Skip to main content

“அண்ணாமலை செய்யும் விஷயங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது”  -  சித்திக்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 Siddique interview

 

தற்கால அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்மோடு திமுக செய்தித் தொடர்பாளர் சித்திக் பகிர்ந்துகொள்கிறார்

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கேட்டால், அதற்கு ஒப்புதல் தர ஆளுநர் மறுக்கிறார். தனக்கு அது குறித்த தகவல்களே வரவில்லை என்று பொய் சொன்னார். ஆதாரங்களைக் காட்டி நாம் உண்மையை நிரூபித்தோம். அண்ணாமலை சமீபத்தில் ஆளுநரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது அதிமுகவினரின் ஊழல் குறித்து பேசியிருப்பாரா என்கிற சந்தேகம் எழுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று இதே அண்ணாமலைதான் கூறினார்.

 

ஊழலின் மொத்த உருவமே பாஜக தான். பி எம் கேர்ஸ் மூலம் அரசுக்குப் பல கோடி ரூபாய் நிதி வந்தது. முதற்கட்டமாகவே 3500 கோடி ரூபாய் நிதி வந்தது. அந்த நிதி குறித்து கேள்வி எழுப்பியபோது, இது அரசு நிறுவனமே அல்ல என்று பதிலளித்தனர். அது அரசு நிறுவனம் இல்லையென்றால், பிரதமர் எதற்காக அதற்கு விளம்பரம் செய்தார்? கர்நாடக பாஜக ஆட்சியில் நடைபெற்ற 40% ஊழல் குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு பல எம்.எல்.ஏக்களை பாஜக பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதற்காகக் கிட்டத்தட்ட 6000 கோடி செலவு செய்தது.

 

தேர்தல் பாண்ட் மூலம் வசூலிக்கப்படும் நிதி குறித்த தகவலை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக அரசு கூறுகிறது. அண்ணாமலை செய்யும் விஷயங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது. எந்த வழக்கு வந்தாலும் நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். பாஜக ஆட்சியில் கொண்டுவரப்படும் திட்டங்களில் விளம்பரத்துக்கு மட்டும்தான் அதிகம் செலவு செய்கிறார்கள். மணிப்பூர் சம்பவம் இன்று இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இவ்வளவு நடந்தும் பிரதமர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார். 

 

கேள்விகளுக்கு அவரால் நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி பாஜகவை பயமுறுத்தியிருக்கிறது. சரியான கூட்டணி அமைத்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சிகளுக்கும் காட்டினார். அடிப்படை மனிதநேயமற்றவர் சீமான். வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றி அவர் பேசிய பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் இருக்கின்றன. பாஜகவின் கொள்கைகளை வேறு வகையில் பேசக்கூடியவர்தான் அவர். இன்று இந்தியாவில் பாஜகவை எதிர்க்கக் கூடிய வலிமை மிகுந்த தலைவர் முதல்வர் தளபதி தான். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பதில் அவர்தான் முன்வரிசையில் நிற்கிறார்.