ADVERTISEMENT

90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமல்ல; இனி வருபவர்களுக்கும் கனவுக்கன்னிதான்...

11:20 AM Dec 02, 2020 | rajavel

ADVERTISEMENT

தமிழ் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாவர்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் கொடி கட்டி பறக்கின்றன. தற்போதைய படங்களில் வரும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று சொல்லப்படும் வகையில் அந்த காலகட்டத்தில் எக்கச்சக்க பாடல்களில் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்குப் படம் முழுமையடையும் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்தனர் இயக்குநர்கள்.

ADVERTISEMENT

அவரது கண்களைப் பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள், மேலும் அவரது கவர்ந்திழுக்கும் வனப்பும், மாடர்ன் டிரஸ்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்டாகவே இருந்தது. இதுவே குறுகிய காலத்தில் அவர் உச்சத்திற்கு செல்ல காரணமாக இருந்தது. திரைப்படங்களை தாண்டி வெளியே நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் அவர் உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அப்போதே அவர் தேர்ந்தெடுக்கும் உடைகளின் வண்ணங்களும் ஸ்டைலும் அனைத்து வயது பெண்களையும் பேச வைக்கும். காலத்தை தாண்டி மாடர்னாக தோன்றினார் சில்க்.

அனைத்து வயதினரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கேரக்டரில் நடித்து வந்த அவர், ஓரிரு படங்களில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். 1981ல் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு மனைவியாக நடித்திருப்பார் சில்க் ஸ்மிதா. குடும்பப் பெண்ணாகவும், படத்தில் தியாகராஜனின் தங்கையாக நடித்த ராதாவுக்கு அறிவுரை கூறும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதை பார்த்து இந்த கேரக்டரிலும் கலக்கியிருக்கிறாரே என ரசிகர்கள் வியந்தனர். படத்தின் இயக்குநர் பாரதிராஜாவே இதற்கு காரணம் என்று சொல்லுவார் சில்க் ஸ்மிதா.

அவருடன் பழகியவர்கள் அனைவருமே அவருடைய நல்ல மனதை சிலாகித்து சொல்வர். அவருடைய நண்பரான பிரபல ஸ்டில் போட்டோகிராபர் 'ஸ்டில்ஸ்' ரவி ஒரு முறை சில்க் ஸ்மிதாவை வைத்து படமொன்றை தயாரிக்கலாம் என்று அணுகியுள்ளார். 'பட வாய்ப்பு வருகிறதே, பணம் பெற்றுக்கொண்டு நடிக்கலாம்' என்று எண்ணாமல், 'என்னை வைத்துப் படம் எடுத்தால் கவர்ச்சிப் படம்தான் எடுக்க முடியும். அவரது நல்ல பெயருக்கு பாதிப்பு வரும்' என்று எண்ணிய சில்க், ஸ்டில்ஸ் ரவியின் மனைவிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி மறுத்துள்ளார். இது ஒரு உதாரணம். சில்க்குடன் பழகிய பலரும் அவரைப் பற்றி நல்ல விதமாகக் கூறியுள்ளனர். அதே நேரம், தொழிலில் அவர் மிக சீரியசானவராம். படப்பிடிப்புத் தளத்தில் அவர் கண்டிப்பானவராகவே அறியப்பட்டுள்ளார்.



வயதான தோற்றத்தில் அவர் திரையில் தோன்றியதில்லை. இளமையாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார். இளம் வயதிலேயே அவர் மறைந்தார். வயதானால் அவர் எப்படி இருப்பார் என்று யாரும் இதுவரை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது நம் அனைவருக்கும் தெரிந்த அந்த ஆழமான, ஆயிரம் கதைகள் சொல்லும் கண்களுடனான அந்தத் தோற்றம் காலத்தோடு உறைந்திருக்கிறது. 70ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமல்ல... இன்றும் இனி வருபவர்களுக்கும் கூட அவர் கனவுக்கன்னிதான்.

'வண்டிச்சக்கரம்' திரைப்படத்தில் முதன்முறையாக நடித்த அவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி என்பது உடலில் மட்டுமல்ல என்று நிறுவிய சில்க் ஸ்மிதா அதற்கு ஒரு திறமை வேண்டும் என்பதையும் தனது நடிப்பால் காட்டிச் சென்றார். 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த சில்க் ஸ்மிதாவிற்கு இன்று 61வது பிறந்தநாள். அவர் மறைந்து 25 வருடங்கள் ஆனாலும் அவர் நடித்த படங்களும், பாடல்களும் நெஞ்சில் இருந்து நீங்காதவை...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT