Skip to main content

சிவகங்கையில் பெருங்கற்கால கல்வட்டங்கள், கற்பதுக்கை எச்சங்கள், கற்காலக்கருவிகள் கண்டுபிடிப்பு!

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

sivagangai nalukottai near ancient stoneage things discovered

 

சிவகங்கை நாலுகோட்டை அண்ணா நகர் சி காலனி பகுதியில் பெருங்கற்கால கல்வட்டங்கள் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது.

 

சிவகங்கை நாலுகோட்டையை அடுத்த  அண்ணா நகர் சி.காலனி காட்டுப் பகுதியில் பரவலாக கற்கள் காணப்படுவதாக தமறாக்கி மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் தேவி சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா , தலைவர் நா. சுந்தரராஜன், செயலாளர் இரா.நரசிம்மன் ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, "நாலு கோட்டை பகுதியை ஒட்டியுள்ள ஓ.புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் சி காலனி பகுதியில் நாலு கோட்டையில் இருந்து பேரணி பட்டிக்கு செல்லும் சாலையில் வெட்டிக்கினத்தான் மேட்டுப் பகுதியில் கிழக்கே பெரியாறு கால்வாய்க்கு வடக்கு பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னமான கல்வட்டங்கள் பெரிதும் சிதைவுறாமல் காண கிடைத்துள்ளன.

 

கல்வட்டங்கள் : 

 

பெருங்கற்கால காலங்களில் பெரிய பெரிய கற்களை வட்டமாக அடுக்கி வைத்து அதன் உள்பகுதியில் இறந்தவர்களை அல்லது அவர்களது எலும்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை உள்ளே வைத்து புதைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. பொதுவாக அக்காலத்தில் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையிலோ மறுமை வாழ்விற்கு இவை தேவை என எண்ணியோ,உலகம் முழுவதும் இம்மாதிரியான பெருங்கற்கால சின்னங்கள் தொடர்ச்சியாக மக்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவை 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். 

 

கற்பதுக்கைகள் : 

 

sivagangai nalukottai near ancient stoneage things discovered

 

வட்டமாக பெருங்கற்களை அடுக்கி நினைவுச் சின்னங்கள் எழுப்பி இருந்தாலும் நடுவில் முதுமக்கள் தாழியை வைத்து புதைக்கும் வழக்கமும் பெருவாரியாக இருந்துள்ளன இவை காலத்தால் பிந்தையதாக இருக்கலாம். அதற்கு முன்னாள் இக்கல்வட்டங்களுக்கு உள்ளேயே கற்களாலே செவ்வக வடிவில் பெட்டி போன்ற அமைப்பில் கற்பதுக்கைகள் அமைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். அவ்வாறான எச்சத்தை இந்த கல் வட்டங்களில் காண முடிகிறது. 

 

இரண்டடுக்கு கல்வட்டம் : 

 

இங்கு காணப்படும் கல்வட்டங்களில் ஒன்றில் மட்டும் இரண்டு அடுக்காக கல்வட்டம் காணப்படுகிறது. இது மற்ற கல்வட்டங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதால் அப்பகுதியில் வாழ்ந்தவர்களில் தலைமையானவருக்காக எடுக்கப்பட்டதாக இவ்வடுக்கு கல்வட்டத்தை கருத இடம் உண்டு. 

 

செம்பிரான் கல்லினால் ஆன கல்வட்டம் : 

 

பெருவாரியான கல்வட்டங்கள் மலைக் கல்லான வெள்ளைக் கல்லிலே இருக்கிறது ஆனாலும் ஓரிரு இடங்களில் மட்டும் செம்புராங்கல்லினாலான கல்வட்டங்களையும் பார்க்க முடிகிறது. 

 

இரும்பு உருக்கு எச்சங்கள் : 

 

இப்பகுதியில் இரும்பு உருக்கு எச்ச கழிவுகளையும், இரும்பு போன்ற கற்களையும் காணமுடிகிறது, 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களிடம் இரும்பு பயன்பாடு இருந்ததை ஐங்குன்றம் மயிலாடும்பாறை அகழாய்வு உறுதிப்படுத்தி உள்ளது. 

 

கற்காலக் கருவி :  

 

sivagangai nalukottai near ancient stoneage things discovered

 

இப்பகுதியில் கற்கால கருவி ஒன்றும் கிடைத்துள்ளது. இது இரண்டு பக்கங்களிலும் துளை உடையதாக உள்ளது, மேலும் கருவியின் சுற்றுப்பகுதிகள் நன்கு பயன்படுத்தப்பட்டு தேய்ந்து உள்ளதை காணமுடிகிறது. இக்கருவி சுத்தியல் போல உடைப்பதற்காகவோ, வேட்டை விலங்குகளை நுட்பமாக எறிவதற்காகவோ, வேறு பயன்பாட்டுக்காகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் இதே போன்று வடிவிலான கருவி வேலூர் மாவட்டம் வலசை கிராமத்தில் சென்னை பல்கலைக்கழகம் வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களைக் கொண்டு நடத்திய அகழாய்வில் கிடைத்துள்ளது. 

 

குவித்து வைக்கப்பட்டுள்ள கற்கள் : 

 

sivagangai nalukottai near ancient stoneage things discovered

 

கல்வட்டங்கள் முன்நாளில் இப்பகுதியில் பரவலாக இருந்துள்ளன. விவசாய நிலப்பகுதிகளாக  மாற்றப்படும் பொழுது கல்வட்டங்களில் இருந்த கற்களை கட்டுமானம் மற்றும் வேறுபயன்பாட்டிற்காக எடுத்துச் சென்றவை போக மீதி கற்கள் ஒதுக்கி குவித்து வைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

 

சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் ஒக்கூர் பகுதியில் இதே போன்ற கல்வட்டங்கள் முன்னர் கண்டறியப்பட்டது அதன் தொடர்ச்சியாக இக்கல்வட்டங்களை காண முடிகிறது. மேலும் இப்பகுதியில் 2500 ஏக்கர் அரசு நிலமாக இருந்து பர்மா போன்ற இடங்களில் இருந்து வருகை தந்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக மூன்று குடியிருப்புகளாகவும் வேளாண் நிலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டு பிரித்தளிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தகவலை தொல்நடைக் குழுவிற்கு  தெரிவித்த ஆசிரியர் தேவி அவர்கள் இம்மாதம் மதுரையில் நடைபெற்ற அரசு ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.கல்வட்டங்கள், கற்பதுக்கை எச்சங்கள், கற்காலக் கருவி  கண்டறியப்பட்டதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது" என்று தெரிவித்தார். 

 

 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மதுரை, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Madurai, Sivagangai Police S.P. Transferred!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.