ADVERTISEMENT

பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த பாண்டியர், சோழர் காலத்துக் நாணயங்கள்!

10:11 PM Nov 11, 2017 | Anonymous (not verified)

பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த பாண்டியர், சோழர் காலத்துக் நாணயங்கள்!



இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த “கச்சி வழங்கும் பெருமாள்” காசு, ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசுகள் ஆகியவற்றை இம்மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். இவை அனைத்தும் செப்புக்காசுகள் ஆகும்.

இதுபற்றி இப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு கூறியதாவது,

ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாணவர்கள் கண்டெடுத்த இந்த காசுகள், இப்பகுதியின் வரலாற்றை தெரிந்துகொள்ள உதவுகிறது.

கச்சி வழங்கும் பெருமாள் காசு



திருப்புல்லாணி இந்திராநகரைச் சேர்ந்த இர.சமயமுத்து என்ற மாணவன் சென்ற ஆண்டு இவ்வூரில் கண்டெடுத்த ஒரு காசு அடையாளம் காணமுடியாத அளவில் இருந்தது. தற்போது அதை சுத்தம் செய்து பார்த்தபோது அது பாண்டியர் காலக் காசு எனத் தெரிந்தது.

இதன் ஒரு பக்கத்தில் “கச்சி வழங்கும் பெருமாள்” என நான்கு வரிகளில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. மறுபக்கம் இரு மீன்கள் ஒன்றன்மேல் ஒன்று சாய்ந்த நிலையில் பெருக்கல் குறி வடிவில் உள்ளன. இரு மீன்களின் தலைக்கு நடுவில் பிறை உள்ளது.

இக்காசு கி.பி.1250 முதல் 1284 வரை பாண்டிய நாட்டை ஆண்ட முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வெளியிடப்பட்டது. இவன் சோழநாட்டைச் சேர்ந்த கச்சி எனப்படும் காஞ்சிபுரத்தை போரில் வென்று மீண்டும் சோழ இளவரசனிடமே கொடுத்ததால் “கச்சி வழங்கும் பெருமாள்” எனும் பெயர் பெற்றான். மேலும் “சுந்தரபாண்டியன்”, “எல்லாந்தலையனான்” ஆகிய பெயர்களிலும் இம்மன்னன் காசுகளை வெளியிட்டுள்ளான்.

பாண்டிய நாட்டை பேரரசு அந்தஸ்துக்கு உயர்த்திய இம்மன்னனின் கி.பி.1262 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயில் முதல் கோபுர வாயிலின் வலது பக்கச் சுவரில் உள்ளது. இக்காசு இங்கு கிடைத்துள்ளதன் மூலம் இப்பகுதியில் அது பயன்பாட்டில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

ஈழக்காசுகள்



2016இல் பத்தாம் வகுப்பு படித்த பஞ்சந்தாங்கியைச் சேர்ந்த தாஜ்குமார் என்ற மாணவனும், தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் தாதனேந்தலைச் சேர்ந்த கு.சினேகா என்ற மாணவியும் ஈழக்காசுகளை அவர்கள் ஊர்களில் கண்டெடுத்துள்ளனர்.

இக்காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு பந்துகள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது.

மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகையின் அருகே தேவநாகரி மொழியில் “ஸ்ரீராஜ ராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறான்.

இலங்கையை சோழர்கள் வென்றபின் அந்நாட்டில் புழக்கத்துக்காக வெளியிடப்பட்ட ஈழக்காசு, முதலாம் இராஜராஜசோழன் காலம் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இக்காசு பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம், களிமன்குண்டு ஆகிய ஊர்களில் நடத்திய அகழாய்வுகளில் இக்காசுகள் கிடைத்துள்ளன. தற்போது திருப்புல்லாணி பகுதிகளிலும் இக்காசுகள் கிடைத்துள்ளதன் மூலம், இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட ஈழக்காசுகள் சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

-இரா.பகத்சிங்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT