கைகளை மீறி வளர்ந்துவிட்ட சோசியல் மீடியா, கூடவே ஆக்கிரமிக்கும் செயற்கை நுண்ணறிவு என மின்னல் வேகத்தில் நகர்ந்து வருகிறது ஆன்லைன் உலகம். பெரிய பெரிய வர்த்தகம் முதல் குண்டூசி தயாரிப்பது முதல் அனைத்தும் ஆன்லைன் உலகில் வீடியோ வடிவங்களாக கொட்டிக்கிடக்கிறது.

Advertisment

இப்படி இருக்க, மறுபுறம் மனிதனின் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் களம் அமைத்துள்ளது சோசியல் மீடியாக்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒன்றுதான் இந்த பாரா சோசியல் ரிலேஷன்ஷிப்.

Advertisment

இன்று நேற்றல்ல தொலைக்காட்சிகள் பரவலாக எல்லோருக்கும் எளிமையாக கிடைக்க தொடங்கிய காலகட்டத்திலேயே உருவான சொல்  இந்த 'பாரா சோசியல் ரிலேஷன்ஷிப்' (PSR) 1956 ஆம் ஆண்டு உளவியலாளர்களான டொனால்ட் ஹார்டன் மற்றும் ஆர்.ரிச்சர்ட் வோல் ஆகியோர் இந்த சொல்லை அறிமுகப்படுத்தினர். அதாவது தொலைக்காட்சியில் அதிக நாட்டம் கொண்டு பார்ப்பவர்கள் திரையில் வரும் கதாபாத்திரங்களுடன் நெருக்கத்தின் ஒரு மாயையை தன்மையை வளர்க்கத் தொடங்கினர் என குறிப்பிடப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பம் சார்ந்த பொழுதுபோக்கு என்பதே தொலைக்காட்சிதான். இன்றைய நிலைமையில் அசுர வேக சோசியல் மீடியா வளர்ச்சியில் அதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது யூகிக்க முடியாததே. இது முழுக்க முழுக்க மனநலம் சார்ந்ததே. கிட்டத்தட்ட ஒரு தலை காதலை போன்றது.

02
'Some people' who cherish illusion - increasing 'parasocial relationships' Photograph: (SOCIAL)
Advertisment

எளிமையாக சொல்லப்போனால் ஒரு நபர் தனக்குத் தெரியாத ஒருவருடன், குறிப்பாக அவர் திரை பிரபலமாகவோ அல்லது ஊடக ஆளுமை கொண்டவராகவோ இருப்பின் அவருடன் பரஸ்பரம் இல்லாவிட்டாலும் அவருடன் மாயப் பிணைப்பை மனதிற்குள் ஏற்படுத்தி கொள்ளும் நிலைமைதான். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் உச்சகட்ட ரசிக மனப்பான்மை.

பிடித்த நடிகர் அல்லது பிடித்த பிரபலங்களை அதீத ரசிக மனப்பான்மையோடு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவரை உடன் பிறந்த அண்ணன், தம்பி என ஒரு குடும்ப உறுப்பினராகவே நினைத்து பாவித்து கொள்ளும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

PSR எனும் இந்த உளவியல் கற்பனையானவை என்றாலும், அவற்றை அனுபவிக்கும் நபர்கள் உண்மை என்றே உணரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எதையுமே அதிக டோஸ் எடுத்துக்கொண்டால் தவறுதானே அப்படி போன்றதுதான்  PSRம்.

இன்றைய நாட்களில் பல வகைகளில் இதற்கு வடிவம் கொடுக்கப்படுகிறது

1.ஒரு ரசிகர் தனக்குப் பிடித்த நடிகர் அல்லது நடிகையுடன் ஆழமான தொடர்பை உணர்வது.
2.ஒரு யூடியூபரை தொடர்ந்து பார்ப்பவர், அவர்களைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் உணர்வது.
3.ஒரு குழந்தை ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மீது பற்றுதலை உருவாக்கி கொள்வது.
4.டிக்டாக் பிரபலங்களை பின் தொடர்ந்து அவர்களை ஒரு நண்பராக கருதுவது.
5. ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் மீது காதல் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுவது.

சமூக உறவுகளை வரையறுத்துக்கொள்ள குறிப்பிட்ட எந்தவித அளவுகோல்கள் எதுவும் இல்லை. ஆனாலும் பிரபலங்களைச் சுற்றி எப்போதுமே ஒருவித உற்சாகம், போற்றுதல், பெரும் சோகம் உள்ளிட்டவை இருப்பது இயல்பானது. ஆனால் ஒரு பிரபலத்தைப் பற்றிய ஒரு நபரின் உணர்வுகள் எல்லை மீறினால் PSR என்பதற்கான சில அறிகுறிகளும் உள்ளனவாம்.

01
'Some people' who cherish illusion - increasing 'parasocial relationships' Photograph: (SOCIAL)

அவை

1.தனிப்பட்ட முறையில் அவரை அறியாவிட்டாலும் அவர்களை நேர்மறையான பார்வையில் பார்ப்பது.
2.அவர்களின் வெற்றிகள் அல்லது தோல்விகளுக்கு உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளை அனுபவிப்பது.
3.அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தேடுவது.
4.மற்றவர்கள் அவர்களை விமர்சிக்கும்போது தற்காப்பு உணர்வு ஏற்படுவது.
5.அவர்களுடன் நாம் பேசி உரையாடல்கள் நடத்துவது போல் கற்பனை செய்வது.
6.சமூக ஊடகங்களில் திடீரென அவர் காணாமல் போய்விட்டால் இழப்பு உணர்வு ஏற்படுவது.
7.மற்றவர்களை விட நீங்கள் அவர்களை நன்கு புரிந்து கொண்டது போல் உணர்வது.
8.மற்றவர்களிடம் தான் ரசிக்கும் ஒரு பிரபலத்திற்காக சண்டையிடுவது.

சமீபத்திய எடுத்துக்காட்டாக அண்மையில் கரூரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு உயிர்களை பறிகொடுத்த குடும்பத்தினரில் சிலர் கொடுத்த தொலைக்காட்சி பைட்டுகள் PSR மனநிலையின் வெளிப்பாடாக இருந்தது என்ற பேச்சுகளும் உலா வந்தது. 

நல்லவை கெட்டவை என கொட்டிக் கிடக்கும் சோசியல் மீடியாவில் தேவையானவைகளை எடுத்துக்கொள்வது தனிமனித பொறுப்பே. இந்த தகவலைக்  கூட சோசியல் மீடியா வழியாகத்தான் நாம் படித்து அறிகிறோம் என்பதும் நிதர்சனமே...