Skip to main content

எலானை தெரியுமா..? உதவிக்காக அல்லாடிய உலக கோடீஸ்வரனின் கண்ணீர் பக்கங்கள்!

 

shocking childhood of elon musk

 

தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், புதுமையான யோசனைகளாலும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவரும் எலான் மஸ்க்,  சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கி அதிரவைத்தார். இதுமட்டுமில்லாமல் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாகவே எலான் மஸ்க் என்பவரை பல கோடி இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். இன்று இப்படி புகழின் உச்சியைத் தொட்டுள்ள எலான் மஸ்க்கின் பள்ளிப் பருவமும், பால்ய பருவமும் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை. 

 

தென்னாப்பிரிக்காவிலுள்ள பிரெட்டோரியாவில் பிறந்த எலான் மஸ்க், சிறு வயது முதலே பல வகைகளில் தனித்துவமானவர். அப்படி தனித்துவமாக வாழ வேண்டும் என்கிற பாதையை அவர் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது, அவரின் குழந்தைப்பருவத்தில் நடந்த சில மோசமான சம்பவங்கள் தான் என்று அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

 

எலானுடைய தந்தை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். தாய் கனடாவைச் சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு எலானை சேர்ந்து மொத்தம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். எலான் மஸ்க்கிற்கு பத்து வயது இருக்கும்போது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். அப்போது தாயின் கட்டுப்பாட்டில்தான் மூன்று குழந்தைகளும் வளரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தன் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் துணிச்சலான ஒரு முடிவை எடுக்கிறார் எலான். "தந்தை நம்மையெல்லாம் பிரிந்து மிகவும் தனிமையில் இருப்பார்" என்று பரிதாபத்துடன் தனது தாயிடம் கூறிவிட்டு தந்தையின் கட்டுப்பாட்டில் வளர முடிவெடுக்கிறார். ஆனால், இதன் விளைவு அவர் எதிர்பார்த்தது போல அமையவில்லை. இந்த முடிவுதான் தன் வாழ்வில் தான் எடுத்த முடிவுகளிலேயே மோசமானது என்று பிற்காலங்களில் அவரே தெரிவித்தார். ஒரு பேட்டியில், "என் தந்தை மிகவும் கொடூரமான மனிதர். அவரை மாற்ற வேண்டும் என்று எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எனக்கு என் தந்தையையே பிடிக்காமலே போய்விட்டது. அவரை நல்லவராக்க வேண்டும் என்பதற்காக மிரட்டியிருக்கிறேன். வாதம் செய்திருக்கிறேன். ஆனாலும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. ஒரு கட்டத்தில் அவரை பிரிந்து வந்துவிட்டேன்” என்று கூறினார்.

 

இதுமட்டும்தான் அவருடைய சிறு வயதை பாதித்ததா என்றால், இதனை மிஞ்சுமளவுக்கு மற்றொன்றும் நடந்தது. எலான் தனது பள்ளிப் பருவத்தில் தனது சக மாணவர்களால் கடுமையாகக் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார். "என்னுடைய பிறந்தநாளை இறந்தநாளாக மாற்றியிருப்பார்கள் என்னுடைய சக மாணவர்கள். ஒரு கும்பல் என்னைப் பிடித்து மாடி வரை தூக்கிக்கொண்டு போய், கீழே தூக்கி வீசினார்கள். அதன்பின் ஒருவன் என்னை மிகவும் மோசமாக அடித்தான், மயங்கிவிட்டேன். அடிக்கும்போது உதவிக்கு யாரும் வரவில்லை. பின்னர் மருத்துவமனையில் அனுமதித்து என்னைப் பிழைக்க வைத்தார்கள். சாகும் நிலைக்கு கொண்டுபோனதை நீங்கள் புல்லியிங் என்று சொல்வீர்களா?... கிட்டத்தட்ட அது கொலை... அதில் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். ஒருவன் நம்மை அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் நம்மை அடித்துக்கொண்டே இருப்பான். இதன்பின் பல வருடங்கள் கழித்து அதேபோல ஒரு மாணவன் புல்லியிங் செய்தான். மூக்கிலேயே ஒரு குத்து விட்டேன். அவன் அதன்பின் என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஓடிவிட்டான்.

 

shocking childhood of elon musk

 

என்னுடைய சிறுவயது காலம் என்பது நீங்கள் நினைப்பது போல சந்தோசமான ஒன்றாக இருந்ததில்லை. மிகவும் கஷ்டங்கள், சோகங்கள், மன வேதனைகள் நிறைந்ததாக இருந்தது. ஆனால், சோர்வடையாமல் போராடினேன். அதிலிருந்து வெளியே வருவதற்கு எனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டே இருந்தேன். மற்றவர்களைப் பார்க்கும்போது என்னை நான் பைத்தியக்காரன் என்று நினைத்துக்கொண்டேன். எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பேன். மற்றவர்களைப் போல இல்லாமல் நான் இருந்தேன். எதையும் செய்யாமல் இருந்தால் போர் அடிக்கும், அதனால் படிப்பேன், வீடியோ கேம் ஆடுவேன், டிவி பார்ப்பேன். 

 

நான் கோடிங் கற்றுக்கொண்டு கேமிங் உருவாக்கி விற்றதற்கு முக்கிய காரணம், அதில் வரும் பணத்தை வைத்து நல்ல கணினி வாங்க முடியும் என்பதற்காக மட்டும்தான். பெரிய பெரிய நோக்கமெல்லாம் என்னுடைய பால்ய வயதில் இருந்ததில்லை. எப்போது நான் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தேனோ, அப்போதுதான் மிகப்பெரும் கனவும் பார்வையும் எனக்குள் வந்தது. 

 

பள்ளியில் நண்பர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனது வகுப்பறையில் நான்தான் வயது குறைந்தவன் என்பதால் நான் தொடர்ந்து கிண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டேன். அதனால் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி புத்தகங்களோடு நண்பனானேன். ஒன்பது, பத்து வயது இருக்கும்போது கையில் கிடைக்கும் எந்த பேப்பரையும் எடுத்து வாசித்துக்கொண்டே இருப்பேன். அது நான் படித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தினால் அல்ல. ஏதோ ஒரு விரக்தியில் இருப்பேன். என்ன செய்வது என்றே தெரியாது, அதனால்தான் படிப்பேன். காலையிலிருந்து இரவு வரை கூட புத்தகங்களை வாசித்திருக்கிறேன். எதையாவது புதிதாக கற்றுக்கொள்வதை அதிகமாக விரும்பினேன். இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்தது. நிறையப் புத்தகங்களை வாசிப்பதோடு நிறைய மக்களுடன் பேசும்போது, நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். உங்கள் மனதை எது கவர்கிறதோ, எது உங்கள் இதய ஓட்டத்தை வேகமாக்குகிறதோ அதனைச் செய்யுங்கள்" என்றார்.

 

இவ்வளவு கேலிகளுக்கும் கடினமான சூழல்களுக்கும் மத்தியில் தனிமையில் தள்ளப்பட்டு உதவிக்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்த சிறுவன், படிப்பையும் கனவுகளையும் சம்மட்டியாக்கி தனக்கான எதிர்காலத்துடன் இந்த உலகிற்கான எதிர்காலத்தையும் செதுக்குகிறான் என்றால் அவன் நிச்சயம் அடுத்த தலைமுறைக்கான இன்ஸ்பிரேஷன் தானே.