Skip to main content

சிவாஜி சார் என்னைப் பற்றி ரஜினியிடம் சொன்ன விஷயம்! - ரமேஷ் கண்ணா

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

சிவாஜி சார்... மிகப் பெரிய மனிதர். நான் சினிமாவுக்கு வரும் முன்பு, வீட்டில் பொய் சொல்லிவிட்டு, பள்ளிக்கூடத்தில் இருந்து பாதியில் வெளியே வந்து என சாகசங்கள் செய்து அவரது படங்களை திரையரங்குகளில் பார்ப்பேன். சினிமாவுக்கு வந்த பின்னருமே கூட எனக்கெல்லாம் அவரைப் பார்ப்பது பெரிய விஷயமாகத்தான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் சார் ஆஃபிஸ்ல நாங்க டிஸ்கஸ் பண்ணும்போது, வேலை முடிஞ்சதும் கிளம்பிவிட மாட்டோம். உட்கார்ந்து சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள் எல்லாம் பெரிய ஸ்க்ரீன்ல போட்டுப் பார்ப்போம். அதுதான் எங்கள் ரெஃப்ரெஷ்மெண்ட், எங்கள் உத்வேகம். அப்படி ஒரு பெரிய மனிதரான சிவாஜி சார் கூடயும் பழகும் வாய்ப்பைக் கொடுத்தது சினிமா.


 

 

sivaji ramesh kanna

சிவாஜி சார் மாதிரி இருக்கேனா? (ஹி... ஹி...)1998ஆம் வருஷம், 'படையப்பா' ஷூட்டிங்... கர்நாடகால மாண்டியா தாண்டி மேல்கோட்டை கோவில்ல படப்பிடிப்பு. அந்த ஏரியாவை சுத்தி பல நாட்கள் எடுத்தோம். சிவாஜி சார், ரஜினி சார்லாம் மைசூர்ல தங்கியிருக்காங்க. நாங்க அஸிஸ்டண்ட்ஸ், ப்ரொடக்ஷன் டீம் ஆளுங்களெல்லாம் வேற எடத்துல தங்கியிருந்தோம். தினமும் காலையில நடிகர்களை அழைத்துப் போகும் பொறுப்பு எங்களோடதுதானே? முதல் நாள், காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங். அங்க போகணும்னா அஞ்சு மணிக்கே கிளம்பணும். 'அவர் எங்க அஞ்சு மணிக்கு எந்திரிப்பார், எப்படியும் லேட் ஆகும்'னு நினைச்சுக்கிட்டே நானும் தேனப்பனும் அஞ்சே முக்கால் போல சிவாஜி சார் தங்கியிருந்த லலிதா பேலஸ்க்கு போனோம். அங்க போனா, பேலஸ் வாசல்ல விக், மேக்-அப் எல்லாம் போட்டு பேலஸ் ஓனர் மாதிரி சிவாஜி சார் முன்னாடி ரெடியா நிக்குறாரு.

 

melkote kaatchi

மேல்கோட்டை கோவில்எனக்கு அவரைப் பார்த்ததும் பக்குன்னு ஆகிடுச்சு. நான் ட்ரைவர்கிட்ட, 'வண்டியை நிறுத்தாம முன்னாடி தள்ளி போ'னு சொல்லிட்டு, தேனப்பனைப் போய் சிவாஜி சாரை கூட்டிட்டு வர சொன்னேன். கொஞ்சம் தள்ளி நின்னு பாக்குறேன். தேனப்பன் அவர்கிட்ட போனதும், அந்த சிம்மக் குரலில் கரகரன்னு கேக்குறார், "ஏன் லேட்டு?". இத்தனைக்கும் லேட் எல்லாம் ஆகல. நாங்க மேல்கோட்டை போய் சேருவதுக்கும் ஷூட்டிங்கில் மற்ற விஷயங்கள் தயாராவதுக்கும் சரியா இருக்கும். இருந்தாலும் அதை ஈஸியா எடுக்காம கேட்டார். இப்போ நினைக்கும்போதும் அவருடைய அந்த சின்சியாரிட்டி ஆச்சரியப்படவைக்குது. ஒன்னு உறுதியா புரியுது, திறமை எவ்வளவு இருந்தாலும் அர்ப்பணிப்பும் சேர்ந்துதான் நம் உயரத்தைத் தீர்மானிக்கிறது. நீங்களே உங்க திறமையையும் அர்ப்பணிப்பையும் கூட்டி, கழிச்சு, பெருக்கி, வகுத்துப் பார்த்து உங்க உயரத்தை கணக்குப் பண்ணிக்கலாம், வாழ்க்கையின் உயரத்தை...

சிவாஜி சாரை ஒரு காரில் ஏத்திக்கிட்டு, நாங்க இன்னொரு காரில் போனோம். மேல்கோட்டைக்குப் போய்ட்டோம். அங்க கோவிலுக்குப் போக படிப்படியா ஏறிப் போகணும். அவரது உயரத்துக்கு என்னையெல்லாம் அப்போது அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லைன்னு நான் எதுவும் பேசாம வந்தேன். சிவாஜி சாரை முன்னாடி விட்டுட்டு நாங்க பின்னாடி போனோம். ஒரு படி ஏறுவாரு, நின்னு திரும்பி என்னைப் பார்த்து முறைப்பார். 'என்னடா இது, லேட்டா வந்தது இவ்வளவு பெரிய குற்றமா, விட மாட்டேங்குறாரே'னு நான் தலையைக் குனிந்துகொள்வேன். கொஞ்ச தூரம் ஏறுவார், திரும்ப நின்று ஒரு முறை முறைப்பார். நான் முடிவு பண்ணிட்டேன், 'ஸ்பாட்டுக்குப் போனதுக்கு அப்புறம் இவர் கண்லயே படக்கூடாதுடா சாமி'ன்னு. இப்படியே ரெண்டு மூணு முறைப்புகளுக்குப் பிறகு மேலே போயிட்டோம். போனதும் சிவாஜி சார் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட போனார். 'போச்சுடா.. லேட்டா வந்ததை அங்கேயும் சொல்லி பிரச்சனை பண்ணப் போறாரோ'னு நினைச்சேன். எனக்கு லைட்டா கோபமும் வந்தது. 'என்னடா இவர் இப்படி பண்ணுறார்'னு தோணுச்சு.

 

sivaji ramesh kannaரவிக்குமார்கிட்ட என்னைக் காட்டி கேட்டார், "இந்தப் பையன் யாரு?" என்று. நான் எது வந்தாலும் பாத்துக்கலாம்னு நினைச்சு நின்றேன். லலிதா பேலஸ்ல எப்படி என் எதிர்பார்ப்பை உடைச்சாரோ அதே மாதிரி இங்கேயும் உடைக்கப் போறார்னு நான் நினைக்கல. "நம்ம கோ-டைரக்டர்தான் சார். என்ன ஆச்சு?"னு ரவிக்குமார் கேட்டார். "இவன்தான முத்துராமன் பையன் படத்துல நடிச்சவன்?"ன்னு கேட்டார். எனக்கு அதுவரைக்கும் அடிவயிற்றில் இருந்த சூடெல்லாம் அப்படியே ஜில்லுன்னு மாறுச்சு. "ரொம்ப சூப்பரா காமெடி பண்ணியிருக்கான்"னு அவர் சொல்ல, எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. யார் யார் வீட்டு வாசலில் காத்திருந்தேன், எத்தனை பேர்கிட்ட அவமானப்பட்டிருப்பேன், அடுத்தடுத்து படம் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு டிராப் ஆயிருக்கு, இது எல்லாமே இந்த ஒரு தருணத்துக்காகத்தானோனு தோணுச்சு. சிவாஜி சார் என்னை கவனிச்சிருக்கார். எனக்கு கஷ்டம் இருந்தப்போ கடவுள் மேல கோபப்பட்டுருக்கேன், இந்த கிஃப்டுக்காகத்தான் என்னை அந்த அடி அடிச்சுருக்காருன்னு நினைச்சுக்கிட்டேன்.

சிவாஜி சார் அதோட நிக்கலை. ரஜினி சார் வந்ததும் அவர்கிட்டயும், "இவன் யார் தெரியுமா?ன்னு கேட்டார். "தெரியுமே, நம்ம ரமேஷ்கண்ணா"னு சொன்னார் அவர். "முத்துராமன் பையன் கூட இவன் நடிச்ச படம் பாரு. சூப்பரா நடிச்சிருக்கான்"னு சொன்னார். ரஜினி சார் என்கிட்டே சொன்னார், "யோவ்...முப்பது வருஷமா நடிக்கிறேன்யா நான். என்னைப் பத்தி இவர் யார்கிட்டயும் சொன்னதே இல்லய்யா. உன் டைம் ஒர்க்-அவுட் ஆகிடுச்சுய்யா"னு. அடுத்து மணிவண்ணன் சார் வந்தார். அவர்கிட்டயும் சிவாஜி சார் என்னைப் பற்றி சொன்னார். மணிவண்ணன் சார் என்னிடம் சொன்னார், "டேய் என்னடா சிவாஜி சார் உனக்கு பி.ஆர்.ஓ (PRO - மக்கள் தொடர்பு அலுவலர்) வேலை பாக்குறார். ரொம்பப் பெரிய விஷயம்டா இதெல்லாம்" என்று. உண்மைதான் எனக்கு அதெல்லாம் அப்போ ரொம்பப் பெரிய விஷயம். இப்போவும் எனக்கு அது ரொம்பப் பெரிய விஷயம்.


 

sivajiஇப்படி சிவாஜி சாரோட அந்த அன்பினாலும் பண்பினாலும் எனக்கு அவர் மேல இருந்த பிரமிப்பு போய் மரியாதையும் பாசமும் அதிகமாச்சு. முடிந்த பொழுதெல்லாம் போய் பார்ப்பேன் அவரை. அவர் இறந்தபொழுது என்னால் அதைத் தாங்கிக்கவே முடியல. அன்னை இல்லத்தில் நாங்க எல்லோரும் இருக்கோம். என்னை டிவி செய்தியாளர்கள் வந்து சிவாஜி சார் பற்றி கேக்குறாங்க. பேசிக்கொண்டிருக்கும்போதே தாங்கமுடியாமல் அழுதுட்டேன். பேச்சு குழறியது. சுற்றி இருந்தவங்க பயந்துட்டாங்க. என்னை இழுத்து உக்கார வச்சுட்டாங்க. அப்படி ஒரு மனநிலை, சோகம் அப்போது. பின்னாடி பிரபு சாரே சொன்னார், "எங்க குடும்பத்துல இருக்கவங்க எப்படி கலங்கிப் போனாங்களோ, அந்த அளவுக்கு கலங்கிட்டாரு ரமேஷ்கண்ணா"னு.

அவ்வளவு சோகத்துல சிவாஜி சார் உடலை பெசன்ட் நகர் மயானத்துக்குக் கொண்டு போறோம். ரஜினி, கமல்... இப்படி முக்கியமானவர்கள் நெருக்கமானவர்கள் எல்லோரும் சிவாஜி சார் இருந்த வண்டியில் வர்றாங்க. மீதி நடிகர்கள் எல்லோரும் ஒரு லாரி, நடிகைகள் எல்லோரும் ஒரு லாரி. நான், சேரன், வடிவேலு இப்படி பல நடிகர்கள் லாரியில் இருந்தோம். லாரி மெல்ல நகர்ந்துச்சு. லாரிக்குப் பின்னாடியே ஒருத்தர் வந்தார். லாரியை விட அவர் அதிகமா அசைஞ்சு குலுங்கி வந்தார். சிவாஜி சார் மரணம் அவரையும் பாதிச்சுருக்கும்போல... ஃபுல்லா குடிச்சிருந்தார். எங்க லாரிக்குப் பின்னாடியே வந்தவர் திடீர்னு எங்களைப் பார்த்து, "டேய்... உங்களுக்கெல்லாம் வெக்கமாவே இல்லையா?"னு கேட்டார். எங்களுக்கு ஒன்னும் புரியல. "நீங்கெல்லாம் நடிகனாடா டேய், அவரு நடிகருடா" என்றார். அவர் பேசிய தோரணை, போட்ட ஆட்டம்லாம் பார்த்து சிரிப்பு வந்தாலும் 'உண்மையதான சொல்றாரு'ன்னு அமைதியா இருந்தோம். அந்த ஆள் விடல. பின்னாடியே வந்து, "ஏண்டா அப்பேர்ப்பட்ட நடிகரே போய்ட்டாரு, நீங்கெல்லாம் எதுக்குடா. நீயெல்லாம் நடிகனாடா டேய்..."ன்னு விடாம கேட்டுகிட்டே வராரு. பொதுமக்களும் பாக்குறாங்க, எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியல, சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்.

 

deathஅந்த ஆள் விடாம பெசன்ட் நகர் வரைக்கும் கூடவே வர்ராரு. எங்களை டிவியில் வேற காட்டுறாங்க. அதைப் பார்த்தவங்க ஃபோன் பண்ணி திட்டுனாங்க, "என்னடா சிவாஜி சார் சாவுல அப்படி சிரிக்கிறீங்க?"ன்னு. அவுங்களுக்கு என்ன தெரியும், அங்க நடந்த கூத்து? எல்லோருக்கும் சோகம்தான் சோதனையா வரும். எங்களுக்கு சிரிப்பே சோதனையா வந்துச்சு. அதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் நான் அதீத சோகத்துல அழுதுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துலயே, கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒருவர் மூலமா என்னை சிரிக்கவச்சது வாழ்க்கை. இப்படி சிவாஜி சாரின் மரணம் கூட எனக்கு மறக்க முடியாத நிகழ்வுதான்.