Skip to main content

ரியல் லைஃப் 'சூரரைப் போற்று' கதாநாயகனின் கதை...

Published on 07/01/2020 | Edited on 09/01/2020

''நான் ரத்தன் டாடா இல்லடா...!'' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் இது. 'ஏர் டெக்கான்' என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே 'சூரரைப் போற்று' திரைப்படம். மேற்குறிப்பிட்ட வசனம் படத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும், நிஜ வாழ்க்கையிலும் இக்கதையின் ஹீரோ ரத்தன் டாடா இல்லை என்பதே நிதர்சனம்.  ரத்தன் டாடா போன்ற பணக்கார பின்புலம் கிடையாது, கோடிக்கணக்கான சொத்துக்களோ, வெளிநாட்டில் சென்று படிக்கும் வசதியோ, படித்து முடித்ததும் பணியில் சேர சொந்த நிறுவனமோ கோபிநாத்திடம் இல்லை. பல ஆண்டுகால கடின உழைப்பு, அவமானங்கள், ஏமாற்றங்கள் என அனைத்தையும் கடந்து, தனது கனவை நோக்கிய பயணத்தில் சற்றும் மனம் தளராது ஒரு வெற்றி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்தான் கோபிநாத்.   

 

soorarai potru real life story of g.r.gopinath of air deccan

 

 

பின்தங்கிய கிராமத்தில் பிறந்த ஒரு மனிதர், பத்து வயது வரை பள்ளிக்கு சென்றதில்லை, வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர், விவசாயி, ஹோட்டல் அதிபர், விமான நிறுவன அதிபர், எழுத்தாளர், அரசியல்வாதி, என தனது வாழ்வில் பல துறைகளில் தடம் பதித்த ஒரு மனிதரின் கதையில்தான் சூர்யா தற்போது நடித்துள்ளார். 1951, நவம்பர் 13 அன்று கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் கோபிநாத். வீட்டில் இருந்த எட்டு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார் கோபிநாத். பள்ளி ஆசிரியரான இவரது தந்தை, தனது மகனுக்கு பள்ளியில் சென்று படிக்கும் ஏட்டுக்கல்வி வேண்டாம் என நினைத்தார். அதன்காரணமாக 10 வயது வரை வீட்டிலேயே தனது மகனுக்கு கல்வி கற்றுக்கொடுத்தார். பின்னர் 10 வயதில் நேரடியாக அரசு பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் கோபிநாத். 

பள்ளிக்காலத்தில் ராணுவத்தில் சேர கனவுகண்ட கோபிநாத் தனது குடும்பத்தினர் ஆதரவுடன் பிஜாப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் 1962 ஆம் ஆண்டு சேர்ந்தார். கடின உழைப்புக்கு பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவ பயிற்சிக்கு தயாரானார். பிறகு இந்திய ராணுவ அகாடெமியில் தனது படிப்பை முடித்தார். பிறகு தனது கனவான ராணுவப்பணியில் சேர்ந்த அவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச சுதந்திர போரில் பங்கேற்றார். 20 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர், 8 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 28 ஆவது வயதில் தனது அடுத்த கனவை நோக்கிய பயணத்திற்காக ராணுவ பணியிலிருந்து ஓய்வு பெறுவது என முடிவெடுத்தார். ஆனால் அவரின் அந்த கனவு, எல்லையில் நின்று போர் புரியும் ராணுவ வீரரின் பணியை போன்றே கடினமான ஒன்றாக இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். 

 

soorarai potru real life story of g.r.gopinath of air deccan

 

ராணுவத்திலிருந்து வெளியேறிய கோபிநாத் சொந்தமாக தொழில் தொடங்க திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார். தன்னிடமிருந்த சிறிய முதலீட்டை கொண்டு, அக்காலத்தில் பிரபலமாக இருந்த பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டார். அந்த தொழிலில் பல புதுமைகளை  கையாண்டு லாபகரமான ஒரு வியாபாரியாக அவர் உருவெடுத்தார். அதன்பிறகு மோட்டார் பைக்குகள் விற்பனை, ஹோட்டல் என அடுத்தடுத்த தொழில்களிலும் தனது கால்தடத்தை பதித்தார். இப்படி சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில் 1997 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது. அவரது மிகப்பெரிய கனவுவிதை அந்த ஆண்டில்தான் துளிர் விட ஆரம்பித்தது எனலாம். பல போராட்டங்கள், நிராகரிப்புகளுக்கு பின்னர் 1997 ஆம் ஆண்டில் தனது நண்பர்களுடன் இணைந்து பெங்களூருவை அடித்தளமாக கொண்டு 'டெக்கான் ஏவியேஷன்' நிறுவனத்தை தொடங்கினார். 

இந்த 'டெக்கான் ஏவியேஷன்' நிறுவனம் சார்ட்டர் ஹெலிகாப்டர் சேவைகளை வழங்க ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தில் வெற்றிகரமான ஹெலிகாப்டர் சேவையை வழங்கி பல முக்கிய அரசியல் தலைவர்களின் பயணங்களுக்கு துணை நின்றது இவரது நிறுவனமே எனலாம். ஹெலிகாப்டர் சேவையை கடந்து விமான சேவையிலும் கால்பதிக்க விரும்பிய கோபிநாத் 2003 ஆம் ஆண்டு 'ஏர் டெக்கான்' விமான சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார். அன்றைய தேதியில் இந்தியாவின் மலிவான விமான பயணத்தை ஏர் டெக்கான் நிறுவனம் வழங்கியது என்றே கூறலாம். இந்த குறைவான கட்டணம் பல நடுத்தர வர்க்கத்தினரை அந்நிறுவனத்தின் பயணிகளாக மாற்றியது. நடுத்தர வர்க்கத்தினருக்கான ஒரு விமான சேவை என்றே இந்த நிறுவனம் பெயர் பெற்றது. ஆனால் ஒருகட்டத்தில் இந்த குறைந்த கட்டணமே அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியது. 

 

soorarai potru real life story of g.r.gopinath of air deccan

 

குறைந்த கட்டணங்கள் வசூலித்தால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த அந்த நிறுவனம் 2007 ஆம் ஆண்டு கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தோல்வியிலும் மனம் தளராத கோபிநாத் தோல்வி தந்த பாடங்களை மனதில் வைத்து, மீண்டும் வான்வழி போக்குவரத்து துறையையே தனது பிரதான தொழில் களமாக அமைத்துக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு 'டெக்கான் 360' என்ற பெயரில் சரக்கு விமான சேவையை தொடங்கினார் கோபிநாத். தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளராகவும், அரசியல்வாதியாகவும் தன்னை மக்கள் முன் வெளிக்காட்டியவர் கோபிநாத். பல தோல்விகளை கண்ட அவர், இன்று தனது 68 ஆவது வயதிலும் இளமை துடிப்புடன் பயணித்து கொண்டிருக்கிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தற்போது உருவாகியுள்ள சூரரை போற்று படம், கனவுகளை நோக்கிய இவரது ஓட்டத்தை போன்றே, வெற்றியை நோக்கிய ஒரு ஓட்டமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.  

 

 

Next Story

டாப் இந்தியத் திரைப்படப் பட்டியல் - சூர்யா நிறுவனம் மகிழ்ச்சி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
suriya produced 2 movies in imdb new top 250 indian list

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்குத் தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வரை டாப் 250 இந்தியத் திரைப்படங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 12 மற்றும் 13 இடங்களில் சூர்யா நடித்த ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளன. இதனை இந்த இரு படங்களைத் தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அவர்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஜெய்பீம்’. இப்படத்தில் சந்துரு என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார் சூர்யா. மேலும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சிறப்பாகத் தங்களது கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பினைக் கொடுத்திருந்தார்கள். இசைப் பணிகளை ஷான் ரோல்டன் மேற்கொண்டிருந்தார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது.

Next Story

“ஒரு நூறு புலி நகமும் இவன் மாரறைய...” - மிரட்டும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ்

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

 Klims of 'Kangwa' released

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்திருந்தது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.