Skip to main content

பாஜக - அதிமுக கூட்டணி முறிவு; எடப்பாடியின் இறுதி முடிவா? - எஸ்.பி. லட்சுமணன்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 SP Laxmanan  | ADMK | BJP | Edappadi | Annamalai

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.

 

அண்ணா பெயரால் கட்சியை நடத்துகையில், அவர் குறித்து தவறான கருத்தை பேசும் ஒருவரை ஏன் எடப்பாடி நேரடியாக கேள்வி எழுப்பவில்லை. முன்னொரு காலத்தில், தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், புத்தகத்தில் ஒரு தலைவரைப் பற்றி இரண்டு வரி எழுதியதற்கு கொதித்தவர் ஜெயலலிதா. எனவே, தலைவராக இருக்கும் எடப்பாடி இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்க வேண்டும். இருந்தும், பின்னர் தலைமைக் கழகத்தின் முடிவால் கூட்டணியை முறித்துக் கொண்டதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஆனால், ஜெயக்குமார் கூட்டணியே இல்லை என சொன்ன பின்பும், ஏன், சி.வி. சண்முகம் தொடங்கி நத்தம் விஸ்வநாதன் உள்பட ஆறு பேர் டெல்லிக்கு சென்றார்கள். அங்கு சென்று அண்ணாமலை குறித்து பேசிவிட்டு பின்னர் ஏன் அதனை மறைக்க வேண்டும். அண்ணாமலையை அடக்க காலக்கெடு கொடுத்துள்ளோம் என வெளிப்படையாக அறிவிக்கலாமே. எனவே, இதுபோன்ற செயல்கள் தான் எடப்பாடியின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்புகிறது.

 

மேலும், இவர்கள் அறிவித்தது உறுதி முடிவு தானே தவிர இறுதி முடிவென்று ஏற்க முடியாது. ஏனென்றால், அண்ணாமலையால் தான் இவர்கள் கூட்டணி முறிந்தது. ஒருவேளை, மூன்று மாதங்கள் கழித்து வேறொருவரை பாஜக தலைவராக நியமித்தால், அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவித்த பின்னரும், செல்லூர் ராஜு, ‘பாஜகவுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை... அண்ணாமலை தான் சிக்கல்’ என்றார். இதனால் இதனை இறுதி முடிவென்று ஏற்கவில்லை. அதேசமயம், இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததற்கு அ.தி.மு.க.வை பாராட்ட வேண்டும்.

 

வெறும் தொகுதிப் பங்கீடு காரணமாக இந்த கூட்டணி பிரிந்தது என சொல்ல முடியாது. மாறாக, அண்ணாமலை பலமுறை ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி பேசி வந்ததும், ஊழல்வாதி எனவும் கூறி வந்தார். தோழமை வைத்திருக்கையில் இதுபோன்று பேசலாமா, காங்கிரஸ் - தி.மு.க. கட்சிகள் உண்மைகளை பேசிக் கொள்வார்களா? தொடர்ந்து இதுபோன்று முதிர்ச்சியற்ற விதமாக, அடிமையாக இருந்தார் என்றும் மதுரை மாநாட்டையும் தோழமை கட்சியாக இருந்துகொண்டு அவர் விமர்சித்து வந்தார். இத்தனைக்கும் பிறகு தலைமை பொறுப்பில் இருக்கும் எடப்பாடி எப்படி பொறுத்துக்கொள்வார். இந்த விவகாரம் நாடகமா இருக்கும் என நான் நினைக்கவில்லை. மேலும், கிருஷ்ணசாமி இன்று கூட்டணியை இணைக்கும் வகையில் பேசியுள்ளது ஒரு வகையில் அவர்களுக்கு சரியென தோன்றலாம். ஆனால், இவ்வளவு நாளாக அண்ணாமலை பேசியதற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே என எடப்பாடி கேட்டால் என்னவாகும். எனவே, கொள்கை முரண்பாட்டால் இந்த கூட்டணி முறியவில்லை. அண்ணாமலையால் தான் இந்தக் கூட்டணி முறிந்தது.

