ADVERTISEMENT

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்று சொல்லவிட்டு வீடு போய் சேர முடியுமா?; குஜராத் மக்களுக்கு ஆழந்த அனுதாபங்கள்.." - காந்தராஜ் பேட்டி

11:29 PM Dec 08, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள பாஜக, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் காங்கிரஸ் இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட் குஜராத்தில் இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்தது தானே, இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பாஜகவுக்கு எதிராக வாக்கு அளிக்க நினைத்தால் கூட முடியாது, அதான் தேர்தலுக்குப் பிறகு பாஜக கண்டிப்பாக வெற்றிபெறும் என்று சொன்னார்களே, அதுமாதிரி தான் நடந்திருக்கு. குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யாராவது நினைத்தாலும் வாக்களிக்க முடியுமா? நான் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என்று வெளியே வந்து கூறினால் அவரால் வீட்டிற்குச் செல்ல முடியுமா? தங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிந்த எவரையும் ஓட்டுப்போடவே விடமாட்டார்கள். இதுதான் அங்கு நடந்திருக்கும். ஆனால் பத்திரிகைகளில் அதெல்லாம் வந்திருக்காது. அவங்க கையில்தான் எல்லாமே இருக்கிறதே.

இதற்குச் சின்ன உதாரணம் சொல்கிறேன், பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் பலரை உயிரோடு கொளுத்தினார்கள். அப்போது அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த பெண் நடந்த சம்பவத்தை முதலில் நீதிமன்றத்தில் கூறினார், ஆனால் அதன் பிறகு அவரே நீதிமன்றத்தில் அந்த மாதிரியான ஒரு சம்பவத்தை நான் பார்க்கவே இல்லை என்று மாற்றிக் கூறினார். அந்த மாதிரி அனைத்தையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு. குஜராத் என்பது ஆர்எஸ்எஸ் தாயகம். எனவே அவர்கள் என்ன நினைத்தாலும் செய்வார்கள்.அதை யாராலும் மாற்ற முடியாது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்துவார்கள்.

மாநில தேர்தல் ஆணையமும் அவர்களுடையது; இந்தியத் தேர்தல் ஆணையமும் அவர்களுடையது என்ற நிலையில் முடிவு அவர்களுக்குச் சார்பாகத்தான் வரும். வாக்கு வித்தியாசத்தை பாருங்க, எப்படி ஜோதி பாசு அவர்களை எதுவுமே செய்ய முடியால் இருந்ததை போல் இவர்கள் இருக்கிறார்கள். எப்படி அங்கு மம்தா பானர்ஜி என்ற ஒருவர் வந்து அவர்களைக் காலி செய்தாரோ அதைப்போல இங்கும் ஒருவர் வருவார்; அதுவரை பொறுத்திருங்கள். அதுவரை குஜராத் மக்கள் காத்திருக்க வேண்டியதுதான். அந்த நாள் வரும் வரை குஜராத் மக்களுக்கு நம்முடைய அனுதாபங்கள். தொடர்ந்து யாருமே கஷ்டத்தில் இருக்கமாட்டார்கள்; எனவே அவர்களுக்கும் கூடிய சீக்கிரம் விடிவு காலம் வரும்.

நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே கூறியிருந்தேன். தேர்தல் முடிவுகள் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதானே, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்த 25, 30 இடங்களில் வந்திருப்பார்களா? இதுவே பெரிய ஆச்சரியம். இந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்படி விட்டுக்கொடுத்தது என்றால், நாங்களும் தேர்தலை ஒழுங்கா நடத்தினோம் என்ற பேருக்காக இத்தனை இடங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள் போல, தெளிவாக ஒன்றைச் சொல்கிறேன் மக்கள் வாக்களிப்பது வேறு, தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கிறது வேறு. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடி நடைப்பயணம் எல்லாம் போய் இருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதைக் காட்டிக்கொள்ளும் பொருட்டு இதைச் செய்துள்ளார்.

இந்த முடிவு பெரும்பாலும் அரசியல் அறிந்த யாருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. இந்த தேர்தல் முடிவில் எனக்குச் சிறிய அதிர்ச்சி என்றால் வழக்கமாக குஜராத் தேர்தல் முடிவுகள் என்பது ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் அதிகமாக வெற்றிபெறுவதைப் போல் காட்டி மதியம் இருவரும் சமம் என்பதைக் கொண்டு வந்து முடிவில் பாஜக வெற்றிபெற்றது என்று சொல்லுவார்கள். ஆனால் தற்போது எடுத்த எடுப்பிலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று கூறிவிட்டார்கள். இதுதான் இந்த முறை நடைபெற்ற புதிய ஆச்சரியமான விஷயம். மற்றபடி இந்த வெற்றி என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். குஜராத் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT