Skip to main content

ஹைட்ரோ கார்பன் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காது... இவ்வளவு குடிநீர் வீணாகுமா? அதிர வைத்த ரிப்போர்ட்! 

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

அமெரிக்க ஆய்வு -டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், Ph.D., ஆஸ்திரேலியா.

உலகிலேயே அதிக அளவில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் உள்ள நாடு அமெரிக்கா. 2016 கணக்குப் படி, ஏறத்தாழ 17 லட்சம் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமெரிக்காவில் மட்டும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஆழ் துளைக் கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்படுவதால் ஏற்படும் கேடுகளைப் பற்றிய ஆராய்ச்சி, கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவில் தீவிரப்படுத்தப்பட்டது. ஏனென்றால், இந்த எரிவாயுக் குழாய்க் கிணறுகளுக்கு அருகாமையில் வாழும் மக்கள் தங்களின் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து விட்டதாக அரசாங்கத்திடம் புகாரளித்தார்கள்.

 

hydro carban



ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் 

1990-களில்தான் தரைப் பகுதிகளில், பல நூறு மீட்டர் ஆழத்தில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலும், ஓட்டைகளிலும் நிரம்பியிருந்த எரிவாயுவை வெளிக் கொணரும் முறை வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியது. இந்த முறைக்கு பாறை "உடைப்பு'’ (Fracturing or Fracking) என்று பெயர். பொதுவாக செங்குத்து ஆழ்துளைக் கிணறுகளைத்தான் அமைப்பார்கள். ஒரு நூறு மீட்டர் தடிமனுள்ள படிவத்தில் அந்தத் தடிமனுக்கு மட்டுமே எரிவாயு உற்பத்தி ஆகும். பக்கத்தில் உள்ள படிவத்திற்கு இன்னொரு ஆழ்துளைக் கிணறு துளையிட வேண்டும். தொடர்ந்த ஆராய்ச்சியின் பயனாக, செங்குத்து ஆழ்துளைக் கிணற்றுத் துளைகள் எரிவாயுப் படிவத்தின் மையப்பகுதிக்குச் சென்றவுடன், அதனைப் பக்கவாட்டில் ‘"ட'னா வடிவத்தில் திருப்பி, துளையிடும் முறையை உருவாக்கினார்கள்.
 

hydro carban



இம்முறையில் ஒரே ஒரு செங்குத்து ஆழ்குழாய்க் கிணற்றின் மூலம் பல பக்கவாட்டுத் துளைக் கிணறுகளைத் துளையிடலாம். இன்றைக்கு ஹைட்ரோ கார்பன் எரிவாயு ஆய்வுக்காக பல்லாயிரக் கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அனுமதிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் பல பக்கவாட்டுத் துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த பரந்த நிலப்பரப்பு முழுவதும் 600 மீ., 900 மீ., 1400 மீ. என பந்நிலை ஆழங்களில் சல்லடையாகத் துளைக்கப்படும். இம்முறையால், நில நடுக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எரிவாயு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டால், மாதிரிப் படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல ஆழ்துளைக் கிணறுகள் அமைய வாய்ப்புகள் மிகஅதிகம். இந்த மாதிரிப் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் 2016-ல் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆய்வு 

2008-ல், அமெரிக்காவின் வையோ மிங் மாநிலத்தின், பெவிலியன் என்ற இடத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குடிநீர் மாசடைந்து விட்டதாக அரசாங்கத்திற்குப் புகாரளித்தார்கள். அதே போல், எங்கெங்கெல்லாம் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயுவும் கச்சா எண்ணெயும் எடுக்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் எல்லாம் தங்கள் குடிநீர் கெட்டு விட்டதாக அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். அரசு, அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை (The U.S. Environmental Protection Agency EPA) நிறுவனத்தை இது குறித்த ஆய்வை மேற்கொள்ளப் பணித்தது. அதன் தலைமை விஞ்ஞானியாக, தலை சிறந்த சுற்றுபுறச் சூழல் விஞ்ஞானியான டொமினிக் டிஜோலியோ (Dominic DiGiulio) அவர்களை நியமித்தது. எண்ணெய் நிறுவனங்களோ எண்ணெய் எரிவாயுக் கிணறுகளால் குடிநீர் மாசுபடவில்லை எனக் கூப்பாடுபோட்டன. தன் முதல் கட்ட அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் குடிநீர் மாசுபடுவதற்குண்டான காரணங்கள் உள்ளன என அறிவித்த நிலையில், டொமினிக் 2014-ல் ஓய்வு பெற்றார். அமெரிக்க அம்பானிகள், வேதாந்தாக்கள், அதானிகள், டிக்செய்னிகள் போன்ற பண முதலைகள் பல வழிகளிலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். உடனே, அந்த ஆய்வுப் பணிகளில் ஒரு தொய்வு ஏற்படுத்தப்பட்டது.

 

research



அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை அறிக்கை 

ஆழ்துளை ஹைட்ரோ கார்பன் கிணறுகளில், தண்ணீரையும், வேறு சில இரசாயனப் பொருட்களையும் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தி எரிவாயு உள்ள படிவங்களை உடைப்பார்கள். இம்முறைக்கு ‘நீரழுத்தப் பாறை உடைப்பு'’(Hydraulic Fracturing) என்று பெயர். 2015-ல் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ‘"நீரழுத்தப் பாறை உடைப்பு'’முறையால், அமெரிக்க குடிநீர் ஆதாரங்கள் பரவலாகப் பாதிக்கப்படவில்லை'' என்ற முந்தைய முதல் அறிக்கைக்கு முரணான அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அதற்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

இவ்வறிக்கை, அமெரிக்க விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்ப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. ஊடகவியலாளர்கள், விஞ்ஞானிகள் என்று எவர் எழுப்பிய கேள்விகளுக்கும் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை பதிலளிக்க மறுத்து விட்டது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் “முகவாண்மை வெளியிட்ட அறிக்கையின் முடிவுகள் சந்தேகத்திற்கிட மானவையாக இருக்கிறது'' என்று அறிக்கை அளித்தார்கள்.

 

hydrocarban



டொமினிக் டிஜோலியோ (Dominic DiGiulio) அறிக்கை 

2014-ல், அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மையிலிருந்து ஓய்வு பெற்ற டொமினிக் டிஜோலியோ, அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.

தான் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். தன்னுடைய ஆராய்ச்சி முடிவை 2016-ல் வெளியிட்ட டொமினிக், “ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகளில் ‘நீரழுத்தப் பாறை உடைப்பு'’ முறையால் எரிவாயு எண்ணெய் எடுக்கும் பொழுது குடிநீர் கெடும்'' என்றார். அறிவியல் அமெரிக்கன்’The Scientific American என்ற அறிவியல் இதழில் காயத்ரி வைத்தியநாதன் என்னும் கனடா நாட்டு சுற்றுப்புறச் சூழல் ஊடகவியலாளர் இச்செய்தியைத் தாங்கிய கட்டுரையை எழுதினார்.

ஆழ்துளைக் கிணற்றில் செலுத்தப்படும் இரசாயனங்கள் 

ஹைட்ரோ கார்பன் ஆழ் துளைக் கிணற்றில் 62 வகையான விஷ இரசாயனப் பொருட்கள் செலுத்தப்படுகின்றன. அவற்றில் மெத்தனால், டீசல், ஹைட்ரோகுளோரிக் ஆசிட், அம்மோனியம் குளோரைடு, பாஸ்பானியம் சல்ஃபேட், சோடியம் குளோரைடு (உப்பு), மக்னீசியம் பெராக்சைடு, கால்சியம் குளோரைடு, ஆர்செனிக், பென்சீன், ஃபார்மால்டிஹைட் (இறந்த உடல்களைப் பதப்படுத்தும் இரசாயனம்), காரீயம், பாதரசம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை (முழு விவரத்திற்கு https://fracfocus.org/chemical use/what chemicals are used என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்). இரசாயனங்கள் மட்டுமன்றி மணலும் செலுத்தப்படும். ‘பாறை உடைப்பு திரவத்தில் 10% மெதனால் இருப்பதாக, டொமினிக் டிஜோலியோ குறிப்பிடுகிறார்.

இப்படி செலுத்தப்படும் இரசாயனங்கள் மீண்டும் கழிவாக வெளியே கொண்டு வரப்படும். இந்தக் கழிவுகளைக் கொட்டி வைக்கக் கூடிய இடங்களிலிருந்து கசியும் இரசாயனங்கள் தரையிலிருந்து கீழ்நோக்கி நிலத்தடி நீர்மட்டத்தை நோக்கிப்போகும். அதேபோல், தரையின் கீழே நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உடைக்கப்பட்ட படிவங்களிலிருந்து பாறை இடுக்குகளின் வழியே மேல்நோக்கி வரும். இப்படி, மேலும் கீழும் என இருபக்கமும் இருந்து விஷ இரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடி நீர் முழுவதையும் பாழாக்கிவிடும்.


 

 

hydrocarban



குடிநீர், பாசன நீர் எல்லாம் பாழாய்ப் போனால், இந்த ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் உள்ள பகுதி முழுவதும் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும்.

அமெரிக்காவின் வையோமிங்க் மாநிலத்தில் உள்ள விண்ட் ஆற்றுப்படுகையில் (Wind River Formation) ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 600 மீ., 1200 மீ. ஆழத்தில் உள்ள பாறைகளை “நீரழுத்த முறையினால் உடைத்ததனால் அதன்வழி எழுந்த, கலந்த இரசாயனங்கள் நீரில் கலந்து நிலத்தடி நீர் கெட்டுவிட்டது என்று நாங்கள் காட்டியுள்ளோம்'' என்கிறார் டொமினிக் டிஜோலியோ.

வேதியியல் ஆய்வுக்கூடங்கள் இல்லை 

"நீரில் கரையும் இந்த நச்சு இரசாயனங்களை ஆய்வு செய்வதற்குப் போதிய வசதிகளைக் கொண்ட வணிகமுறை வேதியியல் ஆய்வுக் கூடங்கள் அமரிக்காவிலேயே இல்லை'' என்கிறார் டொமினிக். "ஆகவே, நாங்கள் இந்த நீரில் கரையும் இரசாயனங்களை அளவீடு செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்கினோம்'' என்கிறார். டொமினிக்கும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து புது ஆய்வு முறைகளை உருவாக்கினார்கள். அதன்படி, உயர்திறன் திரவ நிற ஆய்வியல் (High Performance Liquid Chromatography)முறையின் மூலம் நிலத்தடி நீரிலும், குடிநீரிலும் கலந்திருந்த நச்சுப் பொருட்களைக் கண்டறிந்தார்கள்.

மெத்தனால் 

மெத்தனால் என்பது ஒருவகை மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம். குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், நிரந்தர நரம்பு மண்டலத் தாக்கத்தோடு கண்களையும் குருடாக்கி விடும். “இந்த வகை இரசாயனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்த இடங்களுக்கு அருகில் குடிநீரில் கலந்திருந்ததைக் கண்டுபிடித்தோம்; அதே போல டீசல், உப்பு ஆகியவையும் கலந்திருந்ததைக் கண்டுபிடித்தோம்; இவை எரிவாயுவை மேலே கொண்டு வரும் பொழுது அதனுடன் வெளிவரும் கழிவுகளில் இருந்தும் நிலத்தடி நீரில் கலக்கிறது. அதே போல் மிகுந்த ஆழத்தில் இருக்கக்கூடிய நிலத்தடி நீரில் உப்பு மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதையும் இந்த ஆய்வில் கண்டறிந்தோம்'' என்றும் டொமினிக் அறிவித்தார்.

பெரும் நீர்ச் செலவு 

"ஹைட்ரோகார்பன் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்க பிரம்மாண்டமான அளவில் நல்ல தண்ணீர் தேவைப்படும். அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை, “ஒருமுறை ‘அதிக நீரழுத்த முறையில்’ எரிவாயு – எண்ணெய்ப் படிவங்களை உடைக்க சராசரியாக 3 கோடியே 63 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது'' என்று அறிவித்திருப்பதாக "தி அமெரிக்கன் சைன்டிஸ்ட்' செய்தி கூறுகிறது.


எடுத்துக்காட்டாக, ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றில் 10 முறை, எரிவாயு எண்ணெய்ப் படிவங்களை அதிக நீரழுத்த முறையால் உடைத்தால் 36 கோடியே 3 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் செலவாகும். இது ஒரு செங்குத்து ஆழ்துளைக் கிணற்றுக்குத்தான். ஒரு செங்குத்துக் கிணற்றில் 5 பக்கவாட்டு துளைக் கிணறுகளை அமைத்தால் மொத்த தண்ணீர் செலவு 180 கோடியே 15 லட்சம் லிட்டர். ஒரு முப்பது இடங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இது போன்ற ஆழ்குழாய் ஹைட்ரோ கார்பன் எரிவாயுக் கிணறுகளை அமைத்தால் ஆகும் தண்ணீர் செலவு 5404 கோடியே 50 லட்சம் லிட்டர். அதாவது ஏறத்தாழ 2 டி.எம்.சி. தண்ணீர். ஒரு டி.எம்.சி. தண்ணீருக்கும் 2 டி.எம்.சி. தண்ணீருக்கும் கர்நாடகாவிடம் மடிப்பிச்சை ஏந்த வேண்டிய நிலையில் உள்ள தமிழகத்தில் இது சாத்தியமா? தேவையா?

நியூயார்க் மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை 

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து பாழாவதால், ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய்களை அமைத்து எரிவாயுவையும் எண்ணெயையும் எடுக்க நியூயார்க் மாநிலம் தடை விதித்துள்ளது. மாபெரும் பணபலம் படைத்த எண்ணெய் நிறுவனங்கள் தங்களது ஆழ்துளைக் கிணற்றின் உற்பத்தி முறையால் ‘குடிநீர் மாசுபடவில்லை’ என்று பல ஆய்வறிக்கைகளைத் தயாரித்து அளித்துப் பார்த்தார்கள். ஆனால், நியூயார்க் மாநில அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே, அமெரிக்க ஆய்வுகளின் அடிப்படையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எண்ணெய்க் கிணறுகளை அமைத்து, காவிரி மண்டலத்தின் நிலத்தடி நீரை உறிந்து, எஞ்சியுள்ள நிலத்தடி நீரை விஷமாக்கி, அந்தப் பகுதியையே பாலைவனமாக்க தமிழக ஆட்சி யாளர்கள் துணை போகக்கூடாது.
 

 

Next Story

“நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்தைப் புதைக்க நினைக்கிறார்கள்” - சு. வெங்கடேசன் எம்.பி.

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Su Venkatesan MP says They are afraid of the present and want to bury the past

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், வெள்ளை அறிக்கை மீதான விவாதம் இன்று (09-02-24) மக்களவையில் நடைபெற்றது. 

வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலேயே வாழ்வார்கள். அதுபோல் சில கட்சிகளும் தேர்தல் வந்துவிட்டால் வேலையின்மை, வறுமையை பற்றி நாங்கள் பேசினால், பா.ஜ.க பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பை பற்றி பேசுகிறார்கள்.

நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், நீங்கள் பாபரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், நீங்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள், நிகழ்காலத்திற்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்திற்குள் புதைக்க நினைக்கிறீர்கள். கடந்த காலத்தை கழித்துவிட்டால் உங்களிடம் எதிர்காலத்தை சந்திக்கிற எந்தவொரு கருவியும் இல்லை” என்று கூறினார்.

Next Story

‘பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் பலவீனமாக இருந்தது’ - நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
white report tabled in Parliament on BJP has taken difficult decisions to go on the path of development

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டுக்கால மன்மோகன் சிங் கீழ் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

2008ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விட்டுச் சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.