித்த தெளிந்த பார்வையும் இல்லாமல், மதுரை விமான நிலையத்தில் பேக்கேஜ் ஸ்க்ரீனிங் பகுதியில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் இன்டிகோ சார்பில் பேனர்கள் வைத்துவிட்டனர். ஸ்பைஸ்ஜெட் பேனரில் ‘பட்டாசு தேவையில்லை. மாசு இல்லாத தீபாவளியைக்  கொண்டாடுவோம்.’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. பட்டாசு குறித்து விமர்சிப்பதற்கு ஸ்பைஸ்ஜெட்டுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?  இன்டிகோ நிறுவனத்தின் பேனரில் ‘பட்டாசு வெடிக்காமல் தீபம் ஏற்றி  பசுமைத் தீபாவளியைக் கொண்டாடுங்கள்’ என்றிருக்கிறது.  இத்தனைக்கும் மதுரை விமான நிலையம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில்தான் இருக்கிறது. ஏற்கனவே, பட்டாசுத் தொழில் படாதபாடு படுகிறது. விமானங்களை இயக்கும் நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு கொளுத்திப் போடுகின்றனர்.” என்று பொங்கினார் சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி. ஸ்பைஸ் ஜெட் பேனருக்கு எதிராக சிவகாசியிலுள்ள ஒரு முன்னணி பட்டாசு நிறுவனம்,  வலைத்தளத்தில் இவ்வாறு தனது கண்டனைத்தை தெரிவித்துள்ளது.  

‘அன்பார்ந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தினரே!

உங்களிடம் மாசு ஏற்படுத்தாத விமானங்கள் உள்ளனவா?

தங்களின் விமானங்களில் பயன்படுத்துவது வெள்ளை பெட்ரோலா? அல்லது பச்சை பெட்ரோலா? 

எந்த தைரியத்தில் எங்களின் பட்டாசுத் தொழில் குறித்துப் பேசுகின்றீர்கள்?
 

manick thakur


உங்கள் தொழிலை நிறுத்திவிட்டு, விமானங்களைக் குப்பையில் வீசிவிட்டு, பிறகு மக்களுக்கு புத்திமதி கூறுங்கள்.  

விமானப் பயணங்களால் உமிழப்படும் Co2 ரயிலைக் காட்டிலும் 20 மடங்கு அதிகம் தெரியுமா?  நாங்களும் இதுபோன்ற விளம்பர பதாகைகளை உங்கள் அலுவலகங்களுக்கு முன் வைக்கலாமா? உங்களின் விளம்பரத்திற்காக மற்ற தொழில்களை அழிக்காதீர்கள்.’ 

பட்டாசு நிறுவனங்களுக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குமான இந்த மோதலில், நெட்டிசன்களும் புகுந்து கருத்துக்களை அதிரடியாக வெளிப்படுத்தி வருகின்றனர். 

“பட்டாசு அவசியமே கிடையாது. மக்களின் மகிழ்ச்சியில் ஒரு சிறு பகுதிதான். அதற்காக, விமானங்களைக் குறைகூறும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கார், பைக் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்களா?  மனித வாழ்வுக்கு போக்குவரது அவசியமல்லவா? எங்கே கார்களைப் பற்றி ட்வீட் செய்யுங்கள் பார்ப்போம்.” 
 

spice jet

 

 

“மக்கள் 365 நாட்களுமா பட்டாசு வெடிக்கிறார்கள்? ஒரே ஒரு தீபாவளி நாளில்தான். புத்தாண்டிலும் வெடிக்கிறார்கள். வானத்தில் மாசு என்பது ஆபத்தானதுதான். தினசரி மாசுபாட்டை ஒரு நாள் மாசுபாட்டுடன் ஒப்பிடுவது சரியாகாது. இறைச்சி உண்பதும் புவி வெப்பமடைதலுக்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அதற்காக, இறைச்சி சாப்பிடுவதை எத்தனைபேர் நிறுத்திவிட்டார்கள். பட்டாசு வெடிப்பதால் மாசு உண்டாகிறது என்று விழிப்புணர்வுக் குரல் எழுப்புவோர், போக்குவரத்துக்கு பைக், கார்களைப் பயன்படுத்தாமல் நடந்து செல்ல வேண்டும்.”

“என்னய்யா இது? போக்குவரத்தையும்  பட்டாசு வெடித்து பொழுது போக்குவதையுமா ஒப்பிடுவது?” -வலைத்தளத்தில் இதுபோன்ற விவாதங்கள் தொடர்ந்தபடியே உள்ளன. 

ஸ்பைஸ்ஜெட் மற்றும் இன்டிகோ நிறுவனங்கள் மதுரை விமான நிலையத்தில் வைத்திருந்த  பட்டாசு எதிர்ப்பு  பேனர் விவகாரம், விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.  விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் எடுத்துச்சொன்னதும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,  அந்த பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன. 

ஸ்பைஸ்ஜெட் தரப்பிலோ ‘விமான நிலைய அதிகாரிகள் கவனத்திற்கே கொண்டு செல்லாமல் விமான நிலைய ஆபரேட்டர் செய்த வேலை இது.” என்று விளக்கம் அளித்துள்ளனர்.  

திரி இல்லாமலே, யாரும் பற்ற வைக்காமலே, இணையத்திலும்  வெடிக்கிறது சிவகாசி பட்டாசு!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்