Advertisment

ஆறாத ரணமாகிப் போன அந்த இரவு; புதிய இந்தியா பிறந்து ஆறு ஆண்டுகள் நிறைவு

கத

நவம்பர் 8 ஆம் தேதி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சரியாக மணி இரவு 8.45 இருக்கும். தெலுங்கானா மாநிலத்தில்பிரியாணிக்கு மிகவும் பிரபலமான பாவர்ச்சி என்ற ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த அந்தத்தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்குத்தெரியவில்லை இன்னும் சில வினாடிகளில் கையறு நிலையில் நாம் நிற்கப் போகிறோம் என்று. உணவருந்திய அவர் 260 ரூபாய் பில்லுக்காக 500 ரூபாய்த் தாளைக் கொடுக்கிறார். சில வினாடிகளில் 500 ரூபாய் வேண்டாம் நூறு ரூபாய்த்தாள் இருந்தால் கொடுங்கள் என்று கல்லாவில் இருந்தவர் அவரிடம் கூறினார்.

Advertisment

இவ்வளவு பெரிய ஹோட்டலில் சில்லறைஇல்லையா? நாம பலமுறை ஆயிரம் ரூபாய்த்தாளை கொடுத்தே மீதி சில்லறைவாங்கி இருக்கிறோமே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பர்சில் பார்வையை செலுத்த, ஒரு சில பத்து ரூபாய்த்தாள்களும் சில 500 ரூபாய் தாள்களும் மட்டுமே இருந்தது. உடனடியாக என்னிடம் சில்லறைஇல்லை பையா...500 ரூபாய்த்தாள் மட்டும்தான் இருக்கு என்றான் அவன். செல்லாத நோட்டை வாங்கி நான் என்னசெய்வேன் என்று அவனுக்கு அருகிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்டுகிறார் அவர். அதிர்ந்துதான் போனான் ஒரு நிமிடம் அவன். கையறு நிலையிலிருந்த அவன் தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து பணத்தைத்தந்த பிறகே அவர் ஹோட்டலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

Advertisment

அந்த இளைஞன் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பணமதிப்பிழப்பு சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகின்றது. " நாட்டில் கருப்புப் பணம்அதிக அளவில் புழங்குவதாகவும், தீவிரவாதிகள் கைகளில் கணக்கற்ற கருப்புப் பணம் இருப்பதால், அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய்த்தாள்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும், அதில் ஏதேனும் சிரமம் 50 நாட்களைக் கடந்து இருந்தால், என்னை உயிருடன் கொளுத்தி விடுங்கள்" என்றும் பிரதமர் தொலைக்காட்சிகளில் அந்த இரவில் சபதம் எடுத்தார்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து வரும் இளம் தலைமுறையினர் பிரதமரின் உரையை யூடியூப் இணையதளத்தில் காணலாம். அப்போது அவரே கூட பிரதமராக இருக்கலாம். அல்லது அவர் முன்னாள் பிரதமராக இருக்கலாம். அப்போது அவர் நல்ல முறையில் இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம், அப்படி என்றால் பிரதமர் 50 நாட்களுக்குள் அந்தப் பிரச்சனைகளைத்தீர்த்து வைத்துள்ளாரே, ஆஹா... என்ன ஒரு வேகமான, விவேகமான பிரதமர் என்று கூட அவர்கள் நினைக்கலாம். ஆனால் இந்திய மக்கள் வன்முறையை வெள்ளைக்காரன் காலத்தில் கூட அதிகம் கையில் எடுக்காத நிலையில், தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஒரு பிரதமருக்கு எதிராக அந்தக் கடுமையான முடிவை எப்படி எடுப்பார்கள் என்று அந்த இளம் தலைமுறையினருக்கு யாராவது சொன்னால் மட்டுமே தெரியும்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தின் காரணமாக வங்கிகள் முன்பும், ஏடிஎம் மையங்களின் முன்பும் நின்று உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. 2000 ரூபாய் பெறுவதற்கு வங்கிகள் முன்பு ஏழை எளிய மக்கள் மணிக் கணக்கில் காத்துக் கிடந்தார்கள். சிலர் வரிசையில் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் நிற்க முடியாமலும், சிறுநீர் கழிக்க வெளியே சென்று வந்தால்கூட மறுபடியும் அதே வரிசையில் நுழைய விடமாட்டார்களே? என்று பலமணி நேரங்கள் காத்துக் கிடந்தார்கள். இது ஒருபுறம் என்றால், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் வெளிவந்த அதே தினத்தில் சேகர் ரெட்டி போன்றோர் வீடுகளில் வங்கிகளில் இருக்கும் நோட்டுகளை விட அதிகமாக புதிய 2000 ரூபாய்த் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

10 கோடிக்கும் அதிகமான பணம் அவர் ஒருவரிடம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுகள் வந்தது. யார் கொடுத்தது? தொழிலதிபர்கள் பலர் வீடுகளில் செய்யப்பட்ட சோதனையில் பலபேர் வீடுகளிலிருந்து கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்தில். ஆனால், ஒரே ஒரு 2000 ஆயிரம் ரூபாய்த்தாளுக்காக மணிக்கணக்கில் வங்கிகளின்முன் பொதுமக்கள் நின்ற சம்பவங்களும் நம் கண் முன்னால் வந்து போகாமல் இல்லை.

பொதுமக்களுக்கு எல்லையில்லா கஷ்டத்தைக் கொடுத்தஇந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிர்வாக ரீதியாக வெற்றி பெற்றதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் ஆர்பிஐ சொன்ன கணக்குச் சொல்கிறது. நவம்பர் 8க்குப் பிறகு தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. இதில் 97 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளுக்குத்திரும்பியுள்ளது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்தக் கசப்பு மருந்தை மக்களுக்கு அளிக்கிறோம் என்று கூறிய அரசாங்கத்திடமே 97 சதவீத பணம் திரும்ப வருகிறது என்றால் இந்தத்திட்டம் வெற்றியா? தோல்வியா? என்று இதற்கு மேலும் ஆராயத்தேவையில்லை.

ஆயிரக் கணக்கான சிறு வணிக நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை இந்த நடவடிக்கையின் காரணமாக முழுவதும் மூடினார்கள். ஏராளமானவர்கள் தங்களின் வேலையை இழந்து வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் சிரமப்பட்டார்கள். புதிய இந்தியா பிறந்தது என்று கொண்டாடியவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் கப்சிப் ஆனார்கள். ஆனால் ‘காலம் அனைத்தையும் மறக்கடிக்கும்’ என்ற சீனப் பழமொழி மட்டும் மறக்காமல் இந்தியத்தேர்தல் அரசியலுக்குப் பொருந்துகிறது. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் புதிய இந்தியா பிறந்து விடக்கூடாது என்ற ஏக்கம் மட்டும் பலரை தற்போது வரையிலும் வாட்டி வதைக்கிறது.

Demonitization
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe