அதிமுகவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களில் பலர் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்த நிகழ்வுகள் ஏராளம். ஜெ.மறைவுக்கு முன் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முத்துசாமி, ரகுபதி, சேகர்பாபு, ராஜகண்ணப்பன் என அந்த லிஸ்ட் நீளும். ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பூசல்கள் காரணமாக திமுகவை நோக்கி படையெடுத்தவர்களில் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அன்வர் ராஜா, தோப்பு வெங்கடாச்சலம், மைத்ரேயன், மருது அழகுராஜ் என்ற அந்த லிஸ்ட்டும் நீண்டு வருகிறது. இந்தநிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், பல முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவருமான செங்கோட்டையன் மாற்றுக் கட்சியை நாட இருப்பதாக கூறப்படுவதுதான் அதிமுக வட்டாரத்தை சூடாக்கி இருக்கிறது.
எம்ஜிஆர் காலத்து விசுவாசி செங்கோட்டையன். திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பின் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது தானும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதிமுகவின் முதல் தேர்தலிலேயே (1977) செங்கோட்டையன் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றிக்கனியை ருசித்து ஆளுங்கட்சி அந்தஸ்தில் எம்ஜிஆரின் அன்பை பெற்றார். தொடர்ந்து கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் தன் எம்எல்ஏ பதவியை இதுவரை தக்க வைத்து வருகிறார்.1996 தேர்தலில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/25/107-2025-11-25-18-27-53.jpg)
சில நேரங்களில் சிறிய சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். 'செங்கோட்டையன் வீட்டுக்கே வருவதில்லை. அவருடைய பிஏ ஆறுமுகம் வீட்டிலேயே கதியாய் கிடக்கிறார்' என செங்கோட்டையனின் மனைவி மற்றும் மகன் புகார் கூற, ஜெயலலிதாவே நேரில் கூப்பிட்டு கடுமையாக செங்கோட்டையனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
எம்ஜிஆரின் மறைவுக்கு பின் அதிமுக ஜெ.அணி ஜா.அணி என பிரிந்த போது ஜெயலலிதா அணிக்கு ஆதரவளித்து சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். அதே தேர்தலில் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் தான் எடப்பாடி பழனிசாமியும். அதன் பிறகு ஜெவின் அமைச்சரவையில் பலமுறை இடம்பெற்றார் குறிப்பாக ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப்பயணங்களை திட்டமிட்டு கொடுப்பதன் மூலம் ஜெ.வின் குட் லிஸ்டிலும் இடம்பெற்றார். சில நேரம் ஜெ.வின் பேட் லிஸ்ட்டில் இடம்பெற்று தூக்கி வீசவும் பட்டுள்ளார்.
இப்படி எம்ஜிஆர், ஜெ என அதிமுகவின் முன்னாள் தலைமைகளை பார்த்த சூப்பர் மோஸ்ட் சீனியர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் வரும் 27 ஆம் தேதி இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் அதிமுக வட்டாரத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/25/109-2025-11-25-18-29-10.jpg)
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியதற்காகவே அதிமுகவின் பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனுடன் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நொடியிலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் பலநாட்களாகவே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழைப்புகள் வர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மற்றும் செங்கோட்டையன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் 99 சதவிகிதம் செங்கோட்டையன் கீரின் சிக்கனல் கொடுத்துவிட்டதாகவும், தவெகவிற்கு வந்தால் என்ன பதவி வேண்டும் என்பது வரை பேச்சுவார்த்தை போனதாகவும் கூறப்படுகிறது.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின் விஜய், கட்சியின் நிர்வாகக் குழுவை மாற்றி அமைத்திருந்தார். மொத்தம் 28 பேர் கொண்ட அந்த புதிய நிர்வாகக் குழுவை நிர்வகிக்கும் பொறுப்பு செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட இருப்பதாகவும் அதற்காக கட்சியில் அமைப்பு பொதுச்செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நெடுங்காலமாக அதிமுகவே மூச்சென நின்றவர் புதிய கட்சிக்கு செல்வதாக வெளியான தகவல் அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அனுபவம் வாய்ந்த ஒருவரை கட்சி இழக்க விரும்பவில்லை என கருதும் அதிமுக தலைமை செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுக்கிறது.
இதேநேரம் அதிமுகவை ஒன்றிணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஓபிஎஸ் அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ''டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் நல்ல முடிவு வரவேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஏமாற்றம் அடையக்கூடிய வகையில் எந்த விதமான முடிவுகளையும் எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கழகம் ஒருங்கிணைக்க வேண்டும், அப்படி நடைபெறவில்லை என்றால், எங்களுடைய முடிவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். அதிமுக ஒன்றிணைப்பை பாஜக பெரிதாக கருதவில்லை என்ற நிலையில் ஓபிஎஸ்-ன் சொல்லியிருக்கும் 'எந்த விதமான முடிவுகளையும் எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்ற கூற்று எந்த விளிம்பிற்கு செல்லும் என்பதும் கேள்வியாகியுள்ளது.
ஒருவேளை செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தால் அதேபோன்ற முடிவை எடுப்பதுதான் ஓபிஎஸ்-ன் முடிவாக இருக்குமா அல்லது புது கட்சி தொடங்குவதா? அல்லது திமுக பக்கம் சாய்வது ஓபிஎஸ்-ன் முடிவாக இருக்குமா? என்ற யூகம் தெரியாத கேள்விகளே தொக்கி நிற்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/25/108-2025-11-25-18-25-13.jpg)