Skip to main content

அதிமுக பாரபட்ச பாலிடிக்ஸ்! -தென்மாவட்ட குமுறல்!

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
ops



அதிமுக தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியல், தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக, அச்சமுதாயத்தினர் குமுறலோடு சொல்கின்றனர். அம்மக்களின் ஆதங்கம் இதோ – 

 

மனுக்கள் குழுவில் சாதி ஆதிக்கம்!

 

“ஜெயலலிதா காலத்தில் கட்சியின் பவர்ஃபுல் அமைப்பாக நால்வர் அணி இருந்தது. ஒழுங்கு நடவடிக்கைக் குழு என்ற பெயரில் இயங்கி வந்த அந்த அணியினர் கொடுக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே,  கட்சியில் உள்ள நிர்வாகிகளை மாற்றவோ, நீக்கவோ முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இறுதியாக நால்வர் அணியில் அங்கம் வகித்தனர். 



 

manoj pandian



தற்போது அதிமுக வெளியிட்டுள்ள மனுக்கள் குழுவின் உறுப்பினர்களாக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.பி.முனிசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கட்சியினரிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் அடிப்படையில்,  கொடுக்கும் பரிந்துரைகளின் படி ஒரு மாவட்டச் செயலாளர் மீதுகூட,   இக்குழுவினரால் நடவடிக்கை எடுக்க முடியும். இக்குழுவுக்கு,  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும்  இந்த அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். 

 

இக்குழுவில் தென்மாவட்டங்களில் மெஜாரிட்டியாகவும், தமிழகமெங்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்திலும் உள்ள நாடார் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்,  சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முதன்முதலில் குரல் கொடுத்த பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியனுக்கு இக்குழுவில் இடமளிக்கப்படவில்லை. அதுபோல்,   ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.கவுக்கு ஆதரவாக உள்ள யாதவர் சமுதாயத்துக்கும், முத்தரையர் சமுதாயத்துக்கும் கூட இக்குழுவில் இடமளிக்கப்படவில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தலித் சமுதாயத்தவர் ஒருவர் கூட இக்குழுவில் நியமிக்கப்படவில்லை. எந்த ஜாதி பின்புலமும் இல்லாமல் எம்ஜிஆரால் துவக்கப்பட்ட அதிமுக,  இன்றைக்கு கவுண்டர் மற்றும் தேவர் சமுதாயத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது,  கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

 

ஆதரவளித்த சமுதாயத்தினரைக் கைவிட்ட ஓ.பன்னீர்செல்வம்! 

 

சசிகலா குடும்பத்தை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது,  பி.எச்.பாண்டியன் மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோர் அந்த அணியில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால்தான் நாடார் சமுதாயத்தின் ஆதரவு மிகப்பெரிய அளவில் அந்த அணிக்குக் கிடைத்தது. இன்று அறிவிக்கப்பட்ட மனுக்கள் குழுவில் ஓபிஎஸ் தனது சமூகத்தைச் சேர்ந்த நத்தம் விசுவநாதனுக்கு இடம் வாங்கித் தந்துள்ளார். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மனோஜ்பாண்டியனையும், யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பனையும் அவர் கைகழுவியிருப்பது, அவர்களின்  ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.  

 

nadar sangam kaditham


 

குறிப்பாக, நாடார் சமுதாயத்தினருக்கு எங்கே பிரச்சனை என்றாலும்,  அதைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவர் பி.எச்.மனோஜ்பாண்டியன். அவரைத் தொடர்ந்து புறக்கணித்து வருவது,  எக்கள் சமுதாயத்தினர் மத்தியில் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில் பெரும்பான்மை சமுதாயமான நாடார் சமுதாயத்தைப் புறக்கணித்துள்ள  அதிமுக தலைமைக்கு சரியான பாடத்தைப் புகட்ட நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்.” என்றனர்.  


 

பாராளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம்!


 

இது குறித்து நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம், “ எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் எந்த தைரியத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் என எங்களுக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள தேவர் சமுதாயத்தினரின் பெரும்பான்மையான ஆதரவு டிடிவி.தினகரனுக்கு இருக்கும் சூழ்நிலையில்,  அந்த சமுதாயத்துக்கு மனுக்கள் குழுவில் இரண்டு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓபிஎஸ்சையும் சேர்த்தால் மூன்றுபேர். அது போல கவுண்டர் சமுதாயத்துக்கும் முதல்வரைச் சேர்த்து மூன்று பேர். அப்படியென்றால்,  இந்த இரண்டு சமுதாயத்தினரின்  கட்டுப்பாட்டில்தான், கட்சி செயல்படுகிறதா?  கட்சி ஆரம்பித்தபோதே தலைமைக்கழக நிர்வாகியாக இருந்து செயல்பட்டவர் பி.எச்.பாண்டியன்.  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர் அவரது மகன் மனோஜ்பாண்டியன். இவர்களைப் புறக்கணித்ததன் மூலம் நாடார் சமுதாயத்தின் ஆதரவே வேண்டாம் என்று அதிமுக தலைமை நினைக்கிறதா? இந்தப் பட்டியலை உடனடியாகப் பரிசீலனை செய்து மனோஜ்பாண்டியனுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காவிட்டால் பாராளுமன்றத் தேர்தலில் உரிய பாடத்தைப் புகட்டுவோம்.”  என்றார்.


 

ops-eps


 

திருநெல்வேலியில் இயங்கிவரும் தெட்சண மாற நாடார் சங்கம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாடார் சமுதாயத்தினரின் குரலைப் பிரதிபலிக்கும் விதத்தில் கடிதம் அனுப்பி வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், இன்று வரையிலும் சசிகலா ஆதரவு மனநிலையிலேயே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் இருப்பதாகச் சொல்லி, மேலும் சில விஷயங்களை முன்வைத்தார்கள் அச்சமுதாயத்தினர். 

 

சசிகலா காலில் விழாத கம்பீரம்!

 

“அதிமுகவை எம்ஜிஆர் துவக்கியபோது, அக்கட்சியின் தலைமைக்கழக வழக்கறிஞர் அணிச்செயலாளராக இருந்த பி.எச்.பாண்டியன், சபாநாயகர் பதவிக்கு என்ன அதிகாரம் உண்டு என்பதை தமிழக மக்களுக்கு நிரூபித்துக் காட்டினார். அவர் வழியில்,  அவருடைய மகன் பி.எச்.மனோஜ்பாண்டியனும் அரசியலுக்குள் நுழைந்து,  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை அபகரிப்பதற்கு சசிகலா குடும்பம் முடிவு செய்த போது, தற்போதுள்ள  அனைவருமே அதற்கு ஆதரவளித்தவர்கள்தான் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. ஏன்?  ஓபிஎஸ், இபிஎஸ் முதல் அனைவருமே சசிகலா காலில் விழுந்தவர்கள் தான். ஓபிஎஸ்சின் முதல்வர் பதவியை சசிகலா பறிக்கவில்லை என்றால் இன்றைக்கும் அவர் சசிகலாவின் ஆதரவாளராகத் தான் தொடர்ந்திருப்பார்.


 

mgr jayalalitha



 

ஆனால்,  துவக்கம் முதல் இறுதிவரை சசிகலாவை சந்திக்காத அதிமுக தலைவர்கள் பி.எச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ்பாண்டியனும்தான்.  ஜெயலலிதாவின் மரணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுந்தபோது,  அவரால் வாழ்ந்த.. வளர்ந்த.. கோடீஸ்வரர்களாக உருவான அதிமுக தலைவர்கள்  ஒருவர் கூட அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மக்கள் மனங்களில் எழுந்த சந்தேகங்களை முதன் முதலில் மீடியாக்களின் மூலம் வெளிப்படுத்திய அரசியல்வாதி பி.எச்.மனோஜ்பாண்டியன்தான். பிறகு,  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது,  தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் அவரைக் கைவிட்ட போது,  அவருக்கு ஆதரவாக நாடார் சமுதாய மக்களை ஒருங்கிணைத்தவர் மனோஜ்பாண்டியன். ஆனால்,  இன்றைக்கு மனோஜ்பாண்டியன் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவின் மனுக்கள் குழுவில் உள்ள 5 பேரில் இரண்டு தேவர். இரண்டு கவுண்டர், ஒரு வன்னியர். இவர்கள் அனைவரும் சசிகலாவின் காலில் விழுந்தவர்கள் ஆவர். ஒருவேளை மனோஜ்பாண்டியனும் சசிகலாவின் காலில் விழுந்திருந்தால் அவருக்கும் இப்பட்டியலில் இடம் கிடைத்திருக்குமோ? என்னவோ? எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது  ஜாதி பின்புலம் இல்லாத கட்சியாக அதிமுக இருந்தது. அக்கட்சியில், ஜாதி அடிப்படையில் இன்றைக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தவறானது. அக்கட்சிக்காக துவக்கம் முதல் இன்றுவரையிலும் உழைத்துக் கொண்டிருக்கும் மனோஜ்பாண்டியன் போன்றவர்களைப் புறக்கணித்திருப்பதும் தவறானது. அதிமுக தலைமையே! வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும், 20 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் நாடார் சமுதாய வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா?” என்றார்கள் கொதிப்புடன். 

 

sasikala


 

‘தமிழகத்தில் ஒட்டு மொத்த நாடார் சமுதாயமும் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் பின்னால் நிற்கிறதா?’ என்ற நமது கேள்விக்கு அவர்கள் தரப்பில் பதில் இல்லை. 

 

‘மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்! அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்!’ என்று திரையில் பாடி நடித்தார் எம்.ஜி.ஆர். 


 

ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும்  ‘அண்ணா வழி’ எதுவென்று, அக்கட்சியின் சீனியர்கள் யாராவது காட்டலாமே!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.