 

இந்த முடிவுகளைத் தொடர்ந்து பாஜகவால் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாகவும் வாய்ப்புள்ளது. அதேசமயம், அ.தி.மு.க.வை சிதைக்க பாஜக மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தியும், எடப்பாடி அதனை தைரியமாக எதிர்கொண்டு தனது நிலையில் உறுதியாக இருந்தார் என்றால் தொண்டர்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கலாம். கூட்டணி முறிவால், சிறுபான்மையினர் வாக்குகள் முழுவதும் அ.தி.மு.க.விற்கு மாறும் என சொல்லவில்லை. ஏனென்றால், எப்பொழுது வேண்டுமானாலும் எடப்பாடி தனது நிலையில் இருந்து மாறலாம் என்று சிறுபான்மையினர்களுக்கு தெரியும். உதாரணத்திற்கு, ஏற்கனவே 20% சிறுபான்மையினர் அதிமுகவை ஆதரித்தால், இதன் பின் கூடுதல் பத்து சதவீதம் உயரலாம். 

 

தற்போது எடுத்த முடிவு குறித்து வெளியில் விவாதிக்க வேண்டாம் என்ற அறிக்கை முன்பே கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், இதுபோன்று கூட்டணி பிரிவு நடக்கையில் இரு தரப்பும் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதும் இயல்பு தான். இது நாள் வரை அண்ணாமலை பலம் என நினைத்து செயல்பட்டுவிட்டு இன்றைக்கு கூட்டணி விவகாரம் குறித்து தேசியத் தலைமை முடிவெடுக்கும் என்கிறார். அ.தி.மு.க. இந்தியளவில் இரண்டாவது மிகப்பெரிய கட்சி என்பதும் உண்மை தான். எனவே, இது பா.ஜ.க.விற்கு ஒரு மிகப்பெரிய இழப்பு. ஆனால், 6 பேரை டெல்லிக்கு அனுப்பி எடப்பாடி தவறு செய்துவிட்டார். மாறாக, தைரியமாக ஆமாம் அண்ணாமலை குறித்து புகாரளிக்க தான் சென்றோம் எனக் கூறியிருந்தால், தொண்டர்கள் மத்தியில் பலம் அதிகரித்திருக்கலாம். மேலும், அண்ணாமலை இனிமேல் விமர்சிப்பதை நிறுத்துவார் என்றும் சொல்ல முடியவில்லை. தேசியத் தலைமையின் நிலைப்பாட்டை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். கூட்டணி முறிவு எடப்பாடியின் துணிச்சலான முயற்சி என்று சொன்னாலும், மாநில அரசின் மூலமும் வரும் அழுத்தங்களால் அவருக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் உள்ளூர இதயத் துடிப்பு சற்று அதிகம் இருக்கும். 

 

அதே சமயத்தில், அதிமுகவின் கூட்டணி முறிவு. திமுக - காங்கிரஸ் கூட்டணியிடமும் சில சலசலப்பை ஏற்படுத்தும். ஏன், சில கட்சிகள் அதிமுகவை அணுகலாம் என்று கூட சிந்திக்கலாம். ஏற்கனவே, இ.ந்.தி.யா. கூட்டணி வலிமை பெறுவது பாஜகவை தொய்வடைய வைத்துள்ளது. இந்நிலையில், அதிமுக விலகியது அவர்களுக்கு சரிவு தான். அதனால், அதிமுக பெருமளவு வெற்றி பெறும் என்றும் உறுதியளிக்க முடியாது. ஆனால், இந்த முடிவு எடப்பாடியை உயர்த்தும் எனலாம். அதிலும், இத்தனை தொண்டர்களுக்கு மதிப்பளித்து எடுத்த முடிவாகவே நான் பார்க்கிறேன். எனவே, இந்த முடிவினை நாடகமாக பார்க்கவில்லை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...