ADVERTISEMENT

“இவ்வளவு பெரிய தண்டனை பாஜகவில் மட்டுமே கொடுப்பார்கள்; திருச்சி சூர்யா எப்படி தாங்கப் போகிறாரோ? ” - புதுமடம் ஹலீம் பொளேர்

11:35 PM Nov 25, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து ஆறு மாதம் நீக்கி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புதுமடம் ஹலீம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். அவரின் பதில் வருமாறு, "அந்த ஆடியோவை பீப் சவுண்டோடுதான் நாம் அனைவரும் கேட்டோம். அவ்வளவு அருவருக்கத்தக்க வார்த்தைகள் அடங்கிய ஆடியோவாக அது இருந்தது.

தற்போது திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறீர்கள். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார். அவருக்குப் பொறுப்புகள் கொடுக்கப்படும் என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். அதில் என்ன தண்டனை கொடுத்தார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதை எல்லாம் தண்டனை என்று பாஜகவில் மட்டும்தான் கொடுப்பார்கள். இவ்வளவு பெரிய தண்டனையை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

இன்றைக்கு பாஜக கட்சியினர், அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடந்த சில மாதங்களாக என்ன கூறி வருகிறார்கள்; தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வரக்கூட முடியாத நிலை நிலவி வருகிறது என்று வாய்க்கு வந்ததை எல்லாம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்கள். பெண்களிடம் பிரச்சனை செய்தால் கையை வெட்டுவோம் என்ற வரைக்கும் பேசினார்கள். இப்போது எதை வெட்டுவார்கள் என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அடுத்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூறினால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று குதிக்கும் அண்ணாமலை இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசியவரையும் சேர்ந்து கட்சியை விட்டு நீக்குகிறார்.

திமுகவில் ஒருவர் குஷ்புவைப் பற்றிப் பேசியதற்கு இவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் பேசியது தவறு என்பதை யாரும் மறுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவைச் சேர்ந்த கனிமொழியே இந்த விவகாரத்தில் குஷ்புவின் பக்கம் நின்று பேசினார்கள். அவர்களிடம் வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால் தற்போது பாஜகவில் நடைபெற்றுள்ள சம்பவம் சொந்தக் கட்சிக்குள்ளாகவே நடைபெற்றுள்ளது. அதைவிட மோசமான பீப் சவுண்ட் இல்லாமல் கேட்க முடியாது என்ற அளவில் இந்த ஆடியோ வெளியாகியுள்ளது.

ஆனால் இப்போது நடைபெறும் இந்த விவகாரத்தை எப்படி மூடி மறைக்கலாம் என்றே அவர்கள் திட்டமிடுகிறார்கள். அடுத்த கட்சி என்றால் பாய்வதும், சொந்தக் கட்சி என்றால் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதும்தான் அவர்கள் எண்ணமாக இருக்கிறது. அவர்கள் பேசிய ஆடியோ கூட நான் அண்ணாமலை அவர்களுக்கும், மற்ற கட்சியில் உள்ள மூன்று தலைவர்களுக்கும் கொடுத்துவிட்டேன் என்றுதான் ட்விட் போட்டுள்ளார். இன்னமும் கூட அந்த ட்விட் இருக்கிறது. அப்படி இருக்கையில் அவர்களிடம் இருந்த இந்த ஆடியோ எப்படி வெளியே சென்றது. இதற்கான மூலத்தைக் கண்டறிய வேண்டும். ஆனால் இது எதுவுமே பாஜகவில் நடைபெறாது." என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT