Skip to main content

தடம் மாறும் தலைமுறை....

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம், மக்களின் பெரும்பான்மை பொழுதுகளையே விழுங்கி வருகிறது என்றால், அது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் தான். தொலைதூர தகவல் தொடர்புக்கு, பொழுதுபோக்கு தளங்களாகவும் ஆரம்பிக்கப்பட்ட இவை, இன்று மனிதனின் வாழ்வோடு இணைந்துவிட்டன என்றால் மிகையாகாது. மணிக்கு ஒருமுறையாவது இந்த சமூகவலைதளங்களுக்கு சென்று பதிவுகளை பார்க்கவில்லை என்றால் அன்றைய நாள் ஓடாது என்ற ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இன்றைய தலைமுறை. 

 

socialmedia usage of indian youngsters

 

 

ஒரு தசாப்தத்தை கடந்து மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த சமூகவலைதளங்களின் பயன்பாடு என்பது ஆரம்ப காலத்திற்கும், தற்போதைய நிலைக்கும் மிகப்பெரிய மாறுதலை சந்தித்துள்ளது என்றே கூறலாம். தொடக்கத்தில் எழுத்துவடிவிலாக இருந்த பதிவுகள் காலப்போக்கில் மீம் என்ற புகைப்பட வடிவ பதிவுகளாக பரிணமித்தது. ஆரம்பகாலகட்டத்தில் தனித்த நபரையோ, சூழலையே கிண்டல் செய்யும் விதமாக மட்டுமே அதிகளவில் வெளியாகி வந்த மீம்கள், தற்போது சமூக பிரச்சனைகள் சார்ந்தும், விழிப்புணர்வு மீம்களாகவும் மாற தொடங்கியுள்ளன. 

நடிகர்களுக்கான சண்டைகள், கிரிக்கெட், பெண்களை கேலி செய்வது போன்ற மீம்களில் திளைத்திருந்த இளைஞர்கள் தற்போது சமூகத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கேளிக்கை விஷயங்களை விடுத்து, ஜல்லிக்கட்டு, பேரிடர் கால உதவிகள் தொடக்கி மக்களவை தேர்தல், சந்திரயான் 2, சுபஸ்ரீ விபத்து என சமூகத்தை நோக்கி இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது என்றே கூறலாம். 

பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி யில் பணியாற்றும் இளைஞர்கள் என வளரும் தலைமுறையினரின் இந்த புதிய பார்வை, சமூகத்திற்கான ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை விரிவுபடுத்தியது, இந்தியாவின் அறிவியல் சாதனையாக சந்திரயானை சாமானியர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது, பள்ளிக்கரணையின் நடந்த ஒரு விபத்தை இந்திய அளவில் கொண்டுசேர்த்தது என இவை அனைத்திலுமே சமூகவலைதளங்களின் பங்கு அளப்பரியது என்றே கூற வேண்டும். 

பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட ஒரு தளத்திற்கு வழக்கமாகிப்போயிருந்த ஒரு கூட்டம், இன்று அதே தளத்தினை சமூக மாற்றங்கள் சார்பானதாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் வெற்றியும் பெற்றுவருகிறது என்பதே நிதர்சனம். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நடிகர் துதிகள் என இவை அனைத்தையும் கடந்து, மக்கள், சமூகம், சுற்றுசூழல், அரசியல் போன்ற பிரச்சனைகளுக்கு தங்கள் குரலை எழுப்புவதற்கான ஒரு தளமாக இதனைமாற்றி புதிய தடத்தினை இளைய தலைமுறையினர் அமைத்துவருவது ஆரோக்கியமான சமூகத்திற்கான ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
  life of the youth lost due to the negligence of the highway department!

கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால்  தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.