Skip to main content

நவீன தீண்டாமை! - #ZOMATO சொல்லவரும் சேதி!

ia-Desktop ia-mobile

உலகநாடுகள் வியக்கும் மதநல்லிணக்கத்தை அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொண்டிருக்கிறது இந்தியா. ஆனால், அதைக் கொச்சை செய்வது போன்ற சம்பவங்கள் இங்கு சகஜமாகவே நடந்து கொண்டிருக்கின்றன. ஜெய் ஸ்ரீராம் சொல்லாத இஸ்லாமியர்கள் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி, கொல்லப்படுகிறார்கள். மதம் தலைக்கேறிய இந்த செயல்களை சமத்துவத்தை விரும்பும், சாமான்ய இந்துக்களே வெறுக்கிறார்கள். 

 

secularism seen in zomato issue

 

 

சமீபத்தில், மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, ஜொமேட்டோ என்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் வழியாக உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அதை டெலிவரி செய்ய ஃபையாஸ் என்பவரை யதேச்சையாக நியமித்தது ஜொமேட்டோ நிறுவனம். அவர் ஒரு இஸ்லாமியர் என்பதைத் தெரிந்துகொண்ட அமித் சுக்லா, ஜொமேட்டோ நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, “டெலிவரி செய்பவர் ஒரு இந்துவாக இல்லை, அதனால் உடனடியாக இந்து மதத்தைச் சேர்ந்தவரை டெலிவரி செய்யச் சொல்லுங்கள். இல்லையென்றால், ஆர்டரை கேன்சல் செய்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். 

அதற்கு தனது ட்விட்டர் கணக்கின் மூலமாக பதிலளித்த ஜொமேட்டோ நிறுவனம்,  “உணவுக்கு மதம் கிடையாது. உணவென்பதே மதம்தானே” எனக் கூறியது. ஜொமேட்டோ நிறுவனத்தின் இந்த ரிப்ளை சில நிமிடங்களிலேயே இந்தியா முழுவதும் வைரலானது. 

 

secularism seen in zomato issue

 

அடுத்த சிலமணிநேரத்தில் இன்னொரு உணவு டெலிவரி நிறுவனமான உபெர் ஈட்ஸ், ஜொமேட்டோ நிறுவனத்தின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக, நாங்கள் உங்கள் பக்கம்தான் நிற்கிறோம் என்று அறிவித்தது. என்னதான் பன்மடங்கு ஆதரவு பெருகினாலும், அதற்கு சரிசமமாக ஜொமேட்டோ, உபெர் ஈட்ஸ் நிறுவனங்களைக் கண்டித்து ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன. அதை ட்ரெண்ட் செய்பவர்களைக் கலாய்த்து மீம்களும் பகிரப்பட்டன.

எல்லோருமே பசித்தால் சாப்பிடத்தான் செய்கிறோம். இதில் மதம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டதற்கு பதிலளித்திருக்கும் அமித் சுக்லா, “அரசியலமைப்புச் சட்டம் மதச் சுதந்திரத்தை எல்லோருக்கும் வழங்குகிறது. விரத மாதமாக இருப்பதால், ரைடரை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தேன். இனிமேல் ஜொமேட்டோவில் எந்த ஆர்டரும் போடமாட்டேன். வக்கீலை வைத்து இதை டீல் செய்துகொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். மோடி சர்க்கார் என்ற பெயரில்தான் அமித் சுக்லா இந்த ட்விட்டர் கணக்கை நடத்திவந்தார். தற்போது அந்த ட்விட்டர் கணக்கும் செயல்பாட்டில் இல்லை.  அதில் மதவெறியைத் தூண்டும்விதமாக பதிவிட்டதற்காக அமித் சுக்லா மீது வழக்குப்பதிந்திருக்கிறது காவல்துறை. டெலிவரி ரைடரான ஃபையாஸ், “அமித் சுக்லாவின் வீடு எங்கிருக்கிறது என்பதை அறிய, அவரைத் தொடர்புகொண்டேன். ஆனால், அவர் ஆத்திரமான குரலில், ஆர்டரைக் கேன்சல் செய்துவிட்டதாகக் கூறினார். பிறகுதான் விஷயமே எனக்குப் புரிந்தது. என் மனதை மிகவும் புண்படுத்திய சம்பவம் இது. என்னால் என்ன செய்யமுடியும்? நாங்கள் ஏழைகள் அல்லவா!” என உருக்கமாக பதிலளித்திருக்கிறார். 

 

secularism seen in zomato issue

 

ஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல், “நாங்கள் இந்தியாவின் கொள்கையை எண்ணிப் பெருமை கொள்கிறோம் - எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களை எண்ணியும். மதிப்பை இழந்து பணம் சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை” என்று தனது நிறுவனத்தின் கருத்துக்கு பலம் சேர்க்கிறார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம், விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த அபிஷேக் மிஷ்ரா என்பவர், ஓலா டாக்ஸியில் மசூத் அஸ்லாம் என்ற முஸ்லீம் ஒருவரது காரை அனுப்பியதால், ‘ரைடைக் கேன்சல் செய்தேன். என்னுடைய பணம் ஜிகாதி மக்களுக்குப் போவதை விரும்பவில்லை’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த ஓலா நிறுவனம், ‘நம் நாட்டைப் போலவே, ஓலா நிறுவனமும் மத நல்லிணக்கத்தின் தளத்தில் செயல்படுகிறது. எங்கள் டிரைவர் பார்ட்னர்களையோ, வாடிக்கையாளர்களையோ சாதி, மதம், பாலினம், இனம் போன்ற எந்தவகையிலும் ஒருபோதும் ஒடுக்க முயற்சித்ததில்லை. எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டிரைவர் பார்ட்னர்களை எப்போதும் யாரொருவருக்கும் மதிப்பு கொடுக்கும்படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்” என்று பதிவிட்டது இந்தியஅளவில் அதிக கவனம் பெற்றது. 

ஜொமேட்டோ, உபெர் ஈட்ஸ், ஓலா போன்ற பகாசூர நிறுவனங்கள் ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டாமல் இல்லை. இளைஞர்களின் இளமைக் காலத்தை ஆசைகாட்டி பறிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை. ஆனால், மதநல்லிணக்கம் குறித்த அவர்களின் பார்வையும், தீண்டாமை நவீனமான முறையில் உருவெடுக்கும் போது அதைக் கண்டிக்கும் அவர்களின் துரித செயல்பாடுகளும் சமூகத்தில் நல்லவிதமாக எதிரொலிப்பது ஆரோக்கியமாக உணரவைக்கிறது. முற்போக்கான சமூகங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, அவற்றைக் கொண்டாடுகின்றன.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...