Skip to main content

மாணவிகளை இடித்து தள்ளிய கல்லூரி தாளாளரின் கார்! -டி.சி. கேட்டதால் ஆத்திரம்!

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 


சிவகாசி தாலுகா, சல்வார்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியிலிருந்து, நான்கு மாணவிகள் (பெயர்களைத் தவிர்த்துள்ளோம்) நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்கள். 

 

மாணவி ஒருவர் அழமட்டுமே செய்தார். “கரஸ்பான்டன்ட் அம்மா காரை விட்டு ஏத்திட்டாங்க. கீழே விழுந்துட்டேன். கால்ல காயம். ரத்தம் வருது..” என்று விம்மினார்.  


மாணவிகள் நால்வருக்கும் என்னதான் பிரச்சனை? 

 

2011-ல் தொடங்கப்பட்டது, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி. முதல்வரே இல்லாமல் கல்லூரியை நடத்துவதாகச் சொல்கிறார்கள், மாணவிகள். தற்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பலவும் சந்தித்து வரும் பொருளாதார பிரச்சனைகளை, இக்கல்லூரியும் எதிர்கொண்டு வருகிறது. அதனால், ஆரம்பத்திலிருந்த நற்பெயரை, கல்லூரி நிர்வாகத்தால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. 

 

முதலாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில், மாணவி ஒருவர் மட்டுமே படிக்கிறாராம்.  பொறியியல் படிப்புக்கேற்ற  உள்கட்டமைப்பு எதுவும் அங்கே சரியாக இல்லை என்று  கருதியதாலேயே, நல்ல கல்லூரிகளுக்கு ‘டிரான்ஸ்பர்’ வாங்கிக்கொண்டு செல்ல மாணவிகள் முடிவெடுத்துள்ளனர்.   ‘இக்கல்லூரியில் படித்தால் எதிர்காலம் என்னவாகுமோ?’ என்ற பயம் அந்த  நான்கு மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் ஏற்பட, கடந்த வாரம் முழுவதும் ‘டி.சி.’ கேட்டு அலைந்திருக்கின்றனர். 

 

அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத  கல்லூரி தாளாளர் பிருந்தா  “நீங்கள்லாம் வேற காலேஜுக்கு  போயிட்டீங்கன்னா.. இங்கே ஸ்ட்ரெங்த் குறைஞ்சிரும். டி.சி. தரமாட்டோம்.. அப்படியே டி.சி. வேணும்னா மொதல்ல ஒரு லட்ச ரூபாய் பணத்த கட்டுங்க. ” என்று கறாராகச் சொல்லிவிட, கல்லூரி வளாகத்தில் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் இன்று  அழுது புலம்பியிருக்கின்றனர். இதைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அக்கல்லூரியின் தாளாளர் பிருந்தா, காரில் ஏறி புறப்பட, மாணவிகள் மறித்துள்ளனர்.  தாளாளர் பிருந்தாவின் டிரைவர்,   விருட்டென்று மாணவிகள் மீது மோதுவது போல காரைக் கிளப்ப, அடிபட்டு கீழே விழுந்திருக்கிறார், ஒரு மாணவி.  

 

கல்லூரி நிர்வாகம் – மாணவிகள் மோதல் குறித்து வெம்பக்கோட்டை காவல்நிலையத்துக்கு தகவல் போக, போலீசார் வந்துவிட்டனர். வந்தவுடனேயே சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் “பிரச்சனை பண்ணுறதுக்குன்னே வந்திருக்கீங்களா?” என்று மாணவிகளிடமும் பெற்றோரிடமும் எகிறியிருக்கிறார். அவர்களோ “என்ன சார் இப்படி பேசுறீங்க.. பாதிக்கப்பட்டவங்க நாங்க.. எங்கள போயி ஸ்டேஷனுக்கு கொண்டு போயிருவோம்னு எதுக்கு மிரட்டுறீங்க?” என்று கேட்டிருக்கின்றனர். 

 

“காவல்துறையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது..” என்று பெற்றோர் தரப்பு நம்மிடம் குமுறிய நிலையில், அக்கல்லூரியின் தாளாளர் பிருந்தாவை, சரியான எண்ணில் தொடர்புகொண்டோம். நக்கீரன் என்று கூறியதுமே  “ராங் நம்பர்..” என்று லைனை துண்டித்தார். தொடர்ந்து தொடர்புகொண்டும், அவர் நம் லைனுக்கு வரவேயில்லை. 

 

‘திங்கட்கிழமை டி.சி. கொடுத்துவிடுவோம். பிரச்சனையை பெரிதாக்காதீர்கள்..’ என்று கல்லூரி தரப்பில் பெற்றோரை ‘கூல்’ செய்திருக்கின்றனராம். 

 

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் இதே நிலைதான்!