Advertisment

பங்குச்சந்தை: நாலு கால் பாய்ச்சலில் நிப்டி! முதலீட்டாளர்கள் குஷி!!

share market nifty and sensex

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக செவ்வாய் கிழமையும் (ஜூன் 23) ஏறுமுகத்தில் இருந்தன.

Advertisment

தேசிய பங்குச்சந்தையான நிப்டியில், நேற்றைய வர்த்தகம் 10471 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, முந்தைய நாளைக் காட்டிலும் 159.80 புள்ளிகள் (1.55%) உயர்வு. வர்த்தகத்தின் துவக்கமே 10347 புள்ளிகளில் அமர்க்களமாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே இண்டெக்ஸ் அதிகபட்சமாக 10484 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 10301.75 புள்ளிகளுக்கும் சென்றது.நிப்டியில் பட்டியலிடப்பட்டு உள்ள 50 நிறுவனங்களில் 46 பங்குகள் விலையேற்றத்திலும், 4 பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகம் ஆகின.

Advertisment

ஏற்றம்- இறக்கம்:

தேசிய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் 9.28 சதவீதம் விலை ஏறியது. லார்சன் அன்டு டூப்ரோ 6.73 சதவீதம், இண்டஸ் இந்த் வங்கி 6.53 சதவீதம், என்டிபிசி 5.77 சதவீதம், ஹிண்டால்கோ 5.43 சதவீதம் ஏற்றம் கண்டன. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த ரிலையன்ஸ் பங்குகள் நேற்று 1.40 சதவீதம் சரிவு கண்டது. பார்தி ஏர்டெல் 0.63 சதவீதம், வேதாந்தா 0.14 சதவீதம், மாருதி 0.10 சதவீதம் என சற்றே சரிவடைந்தன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால் நிப்டியில் நேற்று வர்த்தகமான 1939 பங்குகளில் 1374 பங்குகளின் மதிப்பு ஏற்றத்திலும், 509 பங்குகள் சரிவிலும், 56 பங்குகளின் விலைகள் மாற்றமின்றியும் வர்த்தகம் ஆகின. ஆட்டோமொபைல், எனர்ஜி, நிதி சேவைகள், எம்எம்சிஜி துறைகள், ஐ.டி., ஊடகம், உலோகம், பார்மா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் துறைகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை அளித்தன.

share market nifty and sensex

சென்செக்ஸ் நிலவரம்:

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், செவ்வாயன்று 34911.32 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ், நேற்று காலை 35015 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35482 புள்ளிகள் வரை உயர்ந்தது. குறைந்தபட்சமாக 34843 புள்ளிகளுக்கும் சென்றது. இறுதியில் 35430 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்தது.சென்செக்ஸில் உள்ள 30 பங்குகளில் 27 பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்தது. 3 பங்குகள் மட்டும் லேசான வீழ்ச்சி கண்டன.

பிஎஸ்இ சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 2876 பங்குகளில் 1939 பங்குகள் விலையேற்றத்திலும், 777 பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகம் ஆகின. 160 பங்குகளின் விலை நிலவரத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதேநேரம், 133 பங்குகள் கடந்த 52 வார உச்சத்தைத் தொட்டு, வர்த்தகம் ஆனது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க சந்தை ஏற்றம்:

கரோனா அபாயத்தால் லேசான சரிவில் இருந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் நேற்று 0.59 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.அதேநேரம், லண்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய சந்தைகள் லேசான சரிவைசந்தித்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் சீனா ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவு கண்டன.

share market nifty and sensex

10600 புள்ளிகளை நோக்கி நிப்டி:

தேசிய பங்குச்சந்தையைப் பொருத்தமட்டில் இப்போதைய ஏற்றமான நிலை தொடர்ந்தால், புதன்கிழமை (ஜூன் 24) வர்த்தகத்தின்போதே 10,600 புள்ளிகள் என்ற இன்னொரு உச்சத்தை நெருங்கும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை, சந்தை இறக்கத்தைச் சந்தித்தால் 10,300 புள்ளிகள் வரை கீழே இறங்கலாம் என்கிறார்கள்.

''நிப்டி, அடுத்து வரும் சில நாள்களில் சரிவு கண்டாலும் கூட 10,333 புள்ளிகளுக்கு மேல்தான் வர்த்தக செயல்பாடுகள் இருக்கும். கடந்த நான்கு நாள்களின் ஏற்றம் இன்றும் தொடரும் நிலையில், 10,600 முதல் 10,650 புள்ளிகள் வரையிலும் கூட ஏற்றம் காண வாய்ப்புகள் உள்ளன,'' என்கிறார் மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை நிபுணர் சந்தன் தபாரியா.

ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நாகராஜ் ஷெட்டி, ''நிப்டியில் கடந்த சில நாள்களாக தென்படும் நேர்மறையான வளர்ச்சி தொடரும் பட்சத்தில், இண்டெக்ஸ் புதிய உச்சத்தைத் தொடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த ஓரிரு நாள்களில் நிப்டி 10600 - 10650 புள்ளிகள் வரை உயரக்கூடும். இக்குறுகிய கால வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவில் ஆதாயம் அளிக்கும்,'' என்கிறார்.

கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலையால் அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவில் இருந்த நிலையில், செவ்வாயன்று மீட்சி கண்டிருப்பது, அந்த நாடு பொருளாதார இழப்பில் இருந்தும் மீளும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அதன் தாக்கமும் இந்திய பங்குச்சந்தைகளில் நேர்மறையான விளைவுகளை உண்டாக்கும் எனத் தெரிகிறது.

share market nifty and sensex

காளையின் ஆதிக்கத்தில் உள்ள பங்குகள்:

செவ்வாயன்று தேசிய பங்குச்சந்தைகளில் பின்வரும் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை அளித்தன. அப்பங்குகள் தொடர்ந்து விலையேற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ், சீக்வென்ட் சயின்டிபிக், பிர்லா சாப்ட், கேஸ்ட்ரால் இண்டியா, டாடா ஸ்டீல் பிஎஸ்எல், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட், இன்ஜினீயர்ஸ் இண்டியா, செண்ட்ரல் டெபாசிட்டரி, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஹைகல், இண்டர்குலோப் ஏவியேஷன், தீபக் நைட்ரேட், வெல்ஸ்பன் இண்டியா, ஆஸ்டெக் லைஸ் சயின்ஸ், தி ராம்கோ சிமெண்ட்ஸ், ஐநாக்ஸ் லெய்சர் அண்டு ஆப்டெக் ஆகிய பங்குகள் ஏற்றம் காணும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டும் பங்குகள்:

சுவென் பார்மா, டிக்ஸான் டெக்னாலஜீஸ் (இண்டியா), எப்டிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், சின்ஜின் இண்டர்நேஷனல் ஆகிய பங்குகளின் காலாண்டு முடிவுகள் ஸ்திரமாக இருப்பதால், ஆதாயநோக்கில் அதிகளவில் முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்வான் எல்லையில் இந்தியா - சீனா நாடுகள் குவித்து வந்த படைகளை இரு தரப்புமே திரும்பப் பெற முடிவு எடுத்ததும், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் அதிகமானோர் குணமடைந்து வருவதும் இந்திய பங்குச்சந்தைகளில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சந்தையில் இன்றும் ஏற்றம் இருக்கும் என திடமாக நம்புகிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

sensex nifty share market Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe