Skip to main content

அமைதி, அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி... இன்று என்ன நாள் தெரியுமா???

மனிதர்கள் ஒரு சோகமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றால் அவர்கள் முதலில் தேடுவது மன அமைதியைதான். ஏனெனில், அப்போதுதான் அவர்களால் நின்று நிதானமாக யோசிக்க முடியும். சிலருக்கு அமைதியுடன் சேர்ந்த நல்ல மெல்லிசையை கேட்டும் அவர்கள் சோகத்தை அதன்மூலம் தீர்த்துக்கொள்வர். ஆனால், ஒருவர் சோகமாக இருக்கும்பொழுதோ, குழப்பத்தில் இருக்கும்பொழுதோ இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த வீதிகளில் செல்லும்போது பார்க்கும், உணரும் கேட்கும் அனைத்துமே மாசு அடைந்திருக்கிறது என்று உணர்வார்கள். அப்படியென்றால் அந்த சூழலில் நமக்கு ஏது மன அமைதி. காதுகளின் திறன் இயற்கையான அந்த மெல்லிய சத்தங்களை கேட்பதற்கும், எப்பொழுதாவது அடித்து பெய்யும் மழை மற்றும் இடி போன்ற சத்தங்களை கேட்பதற்கும் தான். அதற்கு மேல் கொஞ்சம் எப்பொழுதாவது கேட்கலாம். ஆனால், தற்போது இந்த உலகத்தில் நாம் கேட்பதெல்லாம் அவ்வாறா இருக்கிறது.

sound

தற்போது மனிதன் பயன்படுத்தும் முக்கியமான கருவியாக இருப்பது இயர்போன். அதாவது "செவிட்டு மெஷின்" என்று மூத்தவர்கள் கேலி செய்வார்களே அது போன்றுதான் இருக்கும். செவிட்டு மெஷின் என்பது காதின் கேட்கும் திறனை அதிகரிக்க பயன்படுகிறது. ஆனால், இந்த இயர்போன் நம் காதின் கேட்கும் திறனை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கிறது அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இயர்போன் பயன்படுத்துவதால், அடுத்தவருக்கு எந்தவித இடைஞ்சல்களும் இல்லை என்று கர்வமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எதிர்காலங்களில் காதுகளின் திறன் கேள்விக்குறிதான். இது மட்டுமல்லாமல், 2.1, 5.1, டோல்பி என்று இன்னும் நிறைய வகையான ஸ்பீக்கர்கள் பயன்படுத்துகிறோம். இன்னும் பல இருக்கின்றன. வெளியே சென்றால், சாலைகளில் வண்டிகளின் இரைச்சல், தலையை உயர்த்தினால் விமானத்தின் இரைச்சல், கண்ணுக்கெட்டிய தூரம்வரை தொழிற்சாலைகள், வாகனங்களின் இரைச்சல், கீழே குனிந்தால் மோட்டார் முதல் பெரிய, பெரிய ட்ரில்லிங் மெஷின்கள் போன்றவற்றிலிருந்து இருந்துவரும் இரைச்சல் என்று பட்டியலிட்டு கொண்டே இருக்கலாம்.

 

இந்த நிலம், நீர், ஆகாயம், காற்று இயற்கை மாசு அடைவது போன்று, ஒலியும் மாசடைகிறது. மனிதனுக்கு மன நிம்மதியென்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடுகிறது. தலைவலி, இதய நோய், மற்றும் மூளை நரம்புகளில் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என் ஏராளமாக உள்ளன. இது அனைத்தும் சேர்ந்து மனிதனுக்கு பல பிரச்சனைகளை  கொண்டுவருகிறதென்றால், விலங்குகளுக்கு இன்னும் பெரிய, பெரிய ஆபத்துகளையெல்லாம் அளிக்கிறது. விலங்குகள் இனப்பெருக்க காலங்களில், சில இயற்கையான சத்தங்களை கேட்டுக்கொண்டுதான் இனப்பெருக்கத்திற்கே ஆயத்தம் ஆகுமாம். மேலும் சொல்லப்போனால், மனிதனுக்கு கூட அதிகமான பிரச்சனையாக காது கேட்கும் திறன்தான் குறையும். ஆனால், விலங்குகளுக்கு அதன் வாழ்வாதாரமே அழிக்கப்படுகிறது.   

 

sound

 

உலகமெங்கும் ஒலி மாசுவின் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 26 தேதியை விழிப்புணர்வு நாளாக பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் இரைச்சல்களை குறைக்க தொழிநுட்பங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். முக்கியமாக வாகனங்களின் சத்தத்தை குறைக்க பல விதமான கருவிகளை கொண்டு முயற்சிசெய்கின்றனர். தொழிற்சாலைகளிலும் கருவிகள் பொருத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இருந்தாலும் இரைச்சல்கள் இருக்கத்தான் செய்கிறது. நமக்கு நாமே விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டால்தான் இதனைக் குறைக்க முடியும். இக்காலத்தில் கண்டிப்பாக இரைச்சல்களை ஒழிக்க முடியாது. அதை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் இந்த அரசியல்வாதிகள் பிரச்சாரத்தையும், விழாக்காலங்களில் அனைத்து புனிதத் தளங்களிலும் கொண்டாட்டமாக போடும் பாடல் ஒலியையும் ஒழிக்க வேண்டும். இயர்போன் பயன்படுத்துவதனால், சமூகத்துக்கு ஊறு இல்லை. ஆனால் தனி ஒருவனுக்கு அது மாசு நிறைந்ததுதான். இனியாவது வால்யூம் குறைவாக வைத்துக் கேட்க ஆரம்பிப்போம். இரைச்சலை தடுப்போம்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...