Skip to main content

என் வலியை உணராதவன் என் தலைவனாக இருக்க முடியாது - சீமான் ஆவேசப்பேச்சு 

Published on 27/04/2018 | Edited on 27/04/2018

அகில இந்திய சமத்துவக் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம்  காவிரி மேலாண்மை அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராட்டம் நடத்தியது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியது.

seeman speech

 



காங்கிரஸ் இந்த நாட்டின் அகில இந்திய கட்சி. இந்நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் பேசும் கட்சி. பாரதி ஜனதா கட்சி  இந்த நாட்டின்  இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் பேசும் கட்சி. அதுக்கும் ஒருபடி மேல் சென்று ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே சட்டம், ஒரே வரி, ஒரே சொரி எல்லாமே ஒன்று அப்படினு இருக்கு அந்தக்கட்சி. ஆனால் கர்நாடக என்று வரும்பொழுது காங்கிரஸ் கர்நாடகாவின் மாநிலக்கட்சியாக மாறிவிடுகிறது, அதை நீங்கள் கவனிக்கணும்.  இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் பேசும்கட்சியான பாரதிய ஜனதா கர்நாடக என்று வரும்பொழுது கர்நாடக மாநில கட்சியாகவும், கன்னடர்களின் கட்சியாகவும் மாறிவிடுகிறது. இங்குள்ள காங்கிரஸ் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று போராடும், அங்குள்ள காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று கூறும் ஆனால் இரண்டும் ஒரே கட்சிதான் ஒரே தலைமைதான். ராகுல் காந்தி என்ன சொல்கிறார் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சொல்கிறார் மோடியும், எடியூரப்பாவையும் நம்பாதீர்கள் அவர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் தமிழகத்திற்கு  காவிரி தண்ணீர் கொடுத்துவிடுவார்கள் என்கிறார். 


பா.ஜ.க தேசியத்தலைவர் முரளிதர ராவ் கர்நாடகவிற்கு எந்த ஒரு அச்சுறுத்தல் வந்தாலும் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறுகிறார். இவர்களை ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க கூடாது. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்று எப்படி சொல்கிறார்களோ அதேபோல் மானத்தமிழன் ஒருவனின் ஓட்டுகூட இவர்களுக்கு விழக்கூடாது. என்ன நக்கல், என்ன கேலி, எத்தனை அவமதிப்பு. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்கிறது காவிரி மேலாண்மை அமைத்தால் கர்நாடகாவில் கலவரம் வெடிக்கும் அதனால் வேண்டாம் என்று. அப்படியென்றால் நம்மையெல்லாம் உணர்வில்லாதவர்கள், போராடமாட்டர்கள் என்று அவன் முடிவுபண்ணிவிட்டான். போராட்டத்தையும், புரட்சியையும் உலகத்திற்கு கற்றுக்கொடுத்த இனம் தமிழினம். அது என்ன கர்நாடகாவில் சட்ட ஒழுங்கு கெடும், போராட்டம் வெடிக்கும் தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்காதா. கர்நாடகாவில் உள்ள தமிழர்களை கருத்தில் வைத்துக்கொண்டு பேசுங்கள் என்று அறிவுறுத்துவது போல நம்மை பயமுறுத்துகிறார்கள். எத்தனையோ லட்சம் உயிர்களை இழந்துவிட்டோம் எங்களைப்போல மானத்தையும், வீரத்தையும் உயிரென்று நினைத்து வாழ்ந்த இனம் இவ்வுலகில் கிடையாது. ஏன் இங்குள்ள கன்னடம் பேசும் மக்களுக்கு அவர்கள் பாதுகாப்பு குறித்து அங்குள்ளவர்கள் யாரும் பேசமாட்டார்கள். ஏனென்றால் தமிழன் ஆகச்சிறந்த ஜனநாயகவாதி என்று அவனுக்கு தெரியும்.

 

கே.பி.என் பேருந்துகளை எரித்தான் அதில் ஈடுபட்ட ஒருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை போடவில்லை. லாரி  ஓட்டிவரும் முதியோர் ஒருவரை அடித்தான் அவர் அமைதியாக இருந்தார். நம் தன்மானத்தின் மீது கை வைக்கிறான். நம் பிள்ளைகள் அங்கிருந்து வாகனமில்லாமல் நடந்தே வருகிறார்கள். இங்குள்ளவர்கள் யார் தமிழர் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் சென்று கதவைத்தட்டி அடிக்கிறானே கர்நாடகக்காரன் அவனுக்கு தெரிகிறது தமிழன் யார் என்று. யாரு வேண்டுமானாலும் ஆளலாம். என் தாயும் ஒன்றுதான், என் தாய் நிலமும் ஒன்றுதான், என் தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்கவேண்டும். தலைவன் என்பவன் என் இனத்தவனாக இருக்க வேண்டும். என் மொழி புரியாதவன் இறைவனாக இருக்க முடியாது, என் வலி உணராதவன் என் தலைவனாக இருக்க முடியாது. இதுதான் எங்கள் கொள்கை முடிவு. அவர் ரொம்ப நல்லவர் எந்த தராசில் அளந்து பார்த்தீர்கள். எங்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும், கண்ணீருக்கும்  இறங்கி வராதவர் எப்படி நல்லவராக இருக்க முடியும். அவர்  நல்லவர் என்றால் தமிழகத்தில் உள்ள மற்ற அனைவரையும் கெட்டவர்கள் என்கிறீர்களா. இமயமலைக்கு ஸ்வட்டர் போடுவதை விட்டு விட்டு , இங்க டுவிட்டர் போடுறார். 

 

பேசவே அஞ்சுகிறார் நான் பேசியதால் ஐந்து முறை சிறைக்கு சென்றவன் வெளியே இருந்தால் ஆபத்தாம், அந்த பயம் இருக்க வேண்டும். ஏன் விளையாட்டை நிறுத்துகிறார்கள் அது விளையாட்டில்லை சூதாட்டம். ஆடுகளை சந்தையில் விற்பதுபோல் விற்கிறார்கள் வீரர்களை. அந்த மைதானத்திற்கு மூன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எனக்கும் சரத்குமார்க்கும் மட்டும்தான் தாகம் அடிக்கும், பசிக்கும் என்று போராடுகிறோமா உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகின்றோம். நீட் என்றால் நீதிமன்றம் போ, காவிரி என்றால் நீதிமன்றம் போ, ஜல்லிக்கட்டு நீதிமன்றம் போ. அனைத்திற்கும் நீதிமன்றம் என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு பல்லாங்குழி விளையாடுவதற்கா. நீதிமன்றம் ஜனநாயகமா, சட்டமன்றம், பாரளுமன்றம் ஜனநாயகமா? இறையாண்மை என்றால் என்ன இறை என்றால் அரசு, ஆண்மை என்றால் ஆளுமை. ஆளுமையான அரசு என்ன சொல்லியிருக்க வேண்டும் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பின் படி தண்ணீர் தமிழகத்துக்கு வேண்டும் என்று கூறியிருக்கவேண்டும். அதுதானே ஆண்மையுடைய அரசு. பிரதமரை காணவில்லை "மோடி போய்விடுகிறார் ஓடி கொண்டுவாருங்கள் தேடி" என்பதுபோல் ஆகிவிட்டது. அவர் கொண்டு வரும் திட்டத்தில் இந்தியா உள்ளது ஆனால் அவர்தான் இந்தியாவில் இல்லை. கருப்பு பணத்தை கொண்டுவருவது இருக்கட்டும், எங்கள் பிரதமரை முதலில் இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள். கர்நாடகாவில் ஒரு தமிழன் கவுன்சிலராக நின்று வெற்றிபெற்றார் ஆனால் அவரை பதவி ஏற்கவிடவில்லை. எங்கு சென்றது ஜனநாயகம் ஏன் தொலைக்காட்சியில் இதற்கெல்லாம் விவாதம் செய்யவில்லை.

 

சரி ஏன் சோனியாகாந்தியை பிரதமர் ஆக்கவில்லை ஏனென்றால் அவர் வெளிநாட்டவர். அதுமாதிரிதான் ரஜினியும் எங்களுக்கு. அவருக்கு கச்சதீவு, கதிராமங்கலம், நெடுவாசல் இதெல்லாம் எங்குள்ளது தெரியுமா. தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து எத்தனை உயிர்மெய்யெழுத்து எத்தனை  என்று தெரியுமா. தெரியாது என்றால் போய்விடுங்கள். இதற்கு காரணம் யார் இந்த ஆட்சியாளர்கள்தான். ஆளும்கட்சி உண்ணாவிரதம் இருக்கின்றது என்ற பெயரில் பின்னால் பிரியாணி உண்கிறது. எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தால் அங்கு குடிப்பேன் அப்படினு ஒருத்தன் சொல்லுறான் போலீஸ் இங்கே குடிக்க கூடாதுனு சொல்லுது. எந்தத் தண்ணிக்கு போராடச்சொன்னால், எந்தத் தண்ணிக்கு போராடுறானுங்க. காங்கிரஸ் போராடுது வாழ்த்துக்கள், தி.மு.க போராடுது வாழ்த்துக்கள் ஆனால் பத்தாண்டுகளாக ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்தீர்களே அப்போது வாயை திறக்கவில்லையே. இந்திய ஒன்றியத்திலேயே பதினேழு ஆண்டுகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்த ஒரேகட்சி தி.மு.க  ஆனால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு  காணவில்லை .

 

எங்க அப்பன் செத்துட்டான் என்று நான் அழுகிறேன். கொலை செய்தவனே நீதானே, நீ ஏன் அழுகிறாய். இப்போது சொல்லுங்கள் காங்கிரசும், தி.மு.கவும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று சொல்லுங்கள் நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம். ஒன்று நீட் தேர்விலிருந்து விலக்கு அளியுங்கள் இல்லை எங்களை விலக்கிவிடுங்கள்.