Skip to main content

ஸ்டாலின் படம் பார்க்கக்கூடாதா...? அண்ணாமலை விமர்சனம் நியாயமா...? - எஸ்.பி. லட்சுமணன் பேட்டி

Published on 23/11/2022 | Edited on 24/11/2022

 

hg

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி வெளியீட்டில் வெளியான ‘லவ் டுடே’ படம் தொடர்பாகப் பேசினார். தமிழகத்தில் மழை பாதிப்பு தீராமல் இருக்கிறது. எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் முதல்வருக்கு மூன்று மணி நேரம் படம் பார்க்க நேரம் இருக்கிறதா என்ற தொனியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

" யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி அப்பா லவ் டுடே படத்தைப் பார்த்துவிட்டு நல்லா இருப்பதாகக் கூறினார்" என்று அவர் கூறிய அடுத்த நாளே முதல்வரையும் உதயநிதியையும் விமர்சனம் செய்தார் அண்ணாமலை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, அண்ணாமலையின் விமர்சனம் சரியா என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " திமுகவில் அடுத்த முகமாக உருவாகி வருபவர் உதயநிதி. அவர்தான் தந்தைக்குப் பிறகு கட்சியில் அனைத்தும் என்று சொல்லப்படுபவர். அடுத்த முதல்வர் பதவி வரைக்கும் தொண்டர்களால் கொண்டு செல்லப்படுபவர். 

 

அப்படி இருக்கையில் அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் எதிர்க்கட்சியினர் தீவிரமாகப் பார்ப்பார்கள். குறிப்பாக எப்படி திமுகவை எதிர்த்து அரசியல் செய்யலாம் என்று கொடாக்கண்டனாக இருக்கும் பாஜக அவரை தீவிரமாகக் கவனித்து வருகிறது. இந்த நேரத்தில் உதயநிதி அரசியலில் தீவிரம் காட்ட வேண்டும். அவரை தொழில் செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அரசியலை அவர் இன்னும் தீவிரமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஆழமாக அவர் சினிமாவுக்கு சென்றிருக்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

 

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அவர் அமைச்சர் ஆகப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. படங்கள் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்ற பேச்சுக்கள் வரை எழுந்தது. வெளிவருகின்ற படங்கள் எல்லாம் அவர் வெளியீட்டில் வருகின்றபோது ஏற்படுகின்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறேன். தொழில் செய்யாதீங்க என்று சொல்லவில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்புள்ள நிலையில் இதைத் தவிர்க்க வேண்டும். 

 

இந்த விமர்சனங்களைத் தவிர்த்து விட்டு அவர் தமிழக பிரச்சனைகளில் இன்னும் தீவிர கவனம் காட்ட வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சனையில், கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் என்ன நடைபெற்றது; அதிகாரிகள் என்ன தகவலை அப்பாவிடம் தந்தார்கள்; அப்பா அதற்கு என்ன செய்தார்; என்ன செய்யத் தவறினார் என்பது குறித்து இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதில் அவர் கவனம் செலுத்தினால் மட்டுமே அவர் எளிதில் நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.

 

 

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்