Skip to main content
electionsresults-large electionsresults-mobile

மோடிக்கு முன்னோடி...

indiraprojects-large indiraprojects-mobile

 

ddd

 

2016ஆம் ஆண்டு... இதே நாள்...  இந்தியாவில்  பிரதமர் மோடியால்  'டீமானிடைசேஷன்' அறிவிக்கப்பட்டது. இதனை 'கருப்புப் பண ஒழிப்பு' தினமாக கொண்டாட  வேண்டும் என்று  அருண் ஜெட்லீ கூறினார். ஆனால் இத்திட்டத்தை அரசியல்வாதிகள் மட்டுமல்லாது பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள், சமூக  ஆர்வலர்கள், மக்கள் என பல தரப்பினரும் தோல்வி  நடவடிக்கையாகவே  கருதுகின்றனர். நமது பிரதமர் மோடியின் ஆட்சியை பலரும் துக்ளக் ஆட்சி என்று வர்ணித்தனர். மோடியுடன் ஒப்பிடும் அளவுக்கு துக்ளக்  என்னென்ன செய்திருக்கிறார் என்று பார்த்தோம். 14ஆம்  நூற்றாண்டில், இந்தியாவில்  பெரும்பகுதியை ஆண்ட 'துக்ளக்' வம்சத்தை சேர்ந்தவர் தான் 'முகமுது பின் துக்ளக்'. இந்த  துக்ளக் வம்சம் துருக்கி நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்கள். முகமது பின் துக்ளக்கின்  திட்டங்களையும், தோல்விகளையும் பற்றி பார்ப்போம். ஆரம்ப காலத்தில் முகமது பின் துக்ளக், அரசராக வேண்டும் என்று மக்கள் விரும்பினர், அரசரான பொழுது மிகுந்த எதிர்பார்ப்புடன், நல்ல காலம் பிறந்துவிட்டதாகக் கருதினர். அதற்குக்  காரணம் அவரின் குணமும் கல்வி   ஞானமும் ஆகும்.     

 

 

அப்போதைய 'டீமானிடைசேஷன்' 

 

 

dddd

 

கரன்சியை மாற்றியதில் மோடிக்கு முன்னோடி இவர். கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியைத்தான் தழுவியது என்றாலும்,  இந்தப் பணமாற்றம் படுதோல்வி அடைந்து  வரலாற்றில் ஒரு பெயரையும் அவருக்கு ஏற்படுத்தியது. நம் இந்தியாவில் தற்போது வரை  பிரச்சனையாகவே இருக்கும் இந்த 'கள்ளநோட்டு', இவர் ஆட்சியில்தான் அறிமுகமானது. கள்ளநோட்டை ஒழிக்க புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்தது போல, இவர் புது  நாணயத்தை கொண்டு வந்தார்.  இவர் ஆட்சியில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களே  பயன்படுத்திருக்கின்றனர்.  வெள்ளி நாணயத்திற்கு ஈடாக வெண்கல நாணயம் கொண்டு வந்து ஒரே நாளில் பணத்தின் மதிப்பை அழித்திருக்கிறார். கள்ள வெண்கல நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு கஜானாவிலும், வணிகத்திலும் நிறைந்திருக்கின்றது. பின்னர் தோல்வியை  உணர்ந்து  திட்டத்தைக்   கைவிட்டார்.    

                       

'வரி'ப்புலி  

 

 

ddd

 

 

'தோப்' பிராந்தியம், இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை  வளமாக இருந்துள்ளது. பிறகு இவர் தோப் பிராந்தியத்திற்கு அதிக வரி அமல்படுத்தினார். இதனால் மக்கள் சம்பாரித்த பணம்  முழுவதும்  அரசிற்கே தரும் நிலை  வந்தது. இவ்வூர்களில் பஞ்சம் ஏற்பட்டது,மக்கள் வேறு  ஊர்களில்   தஞ்சம் புக ஆரம்பித்தனர். சிலர் வழிப்பறி கொள்ளையர்கள் ஆகினர். கடைசியில்  தன் திட்டத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டு அதனை கைவிட்டார். வறுமையில் வாழும்  மக்களுக்கு அரசாங்க நிதியிலிருந்து  கடன் கொடுத்து விவசாயம் செய்யவைத்தார். 

 

வயலும் வாழ்வும் 

 

ஒரே பயிரை  பெரும்பாலான விவசாயிகள்  சாகுபடி செய்து வந்த வழக்கத்தை மாற்றி,  அவர்களைப்  பிரித்து வேறு  பயிர்களைப்  பயிரிடச்  செய்தார். இதனால் விவசாயம் வளரும்  என்று நினைத்து    இந்தத்  திட்டத்தில்  70 லட்சம் வரை செலவு செய்துள்ளார். ஆனால்  இத்திட்டமும் தோல்வியையே தழுவியது.இதற்கு காரணம், வளமான மண்ணில் அதற்கேற்ப நடவேண்டிய  பயிர்களை  நடவில்லை. மேலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருந்ததால்,  இந்த காலகட்டத்தில்  லஞ்சம் தலைவிரித்து ஆடியது. நூறு நாட்களைக் கடந்தும், நிர்வாணமாக நடந்தும் போராடிய விவசாயிகளை சந்திக்கவேயில்லை நம் பிரதமர். 
 

 

தலைநகர் மாற்றம்

 

 

dd

 

'வடக்கில் இருந்துகொண்டு தெற்குப் பகுதிகளை ஆள கடினமாக உள்ளது, அதுமட்டுமல்லாமல்  தேவகிரியை தலைநகராக மாற்றிவிட்டால் தென்னாட்டில் இருக்கும் வளங்களை எளிதாக  எடுத்துக்கொள்ளலாம்' என்று  எண்ணினார். உடனடியாக தில்லியில் இருந்து தேவகிரிக்கு  அதிகாரிகளையும்,  மக்களையும் இடம்  மாற உத்தரவிட்டார். அரசனை மீறி எதனையும் செய்ய  முடியாது என்பதால் அவர்களும் பயணத்தை மேற்கொண்டனர். தில்லியில் இருந்து தேவகிரி  சுமார் 1500 கிமீ தொலைவில் உள்ளது. அரசர், மக்கள் எல்லோரும் வந்தடைந்தனர். பிறகு  ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் தலைநகரை தில்லியாகவே மாற்றினார். இச்சமயம் மக்களை  விட்டுவிட்டு அரச குடும்பம், அரசாங்க வேலை பார்ப்பவர்களை  மட்டும் கூட்டிச்சென்றுள்ளனர்.   இந்த குழப்பங்களில், பயணங்களில் மக்கள் உயிரிழந்தனர். அரசாங்கமும் நிலையிழந்தது.  

 

வெளிநாட்டு பயணங்கள் 

 

 குராஷன் அரசாங்கத்தைக்  கைப்பற்ற நினைத்தார். உலகின் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட  வெற்றியாளராக வேண்டும் என நினைத்தார். அதற்காக பெர்சிய அரசிடம் உதவியை நாடினார்,  தங்களின் 1 லட்சம் வீரர்களை ஒரு வருட தொகைக்கு வாடகைக்கு எடுத்துகொள்கிறேன்  என்று  ஒப்பந்தம் போட்டுள்ளார். கடைசியில் பெர்சிய அரசாங்கம் இவருக்கு உதவியே புரியாமல்  சென்றுள்ளது. இந்தப்  பணிக்காக 3 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். இதனால் பெரிய  நஷ்டத்தையும்  சந்தித்துள்ளார். 'அவரும்' வெளிநாடுகளின் மீது மோகம் கொண்டவர்தான்.

 

வருவாய்  சீர்திருத்தங்கள் 


அரசராக பதவி ஏற்ற பின்பு மாகானத்தின் மொத்த  வருமானத்தையும், அரசாங்க செலவையும்  மதிப்பிட வேண்டும் என நினைத்தார். அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் வரவு  செலவு கணக்கை  நேரடியாக ஆவணத்துடன் ஒப்படைக்க வேண்டும் என்று அவசர சட்டம்  பிறப்பித்தார். பிறகு இதற்காக மிகப்பெரிய அலுவலகத்தை நிறுவினார். அதில் வேலைக்கு  ஆட்கள் சேர்த்து ஆவணங்களை மதிப்பீடு செய்துள்ளார். இது ஒன்று தான் ஓரளவு   வெற்றிகரமாக  செயல்படுத்தப்பட்ட  திட்டமாகத் தெரிகிறது.  
 

பல விஷயங்களில் மோடி தர்பாரும் துக்ளக் தர்பாரும், 'இது அது மாதிரியே இருக்கே...' என்று  எண்ண வைக்கின்றன.     

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...