Skip to main content

சோபியா திடீர் ஆவேசத்தில் கத்திய பெண்ணல்ல; அவர் அன்றே அப்படி... 

 

 

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை முன்பு “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என முழக்கமிட்டார். கீழே இறங்கி வந்து விமான நிலையத்திலும் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.விமானத்தில் கோஷமிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆளும் கட்சியைத்தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக்கு செல்லும்முன் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் உடல்நலமின்றி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் நிபந்தனையற்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட நாளன்று “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பதும், அவர்மீது  இ.அ.ச. 285/18 மற்றூம் 290, 75(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 


28 வயதான சோபியாவின் முழுபெயர் லூயிஸ் சோபியா. அவரது அப்பா ஏ.ஏ. சாமி அரசு மருத்துவமனை மருத்துவராகவும், அம்மா மனோகரி தலைமை செவிலியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்கள். கனடாவிலுள்ள மான்ட்ரீல் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் இவர் இயற்பியல் மற்றும் கணிதத்தில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார்.
 

இவர், தமிழிசையைப் பார்த்து திடீரென ஆவேசமாக கத்திவிட்டார் என பலரும் கூறுகின்றனர். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. முழக்கமிடும் முன்னரே தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் இப்போது தமிழிசையுடன் விமானத்தில் இருக்கிறேன். எனக்கு இப்போது எனக்கு “பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக” என கத்த வேண்டும் போல் உள்ளது, இதற்காக என்னை விமானத்திலிருந்து இறக்கிவிட்டுவிடுவார்களோ” என ட்விட் செய்துள்ளார். அதன்பின்பே முழக்கமிட்டுள்ளார். இதற்குமுன் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விரிவான அவரது கட்டுரைகள் ‘தி வயர்’ என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியானது.
 

 

 

பெரியார் சிலைகளை உடைப்போம் எனக்கூறிய ஹெச்.ராஜாவையும், பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல், இவரை அதுவும் இவ்வளவு வேகத்தில் கைது செய்திருப்பதைப் பார்த்தால் அவர் கூறியது உண்மைதான் என தோன்றுகிறது. விமானத்தினுள் இன்னொரு பயணிக்கு தொல்லை கொடுத்ததால் அவர் கைது செய்யப்பட்டது சரி என பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநில தலைவர் அவர், அவர் முன் மத்திய அரசின் மீதான அதிருப்தியையே அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த அவர், அங்கு ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு நிகழ்த்திய கொலைகளை எப்படி மறக்க முடியும்? இந்த குறிப்பிட்ட சம்பவம் எப்படி இருந்தாலும், பொதுவாக இந்த அரசுகளின் பாரபட்ச கைது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சோபியா முழக்கமிட்ட வார்த்தைகள் உண்மை என்றே படுகிறது. அது மாநில அரசுக்கும் பொருந்துமென்றே தோன்றுகிறது. 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்