Skip to main content

திருடு போகிறதா தமிழர் கடல்? - மத்திய அரசின் 'சாகர்மாலா' பற்றி சீமான், திருமுருகன் காந்தி!   

Published on 22/02/2018 | Edited on 23/02/2018

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில்(2003) முன்மொழியப்பட்ட திட்டம் இந்த சாகர்மாலா திட்டம். இந்தத்  திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டில் உள்ள 7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகளையும் ஒன்றாக இணைத்து சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் மாற்றுவதே. முதல்கட்டமாக 1000 கோடி செலவில் இந்தியாவிலுள்ள 12 துறைமுங்கள் மற்றும் 1,208  தீவுகளை சரக்கு போக்குவரத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவது, 189 கலங்கரை விளக்கங்களை நவீனப்படுத்துவது தொடங்கும். நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் துறைமுகங்களுக்கும் பங்குண்டு. இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது  சீனாவில் 24 விழுக்காடும், நெதர்லாந்து 42 விழுக்காடும், அமெரிக்கா 7 விழுக்காடும் அந்தந்த நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் துறைமுக வர்த்தகம் பங்களித்துள்ளது. ஆனால், இந்தியாவில் துறைமுகங்களின் மூலமான பொருளதார பங்களிப்பு வெறும் 3 விழுக்காடே, துறைமுகங்கள் மூலமான பொருளாதார பங்களிப்பை அதிகப்படுத்துவதே இந்த திட்டம் என மத்திய அரசால் விவரிக்கப்படுகிறது.

 

Sagar Mala Project


ஆனால் இவ்வளவு வளர்ச்சிகள் இருந்தாலும் தமிழத்திலுள்ள 7 கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை ஆதாரமாகக்   கொண்டுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். மற்றும் கார்ப்ரேட் வர்த்தகம் தலைத்தோங்கும் என்று தமிழ் ஆர்வளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். காரணம் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் அறிக்கையிலே இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என ஒரு உரையையும் அளித்துள்ளது. அதாவது 7 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையை வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும், இடைவிடாத போக்குவரத்து மாசினால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பதையே 'கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்ஸ்' என்று நாசுக்காக சொல்கிறது மத்திய அரசு. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 'மே பதினேழு' இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரிடம் இந்தத் திட்டம் குறித்துக் கேட்டோம். 

சீமான் 
 

Seeman Sagar Mala



7000 கிமீ கடல்வழிச்சாலை, 14500 கிமீ உள்நாட்டு நீர்வழிச்சாலை, இதை ஒன்றிணைப்பதுதான் இந்த சாகர் மாலா திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை நோக்கம் என்னவென்றால் ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதி? இங்குள்ள  நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற  வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வது. வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வது. இலங்கையில் திரிகோணமலையை சீனா 900 ஆண்டுகளுக்கு 9,500 கோடி லீசுக்கு எடுத்துவிட்டது. அதேபோல் தனுஷ்கோடியை  மக்கள்  வாழ வாய்ப்பற்ற இடம் என அறிவித்து ராணுவ முகாம் அமைக்கிறது மத்திய அரசு. அணு உலை அமைப்பதல்ல அணு பூங்கா அமைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். அதேபோல் கடலூர் நாகபட்டினம் சுற்றியுள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டங்களாக அறிவித்துள்ள அரசு அதைச்சுற்றியும்  இராணுவமுகாம் அமைக்கும்.  எல்லாம் இராணுவ மயமான பிறகு மக்களால் கிளர்ச்சியே செய்யமுடியாத, உரிமையை கேட்டுபெறமுடியாத நிலையை உருவாக்குவதே நோக்கம். இதுதான் நடக்கும் என கணிக்கமுடிகின்ற இந்த சூழ்நிலையில இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கொண்டுபோய் எச்சரிக்கை உணர்வை உருவாக்கவேண்டும். அடிமை இந்தியாவில் போராட ஒரு காந்தி, ஒரு பகத்சிங், ஒரு சுபாஷ் சந்திரபோஸ் உருவாக முடிந்தது. ஆனால் விடுதலை இந்தியாவில் அது கடினம். கருவிலேயே அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட போக்கு நடந்துவருகிறது.

'சாகர்மாலா திட்டத்தினால்  துறைமுகம் சார்ந்த மீன் பதப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மற்றும் துறைமுகம் சாராத மாற்று வேலைவாய்ப்பு பயிற்சிகள், விவசாயம் செய்வது, கைவிணைப் பொருட்கள் செய்வது போன்ற பயிற்சிகள். மீனை ஏற்றுவது இறக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்' என்று மத்திய அரசு கூறுகிறது. அப்போ இவர்களுடைய நோக்கம்  ஆழ்கடலுக்குள் மீனவன் மீன் பிடிக்க செல்லக்கூடாது, கூட்டிணைவு (corporate) நிறுவனங்கள் கையில் கொடுத்திட வேண்டும். விளைநிலத்தை விட்டு வேளாண்குடிமக்களை வெளியேற்ற வேண்டும், கடல் பரப்பை விட்டு மீனவனை வெளியேற்றவேண்டும், பொறுப்புகளை  எல்லாம் கார்ப்ரேட் எனும் கூட்டிணைவு நிறுவனங்களுக்கு  தாரைவாக்க வேண்டும் என்பதே நோக்கம். இந்த சாகர் மாலா திட்டம் என்பதே மண்ணில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு பெரும்முயற்சி எனவேதான் இதை எதிர்க்கிறோம்.

திருமுருகன் காந்தி

 

Thirumurugan gandhi Sagar Mala

 

காடுகளில் இருந்து எப்படி பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றார்களோ, விவசாய நிலங்களிலிருந்து எப்படி விவசாயிகள் வெளியேற்றப்படுகிறார்களோ அதுபோல மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையே இந்தத் திட்டத்தின் அடிப்படை கொள்கை. மீனவர்களின் கடல், மீனவர்களுடைய கடற்கரை மற்றும் வாழும் நிலப்பரப்பு போன்றவைகளை கையகப்படுத்தி கார்ப்ரேட்டிடம் ஒப்படைப்பதே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்படும் துறைமுகம் வெறும் வணிக துறைமுகம் மட்டுமல்ல அது பின்னாளில் ராணுவ துறைமுகமாகவும்  மாற்றப்படும்.

திரிகோணமலை துறைமுகத்தின் அருகில் உள்ள சம்பூரில் அனல்மின்நிலையம் அமைக்க கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இந்திய அரசு கையகப்படுத்தி அங்கு வாழ்ந்து வந்த பூர்வீக குடிகளை வெளியேற்றியது. அந்தப் பகுதியை பாதுகாக்க இராணுவத்தை நிறுத்தியது. இப்படி இருக்க திரிகோணமலையை அமெரிக்காவினுடைய கப்பல் படை பாதுகாப்புத் தளமாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை போடுவதற்காகவும் அந்த துறைமுகத்தை பயன்படுத்துவதற்காகவுமே  இனப்படுகொலை அங்கு நடத்தப்பட்டது. இதுதான் அதன் அடிப்படை.

எண்ணூரிலிருந்து ஆரம்பித்து தமிழ்நாட்டின் கடைசி கடற்கரை  கிராமமான நீராடிவரை பல்வேறு துறைமுகங்கள் வரப்போகின்றன. அந்த துறைமுகங்கள் அனல்மின்நிலைய துறைமுகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான துறைமுகமாக அல்லது ராணுவ பயன்பாட்டிற்கான துறைமுகமாக இருக்கும். அப்பொழுது அப்பகுதியில் உள்ள பூர்விக குடிமக்களை முற்றிலும் அகற்றப்படும் சூழ்நிலை வரும்.

அப்படி வெளியேற்றப்பட்ட மீனவர்களை மறுவாழ்விற்க்கு கொண்டுவருவது, மீனவர்களை மாற்று தொழிலுக்கு பயிற்றுவிப்பது என மத்திய அரசு சொல்கிறதே, அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் வெறும் 4000 கோடிதான், அந்த 4000 கோடியும் ஒட்டுமொத்த 7000கிமீ  கடற்கரையிலுள்ள ஒட்டுமொத்த  மீனவனுக்கானது. அப்பொழுது  தமிழ்நாட்டு மீனவனுக்கு எவ்வளவு இருக்குமென நன்கு யோசித்துப் பாருங்கள். இதிலுள்ள சதியை மனதில் கொள்ளுங்கள்.  இந்த துறைமுகங்கள் தனியார் மயமாகப்போகின்றன. சுற்றி தனியார் தொழிற்சாலைகள் வரப்போகிறது. எனவே கடல்மாசடைந்து மீன் வளம் குறையும்.

ஒரு நாட்டின் துறைமுகங்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை முடிவுசெய்யும் இடம், அப்படிபட்ட துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனியார் கார்ப்ரேட் கைகளில் இயக்கப்படும்போது  பொருளாதாரமும் அவன் சார்ந்து நிற்கப்போகிறது. அதனால் அங்கு நமக்கு கூலிவேலைதான் கொடுக்கப்படும், அடிமை இந்தியாவில் இருந்தது  போல.

சந்திப்பு : அருண்பாண்டியன் 
  

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.