Skip to main content

ஒரு தலைவர் மக்களைச் சந்திப்பது கொண்டாட்டத்துக்கு உரியதா? - மருத்துவர் ஷாலினி பதில்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

df

 

அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்வதும், மக்களைச் சந்திப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், தற்போது அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பொதுமக்களால் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல்காந்தி யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபர்களுடன் பிரியாணி சமைத்து உண்டார். இது பலரால் பாராட்டப்பட்டாலும், சிலர் விமர்சனமும் செய்கிறார்கள். அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதா, அவர்கள் இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தமிழகத்திற்கு வந்தது, மக்களைச் சந்தித்து உரையாடியது என அனைத்துச் செய்திகளிலும், சமூக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றது. 'தமிழ் வணக்கம்' என்று பெயர் வைத்தாலும் இவை எல்லாமே தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மட்டுமே நடைபெறுகிறது, இவை எல்லாமே தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. பாஜக தலைவர்களும் இவ்வாறு மற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி உள்ளார்கள். இதில் உண்மைத் தன்மை இருக்கிறதா? அல்லது இவை அனைத்தும் தேர்தலுக்காகச் செய்யப்படுவதாக நினைப்பதா?

 

அரசியல் கட்சிகள் என்றால் அவர்களின் கடைசி நம்பிக்கை வாக்கு அரசியல்தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எல்லோருக்கும் பொதுவான விதி ஓட்டு எண்ணிக்கையை அதிகரிப்பதுதான். எனவே பொதுப்படையாகப் பார்க்கும் போது நம்மீது அவர்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களின் குறைந்த பட்ச நேர்மையை நாம் பார்க்க வேண்டும். இல்லை என்றால் தேர்தலுக்காக அடிக்கின்ற ஸ்டண்டா? என்பதை நாம் சோதனை செய்துதான் அறிய முடியும். வெளிநாட்டில் எல்லாம் நேருக்கு நேர் பேசி தங்களின் நேர்மையை வெளிப்படுத்துவார்கள். ஆனால், அதனை இங்கே செயல்படுத்த முடியாது. நாம் மொழிக்கு மயங்கியவர்கள். 

 

அவர்கள் நாம் நம்பும்படி பேசி நம்மை ஏமாற்றவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அவர்கள் சொல்வதைச் செய்வார்களா என்பதற்கு உத்தரவாதமே கிடையாது. இவர்கள் எந்த அளவுக்கு நமக்கானவர்கள், நாம் சொல்வதை தேர்தல் முடிந்ததும் செய்வார்களா என்பதுதான் நமக்கு இருக்கும் கேள்வி. சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வந்தபோது அரசியலிலும் அப்படி நேர்மையாக இருப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது அப்படி முடியாது. சமூக ஊடங்கள் பெரியதாக வளர்ந்துவிட்ட நிலையில் பொதுமக்கள் அதிகம் ஏமாற வாய்ப்பில்லை. எல்லோருக்குமே இவர்கள் உண்மையைச் சொல்வார்களா அல்லது போங்கு அடிக்கிறார்களா என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் பக்கும் வந்துவிட்டது. மனிதர்களின் அலங்கார வார்த்தைகளை, தற்போது எளிதில் யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

 

வடிவேல் ஒரு படத்தில் குப்பைகளை எடுத்துவந்து ரோட்டில் போட்டு அதைப் பொறுக்குவதைப் போல் போட்டோ எடுத்துக்கொள்வார், அதைப் போலத்தான் இதையும் பார்க்க வேண்டுமா?

 

அதைத்தான் மாமல்லபுரத்தில் நாம் நேரில் பார்த்தோமே, எல்லோரையுமே நாம் அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. எல்லாத் தலைவர்களும் மற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பிடுகிறார்கள். ஆனால் அதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எப்படிச் சாப்பிட்டீர்கள் என்று தான் பார்க்கிறோம். என்ன செய்தார்கள், உப்பு போட்டீர்களா, என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மீடியா உடன் மக்கள் அதிகம் பழகிவிட்டதால் அவர்களை ஏமாற்றுவது என்பது சற்று கடினமான ஒன்று. 

 

ஒரு தலைவர் மக்களைச் சந்திப்பது என்பது கொண்டாட்டத்துக்கு உரியதாகப் பார்க்க வேண்டுமா? 

 

அதை நாம் கொண்டாடத் தேவையில்லை, அந்தச் சந்திப்பைப் பற்றி பெரிதாகப் பேசவும் தேவையில்லை, ஆனால் எந்த மனநிலையில் அவர் இருந்தார் என்பது மிக முக்கியம். சில தலைவர்கள் தட்டிவிட்டு விடுகிறார்கள், சிலரை தொட விடாமல் டிஸ்டென்ஸ் மெயின்டெண்ட் செய்கிறார்கள். கேமரா இருந்தால் போதும் என்று செயல்படுகின்ற தலைவர்களும் இருக்கிறார்கள். நான் நேரடியாக சென்று ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டாம், திருமாவளவனைப் பார்க்க வேண்டாம். ஒரு வீடியோவை பார்த்தே அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இந்த விஞ்ஞான காலத்தில் நம்மால் கண்டறிய முடிகிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. 

 

cnc

 

இந்த மாதிரி நிகழ்வுகள் ஒரு செட்டப் மாதிரி இருப்பதாகக் கூறப்படுவதைப் பற்றி? 

 

எல்லாக் கட்சிகளும் செட்டப் தான் செய்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த செட்டப்பில் அவர்கள் எந்த அளவு உண்மைத் தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதை மக்கள் கண்டுபிடித்துக் கொள்வதே மிக முக்கியம். அனைத்துமே செட்டப் செய்ய முடியாது. பேசுவதை, நடந்து கொள்வதை செட்டப் செய்ய முடியாது இல்லையா? இவ்வாறு குறைந்தபட்ச அளவு அவர்களின் செயல்பாட்டை நாம் கண்டு படித்துக்கொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியம். முழுவதுமாக யாராலும் நடிக்க முடியாது. எனவே குறைந்த பட்ச நேர்மையில் யார் மக்களுக்கானவர்கள் என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.