அன்றாடம் வியர்வை சிந்த உழைக்கும் அடித்தட்டு மக்கள், மத்திய தர மற்றும் சாமானிய மக்கள் என்று கலவையான ஜனத்தொகையைக் கொண்ட இந்தியா. பொருளாதாரப் பாதையில் முன்னேறுவதற்காக ஓடிக்கொண்டிருக்கும் இந்தியாவின் கால்களை முறித்துப் போடுகிற வேலையில் இறங்கியிருக்கின்றன அந்நிய நாடுகள். கோடி கோடியாக இறக்குமதியாகும் போலிச் சரக்குகள் மூலம் அந்நாடுகள் பொருளாதாரத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுதான் நெஞ்சைப் பதற வைக்கிறது.

Advertisment

துபாய் நாட்டின் பிரசித்தி பெற்றது அங்குள்ள ஜபல் அலி துறைமுகம். அங்கிருந்து இந்தியாவுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல கோடிகள் அடங்கிய மதிப்புகளைக் கொண்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக். 18 அன்று ஜபல் அலி துறைமுகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் ஒன்று வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட ஒரு கண்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வெட் டேட்ஸ் எனப்படும் ஈரப்பதமான பேரிச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதைக் குறிவைத்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த நிறுவனம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தபோது அது போலி என்று தெரியவந்திருக்கிறது. அதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டெய்னரைத் திறந்து சோதனை போட்டிருக்கின்றனர்.

Advertisment

அதில் பாதியளவுக்கு பேரிச்சம்பழம் பாக்கெட்கள் இருந்திருக்கின்றன. இதில் சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதன் பின்னால் மறைக்கப்பட்டிருந்த டின் ஷீட்டை அகற்றி சோதனையிட்ட போது அதில் பண்டல் பண்டலாக சிகரெட் பெட்டிகள் பதுக்கி வைத்துக் கடத்தி வரப்பட்டது தெரியவர அவைகளை சோதனையிட்டதில் 1300 பெட்டிகளில் சுமார் 20 லட்சம் எண்ணிக்கையிலான சிகரெட்டுகள் (கோல்டு பிளாக் என அச்சிடப்பட்ட பிராண்ட்) இருப்பதைக் கண்டு புலனாய்வு அதிகாரிகளே அதிர்ந்திருக்கிறார்கள். அதன் மதிப்பு மட்டும் சுமார் 4 கோடிக்கு மேல் இருக்குமாம். அவைகள் போலி என்று தெரியவர சிகரெட் பெட்டிகளோடு குறிப்பிடிப்பட்ட 55 லட்சம் மதிப்புள்ள பேரிச்சம்பழப் பாக்கெட்டுகள் என மொத்த சரக்கையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை இறக்குமதி செய்த அந்த நிறுவனம் பற்றிய விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

067
Shocking 'report' - fake goods worth crores are being sold Photograph: (thoothukudi)
Advertisment

கடந்த ஆக 20 அன்று இதே போன்று துபாய் துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் மூலம் வந்த 3.75 கோடி மதிப்பிலான சிகரெட்களும் பிடிபட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இந்தளவு கடத்தல் சிகரெட் பிடிபட்டதுடன், அவைகள் அனைத்தும் போலியான சிகரெட்டுகள் என்பது மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அதுமட்டுமின்றி அதேபோன்று கடந்த மாதம் சீனாவின் துறைமுகமான நிங்போவிலிருந்து தூத்துக்குடி வந்த கப்பலில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அடுத்தடுத்து 4 கண்டெய்னர்கள் வந்திருக்கின்றன. இந்த கண்டெய்னரின் சரக்குகளின் இறக்குமதி பொருட்களுக்கான ஆவணங்களில் ஹெல்மெட்கள், விளையாட்டு உபகரணமான க்னீ பேட், மற்றும் டூத் பிரஷ் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் 4 கண்டெய்னர்களின் டெலிவரியை நிறுத்தி அவைகளைச் சோதனையிட்டதில் அதில் சட்ட விரோதமாக சீனாவிலிருந்து  பொம்மைகள் மற்றும் ஷூக்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்திருக்கிறது. இவற்றை இந்தியாவிற்குள் கொண்டுவருவதற்கு விதிப்படி முறையான தரச்சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவைகள் இல்லாமல் போனதால் சோதனையில் தரமற்றவை என்பது தெரிய வர மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 7 கோடி மதிப்புள்ள அவைகளை பறிமுதல் செய்து அதை இறக்குமதி செய்தவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று கோடி கோடியாக போலியான தரமற்ற சரக்குகள் கப்பல் மூலம் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு புழக்கத்தில் விடப்படுவது சாதாரண விஷயமல்ல. அது இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் செயல் என்று பேச்சுக்கள் அடிபட்ட நேரத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் வணிகம் சார்ந்த புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில்,

'இப்படி கோடிகோடியாக இறக்குமதி செய்யப்படும் போலிச் சரக்குகள் இந்தியாவிற்குள் புழக்கத்தில் விடப்படுவது நமது பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்றே தெரிகிறது. ஏனெனில் கடத்தல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் வெளிநாடுகளின் போலியான தயாரிப்புகள் என்கிறது விசாரணை ரிப்போர்ட். அண்மைக் காலங்களில் பிடிபட்ட அனைத்து சிகரெட்களும் போலியான தயாரிப்புகள். இந்தியாவில் பிரபல நிறுவனம் தயார் செய்யும் மார்க்கெட்டில் ரன்னிங்கில் இருக்கும் பிராண்டட் சிகரெட்களை போன்று வெளிநாடுகளில் போலியாகவே தயார் செய்யப்பட்டு அச்சு அசல் மாதிரி அந்த நிறுவனத்தின் லேபிளோடு சந்தேகத்திற்கிடமின்றி பேக் செய்து அனுப்பி விடுகிறார்கள். சோதனையின் போது சிக்கிக் கொள்ளாமலிருக்க சிகரெட் பாக்கெட்களை வேறு பெயர் கொண்ட பேப்பரில் பேக்கிங் செய்துவிடுவார்கள். இது போன்ற சரக்குகள் கோடி கோடியாக கண்டெய்னர் மூலம் துபாயிலிருந்து இறக்குமதியாகிறது. மிகவும் சல்லிசான விலையில் அனுப்பப்படும் இந்த சிகரெட்டுகள் மற்றும் பொருட்களின் வணிகத்தில் பெங்களூரைச் சேர்ந்த கம்பெனிகளே ஈடுபட்டிருக்கின்றன.

போலியான பெயர்களில் இறக்குமதி செய்யும் இந்த நிறுவனங்கள் துபாயிலிருந்து போலிச் சரக்குகளின் கப்பல் கிளம்பும்போதே இங்கு அவைகளை சந்தைப் படுத்துவதற்காக அனைத்து ஏற்பாட்டையும் செட் செய்து வைத்திருப்பார்கள் கப்பல் துறைமுகத்திற்கு வந்தவுடனேயே வேகவேகமாக அவைகளை டெலிவரி எடுக்கும் நிறுவனங்கள் சரக்குகளை ஆங்காங்கேயுள்ள தனது விற்பனை ஏஜண்டுகளுக்கு உடனடியான அனுப்பி மார்க்கெட்டிங் செய்து விடுவார்கள். இந்த போலிகளின் விலையும் குறைவாக இருப்பதோடு பிராண்டட் கம்பெனி சரக்கு என்ற போர்வையில் பொருட்கள் விற்று தீர்ந்து விடும். இதுபோன்ற வழிகளில்தான் போலிகள் இங்கு ஊடுருவுகின்றன. இதன் மூலம் கம்பெனிகள் கோடிகோடியாக லாபம் பார்த்துவிடுகின்றன. இதுமட்டுமல்ல கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பான மான்செஸ்டர் சிகரெட்கள் கன்டெய்னரில் கடத்திவரப்பட்டபோது தூத்துக்குடியின் கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதுபோன்று மூன்று முறை கடத்தி வரப்பட்ட மான்செஸ்டர் சிகரெட்களின் கன்டெய்னர்களை பறிமுதல் செய்திருக்கின்றனர் கியூ பிரிவினர்.

072
Shocking 'report' - fake goods worth crores are being sold Photograph: (thoothukudi)

இப்படியான ரூட்டில் தான் சீனாவின் தயாரிப்புகளும் இறக்குமதியாகின்றன. இங்கே தயாரிக்கப்படும் பொருட்களின் அடக்க விலையில் இருந்து சீன தயாரிப்பின் அடக்க விலை பல மடங்கு குறைவானது. உதாரணமாக இங்கே ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிற தரமான பொருளை சீனா 100 ரூபாய்க்கு கொடுத்துவிடும் ஆனா பொருட்கள் தரமற்றதாக இருக்கும். இந்த வேறுபாட்டை வாங்குபவர்கள் பார்ப்பது கிடையாது. அவர்கள் விலை குறைவு என்பதைத் தான் பார்ப்பார்கள். ஆயிரம் ரூபாய் பெறுமான பட்டாசுகளை சீனாவின் தயாரிப்பு 100 ரூபாய்க்கு கிடைப்பதும் இந்த வழியில் தான். சீனாவை பொருத்தளவு அதன் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே நோக்கம் ஆனாலும் பொருளாதாரத்தில் சீனா உச்சத்தில் இருக்கிறது. தனது சீப்பான தயாரிப்புகளை சந்தைபடுத்துவதற்காகத்தான் சீனா பிராண்டட் சரக்கென்றும் தரச் சான்றுள்ளது என்றும் போலிகளை இந்த வழியில் இறக்குமதி செய்துவிடுகிறது. இதன் மூலம் சீனாவின் பொருளாதாரம் உயர நேரிடுகிறது.

இப்படி கோடி கோடியாக போலி சரக்குகள் இங்கே விற்பனையில் ஊடுருவும்போது நமது நாட்டின் தரமான தயாரிப்புகளின் விற்பனை என்பது கேள்வியாகி விடுகிறது. உற்பத்தி குறைவு அடுத்து இந்திய பொருளாதாரமும் சீர்குலைய நேரிடுகிறது. இது நமது பொருளாதாரத்தின் மீதான ஆபத்தான தாக்குதலாகத் தான் தெரிகிறது.

066
Shocking 'report' - fake goods worth crores are being sold Photograph: (thoothukudi)

இதுபோன்ற போலிச் சரக்குகளை வெளி நாடுகளில் தயார் செய்து அனுப்புகிற நிறுவனங்களுக்கிடையே போட்டாபோட்டி. லாப விகிதாச்சாரம் வளர்ச்சி, பங்கீடு பிரச்சனை மார்க்கெட்டிங் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது அதிலுள்ள முக்கியஸ்தர்கள் போன்ற பாதிப்பிற்குள்ளானவர்களே இந்த வகையான சரக்கு இந்தத் துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலில் அனுப்பப்படுகிறது என்பதையும் அந்த கண்டெய்னரின் எண், குறியீடு, அதை டெலிவரி எடுக்கிற நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்குள்ள துறைமுகத்தின் டி.ஆர்.ஐ. எனப்படும் டிபார்ட்மென்ட் ஆஃப் ரெவன்யூ இன்டெலிஜென்ஸ் என்கிற மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்குப் போட்டு கொடுத்துவிடுவார்கள். அதனடிப்படையில் தகவல்களை சரிபார்க்கும் டி.ஆர்.ஐ. அந்த கண்டெய்னரின் சரக்கை டெலிவரி எடுப்பதற்காக வருகிற நிறுவனத்தினரை கண்காணித்துக் காத்திருப்பார்கள். கப்பல் வந்ததும் கண்டெய்னர் அன்லோடிங் ஆகி டெலிவரியின் போது அதனை பெற வருகிற அந்த நிறுவனத்தினரையும் கண்டெய்னர் சரக்கையும் தங்கள் பிடிக்குள் டி.ஆர்.ஐ. கொண்டுவந்துவிடும்.

தவிர துபாய் துறைமுகத்தில் கப்பலில் லோடிங் மற்றும் அன்லோடிங் செய்யப்படும் கண்டெய்னர்கள் அனைத்தும் இயந்திரம் மூலம் இயக்கப்பட்டு கம்ப்யூட்டரின் கண்காணிப்பிற்குள் வந்துவிடும். இதனால் அங்கு வேலைப் பளுவும் குறைவு. இதை கையாள்வதற்காக பணியாட்களும் ஈடுபடுத்தப்படுவதில்லை. எனவே அங்கிருந்து அனுப்பப்படும் கண்டெய்னர்களில் பழுதிருக்காது என்பதே அதிகாரிகளின் கணக்கு. அதனால் அங்கிருந்து வருகிற 100க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களில் தோராயமாக 10 கண்டெய்னர்களை மட்டுமே சுங்கத் துறையினர் ஸ்கேனிங் செய்வார்கள். அதில் ஏதாவது சந்தேகத்திற்கிடமானவைகள் சிக்கினால் மாட்டிக்கொள்ளும். ஆனால் சிகரெட் போன்ற பிற கடத்தல் போலிச் சரக்குகள் ஸ்கேனிங்கில் தெரிவதில்லை. அதுவும் இங்கேயிருக்கிற குறைபாடு.

068
Shocking 'report' - fake goods worth crores are being sold Photograph: (thoothukudi)

இதுபோன்ற போலிச் சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் உள்ள பிற துறைமுகத்தை நாடாமல் தூத்துக்குடி துறைமுகத்தை மட்டுமே இவர்கள் பயன்படுத்துவதற்கும் வேறு ஒரு சிறப்புக் காரணமும் உள்ளது. கப்பலில் வரும் கண்டெய்னர்கள் இங்கே வேகமாகவே கையாளாப்பட்டு துறைமுகத்தின் பெர்த்துகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. தொடர்ந்து சுங்கத்துறை கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் சோதனைகள் உள்ளிட்டவைகள் தாமதமின்றி நடத்தப்பட்டு கண்டெய்னர்கள் உரிய பார்ட்டியிடம் உடனடியாக டெலிவரி செய்யப்பட்டுவிடும். தொடர்ந்து டெலிவரியான கண்டெய்னர்களை உரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான தூத்துக்குடி நகரின் சாலைகளில் டிராபிக் இடைஞ்சல் என்பது கிடையாது. இதுபோன்ற வசதிகளுக்காகத்தான் இங்கே ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் விரைவாக நடப்பதற்கு காரணம். இந்த சந்தடி சாக்கில்தான் போலிச் சரக்குகளின் இறக்குமதியாளர்கள் தொடர்ந்து தங்களுக்கான வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ளுவதால்தான் இவைகள் தொடர்கின்றன' என்றார் அந்த அதிகாரி.

069
Shocking 'report' - fake goods worth crores are being sold Photograph: (thoothukudi)

கடத்தப்பட்ட இந்த போலி சிகரெட் கண்டெய்னரை, மத்திய வருவாய் புலனாய்வு துறையின் சீனியர் அதிகாரியும் கூடுதல் இணை இயக்குனரான முரளி தலைமையிலான அதிகாரிகள் வளைத்திருக்கிறார்கள்.

அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது. இதுபோன்று கடத்தப்படுகிற போலிச் சரக்குகள் இங்கே ஊடுருவுகிறபோது நமது நாட்டின் உற்பத்தி பாதிப்பதோடு சமூகப் பாதிப்பும் ஏற்படுகிறது. எங்களின் நெட்வொர்க் வெளிநாடுகளின் துறைமுகங்கள் வரை நீண்டுள்ளன. போதை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவானாலும் டி.ஆர்.ஐ.க்கு தகவல் முழுமையாக வந்துவிடும். சீன கண்டெய்னர் சரக்குகள் கடத்தப்பட்டதில் நான்கு பேரைக் கைது செய்திருக்கிறோம். போலி சிகரெட் விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனம், கடத்தல் நபர்கள் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அடையாளம் கண்டுவிடுவோம்' என்றார்.

ஒரு நாடு எந்த வகையான தாக்குதல்களையும் சந்தித்து சமாளித்துவிடும். ஆனால் ஆபத்தான பொருளாதார தாக்குதலை எதிர் கொள்வதென்பது சவாலானது என்கிறார்கள் வணிக வல்லுனர்கள்.