Skip to main content

கல்வி அலுவலரின் பாலியல் வேட்டை! -சிக்கித் தவிக்கும் பெண்கள்!

 

‘பள்ளிக் கல்வித்துறையில் தரகர்கள் ஆதிக்கம்! விருதுநகர் மாவட்டம் வீழ்ந்த பின்னணி!’ என்னும் தலைப்பில்,  கடந்த ஜூலை 06-09 நக்கீரன்  இதழில் விருதுநகர் மாவட்ட கல்வித்துறை ஒழுங்கீனங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் நீட்சியாக இன்னொரு  ‘அணுகுண்டு’ தற்போது வெடித்திருக்கிறது.  

 

வளர்மதிக்கு அரசு தந்த நெருக்கடி!

v


மதுரை காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதிக்கு பதவி உயர்வு அளித்து விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம். அவரும் கடந்த 15-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பினை ஏற்று தனது இருக்கையில் அமர்ந்தார்.  உடனே, ஆளும்கட்சி தரப்பிலிருந்து அவருக்கு நெருக்கடி வந்தது.  அடுத்த சில நிமிடங்களிலேயே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். “படித்தவர்களுக்கு இந்த விருதுநகர் மாவட்டத்தில் மரியாதையே கிடையாதா?” என்று புலம்பியபடிதான்  அங்கிருந்து கிளம்பினார் வளர்மதி.    

 

ஆசிரியைகளுக்குத் தொல்லை!

v

 

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் விஜயபாலன் “விடுமுறை நாளான சுதந்திரதினத்தன்று பொறுப்பேற்ற ஒரு மணி நேரத்தில் வளர்மதியை இடமாற்றம் செய்ய முடிகிறதென்றால்,    தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தை  ஆளும்கட்சியினர் எந்த அளவுக்கு ஆட்டுவிக்கின்றனர் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  விருதுநகர் மாவட்டத்துக்கு புதிதாக எந்த டி.இ.ஓ.வும் வரமுடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்சார்ஜ் டி.இ.ஓ.தான். அதனால், தொடர்ந்து தள்ளாட்டத்திலேயே இருக்கிறது இந்தக் கல்வி மாவட்டம்.  ரெகுலர் டி.இ.ஓ. வந்தால்தான் எல்லாம் சரியாகும். தற்போது இன்சார்ஜ் டி.இ.ஓ.வாக இருக்கிறார் மோகன். பணிமூப்பு அடிப்படையில் பார்த்தால் இன்சார்ஜ் டி.இ.ஓ. ஆவதற்கு இவருக்கு தகுதியே இல்லை.   மோகனால் ஆசிரியைகள் தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகி வருகிறார்கள். இதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.” என்று தயங்கினார்.

 

மாணவிகள் அழுகிறார்கள்!

‘மோகன் எப்படிப்பட்டவர்?’ அவர் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும்  சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வட்டாரத்தில் விசாரித்தோம். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியை ஒருவர் நம்மிடம் “இந்த ஸ்கூல்ல முழுக்கமுழுக்க லேடி டீச்சர்ஸ்தான். ரெண்டு பேர் மட்டும்தான் ஜென்ட்ஸ் ஸ்டாஃப். அந்தமாதிரி விஷயத்தை, அதுவும் ஹெட்மாஸ்டரோட நடத்தை குறித்துப் பேசுறதுன்னா டீச்சர்ஸுக்கு பயம் இருக்கத்தானே செய்யும். அதுவும் இவர்,  கூடுதல் பொறுப்பில் மாவட்ட கல்வி அலுவலராவும்  இருக்காரு.” என்றவர் சிறிது யோசித்துவிட்டு “என்ன ஆனாலும் பூனைக்கு மணி கட்டியாகணும். என்ன நடக்குதுன்னு நான் சொல்லுறேன்.  ஊர்மிளாங்கிற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) டீச்சர் ஹெட்மாஸ்டருக்கு அடுத்த இடத்துல இருக்கிறவங்க. அவங்க கிளாஸுக்கே போக மாட்டாங்க. ஸ்கூல் டயத்துல நினைச்ச நேரத்துல டூ வீலரை எடுத்துட்டு வெளிய கிளம்பிருவாங்க.  ஸ்டூடண்ட்ஸெல்லாம் சப்ஜெக்ட் டீச்சர் வராம நாங்க எப்படி படிக்கிறதுன்னு எங்கள  மாதிரி டீச்சர்ஸ்கிட்ட சொல்லி அழறாங்க. காரணம் மோகன் சார்கிட்ட அவங்களுக்கு இருக்கிற நெருக்கம்தான். 

 

வ்


ஒருநாள் தன்னோட (ஹெட்மாஸ்டர்) ரூம்ல வச்சு ஊர்மிளா டீச்சரை அடிஅடின்னுஅடிச்சாரு மோகன். அதை ஒரு டீச்சர் பார்த்துட்டு வந்து ஸ்கூல் முழுக்க பரப்பி விட்டுட்டாங்க. நான் கேட்கிறேன்? ஹெட்மாஸ்டர்ன்னா லேடி டீச்சரை அடிக்கலாமா? அடி வாங்கிட்டு அவங்க மூச்சு காட்டாம இருக்கிறாங்கன்னா.. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு  ‘அன்டர்ஸ்டேன்டிங்’ இல்லாமலா இருக்கும்? அவரோட ரூம்ல ஒ.ஏ. ஒருத்தங்க இருக்காங்க.  ஊர்மிளா டீச்சர் வந்துட்டாங்கன்னா.. அந்த ஒ.ஏ.வை வெளிய போகச் சொல்லிருவாரு. என்னதான் பேசுவாங்களோ தெரியாது. மணிக்கணக்கா பேசுவாங்க. இவங்க அடிக்கிற கூத்து எல்லா ஸ்டூடண்ட்ஸுக்கும் தெரியும். இது கொடுமையில்லியா? மோகன் சார் இருக்கிற தெருவுலயும் பிரச்சனைதான். அங்கேயும் யாருக்கோ தப்புத்தப்பா மெசேஜ் அனுப்பி அந்த விவகாரம் ஸ்கூல் வரைக்கும் வந்திருச்சு.” என்றார் கொதிப்புடன்.  

 

பள்ளியிலேயே தகாத உறவு!

அதே பள்ளியில் பணிபுரியும் இன்னொரு ஆசிரியை  “2019, ஆகஸ்ட் மாசம் 29-ஆம் தேதி இங்கு வேலை பார்க்கும் நாகேஸ்வரி,  மோகன் குறித்து முதலமைச்சருக்கு எழுதிய  மனுவில் ‘இந்த ஆட்சிக்கு இது ஒரு கலங்கம்.  தலைமை ஆசிரியரும் ஒரு பெண் ஆசிரியரும் பள்ளியிலேயே தகாத உறவு கொள்கிறார்கள். இத்தவறைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, முதன்மைக் கல்வி அதிகாரிக்கு சில தனிப்பட்ட தரகர் வேலை செய்கிறார் மோகன். உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் தலைகால் புரியாமல் ஆடுகிறார். நான் கோவிலாக நினைக்கும் இப்பள்ளியின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டி காலில் விழுந்து மன்றாடி வேண்டுகிறேன்.’ என்று குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்தப் புகாரைத் தனது மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி, தானே விசாரித்து அது பொய்ப்புகார் என்று மோகனே முடித்து வைத்ததுதான். அப்போது இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான நாகேஸ்வரி கடுமையாக மிரட்டப்பட்டாராம்.  

 

க்

 

வாட்ஸ்-ஆப்பில் ‘லீக்’ ஆன சமாச்சாரங்கள்!

ஆசிரியர் சங்கத்தினரோ “பள்ளிகளுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு போறப்ப யார்யாரு நல்லாயிருக்கா? அவங்க பேக்ரவுண்ட் என்னன்னு தெரிஞ்சிக்குவாரு.  விடோஸ்.. அப்புறம் டைவர்ஸ் வாங்கினவங்க.. வீட்ல பிரச்சனை உள்ளவங்கன்னு ஆளுங்கள நேர்ல பார்த்து தேர்ந்தெடுத்து 30 கி.மீ. தள்ளி  ‘டெபுடேசன்’ போடுவாரு. அவங்களும் வேற வழியில்லாம டி.இ.ஓ. ஆபீசுக்குப் போயி இவரைப் பார்த்து கெஞ்சுவாங்க. அப்ப, அவங்க வீக்னஸை தெரிஞ்சிக்கிட்டு மூவ் பண்ணுவாரு.  சரிவர மாட்டாங்கன்னா விட்ருவாரு. தன்கிட்ட சிக்குனவங்கள தனக்கு மேல உள்ள அதிகாரிங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அனுப்பி வைப்பாரு. அப்படித்தான் இதுக்கு முன்னால இருந்த சி.இ.ஓ. ஜெயகுமார் பண்ணுன சமாச்சாரம்  வாட்ஸ்-ஆப்ல லீக் ஆகி இந்த மாவட்டத்தை விட்டே அவரை ஓட வச்சது.” என்றார்கள் வேதனையோடு. 

 

வேட்டையாடும்போது வயாக்ரா!

மேலும் ஆசிரியர்  சங்கத்தினர் விவரித்த மோகனின் லீலாவினோதங்கள் இவைதான் -   
2013-ல் காரியாபட்டி தாலுகாவில் உள்ள அழகியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக மோகன் பணிபுரிந்தபோது ஆசிரியை ஒருவருடன் வைத்திருந்த தொடர்பை மாணவர்களே கழிப்பறையில் படங்களாக வரைந்து தள்ளினார்கள். விசாரணை நடத்தும் அளவுக்கு இது பெரிய விவகாரம் ஆனது.

 

 சிவகாசியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் ஆசிரியை ஒருவரை விருதுநகருக்கு அழைத்துச்சென்று விடுதியில் தங்கியது, ஆசிரியையின் கணவருக்குத் தெரிந்துவிட,  அவர் நேராக மோகன் வீட்டுக்கே போய் ரகளை பண்ணிவிட்டார்.  தற்போது விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மோகன் அடிக்கடி செல்வதும் ஒருமாதிரி பேசப்படுகிறது. ஆசிரியைகளை மட்டுமல்ல.. பெற்றோரையும் மோகன் குறிவைத்து விவகாரத்தில் சிக்கினார். அவர் பணிபுரியும் சத்திரரெட்டியபட்டி பள்ளியின் பெற்றோர் கூட்டத்துக்கு வந்திருந்த மாணவி ஒருவரின் அம்மா மீது மோகனின் பார்வை பட்டது. “நீ சரியாகப் படிப்பதில்லை. உன் அம்மாவை பள்ளிக்கு வரச்சொல்..” என்று மாணவியைக் கண்டிப்பதுபோல் நடந்து, அந்த அம்மாவை அடிக்கடி பள்ளிக்கு வரச்செய்தார். இதுவும் அந்தப் பள்ளியில் புகைச்சலானது. சாத்தூர், ஆமத்தூர், செநெல்குடின்னு எல்லா ஊருலயும் அவரு அந்த வேலைதான் பார்த்திருக்காரு. இவரால் சீரழிந்த ஒரு ஆசிரியை, தனக்கு நெருக்கமான சக ஆசிரியையிடம்  ‘அந்த ஆளு ரொம்ப மோசம். வயாக்ராவெல்லாம் யூஸ் பண்ணுறார். தெரியாம மாட்டிக்கிட்டேன்.’ என்று அழுதிருக்கிறார். எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது.  தங்களுக்கு நடந்த கொடுமையை எப்படி புகாராக அளிப்பார்கள்? அந்த பயம்தான் மோகனுக்கு வயதியாகப் போய்விட்டது. 

 

பாலியல் புகார் மட்டுமல்ல.. மோசடி புகார்களுக்கும் ஆளாகியிருக்கிறார் மோகன். விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் கலைத்திருவிழா என்ற பெயரில் சுருட்டல்,  கொடிநாள் வசூலில் முறைகேடு. நல்லாசிரியர் விருதுக்கு ரூ.2.5 லட்சம் வசூல்,  பணியாளர் மான்யத்தில் மோசடி என பண வேட்டையிலும் தீவிரமாக இருக்கிறார் என ஆசிரியர் சங்கத்தினர் குமுறலைக் கொட்டினார்கள்.  இவையனைத்தும் உளவுத்துறை மூலம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரிடமிருந்து ‘மந்தனம்’ பெறப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, ஜூலை 3-ஆம் தேதி மோகனிடம் நேரடி விசாரணை நடத்தியிருக்கிறார். 

 

கேவலமானவன் அல்ல; நேர்கொண்ட பார்வைதான்!

 

நாம் சி.இ.ஓ. இன்சார்ஜ் மோகனைத் தொடர்புகொண்டோம். “இதெல்லாம் என்னோட பெர்சனலை டேமேஜ் பண்ணுற மாதிரியிருக்கு.  சாதாரணமாவே நான் நேர்கொண்ட பார்வைல போறவன். இந்தமாதிரி அல்லறை சில்லறை வேலையெல்லாம் தெரியாது. பழைய சி.இ.ஓ. ஜெயகுமாருக்கு அசிங்கமா பண்ணுனேன்னு சொல்லுறாங்க. என் மீது எந்த ஆசிரியையாவது ஆதாரத்தோடு பாலியல் குற்றச்சாட்டு சொல்லிருக்காங்களா?  

 

m

 

கடவுள் சத்தியமா அப்படி இல்லவே இல்ல. அசிங்கமான கேவலமான ஆளு நான் இல்ல. நிரூபித்தால்  அந்த நேரமே நான் மருந்தைக் குடித்து செத்திருவேன். பெட்டிஷன்னு வந்தா என்கொயரி போட்டுத்தானே ஆகணும். என்ன சொல்லுறதுன்னே தெரியல. எப்படி ப்ரூஃப் பண்ணுறதுன்னும் தெரியல. இங்கே டி.இ.ஓ.வா வர்ற எல்லாரையும் வேலை செய்யவிடாம தடுக்கிறேன்னு ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திட்டாங்க. நான் லாங் லீவ் போட்டுட்டுப் போயிடலாம்னு நினைக்கிறேன். இத்தனைக்கும் காரணம் டி.இ.ஓ. ஆபீஸ்ல அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கிற பால் அசோக்தான். அவனோட மிரட்டலைத் தாங்கமுடியல. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.கிட்ட சொன்னேன். நான் தட்டி வைக்கிறேன் தம்பின்னு சொன்னாரு.” என்று இந்த விவகாரத்தை  ‘அரசியல்’ ஆக்கினார். 

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

k

 

பால் அசோக் நம்மிடம் “நான் ஒரு உதவியாளர். அவரோ அதிகாரி. கடந்த மாதம் அலுவலகத்தில் அவருக்குத் தெரிந்தே நடந்த ஒரு போலி கையெழுத்து மோசடி மற்றும் முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தேன். அதன்மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை.  அவர் என்னை சமாதானப்படுத்தினார். நான் அதை ஏற்கவில்லை. நடவடிக்கை தேவை என்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் செய்திருக்கிறேன்.  அந்தக் காழ்ப்புணர்ச்சியில்தான் அவருக்கு எதிராக நான் செயல்படுவதாகப் பழி சுமத்துகிறார்.” என்றார்.


‘விருதுநகர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு கல்வித்துறையில் அதிகமாக இருக்கிறது..’ என்ற குற்றச்சாட்டை தமிழக பால்வளத்துறை அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அதிமுக மா.செ.வுமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் முன்வைத்தோம். 

 

kt

 

“இந்த மாவட்டம் நல்லாயிருக்கணும். கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்கணும்னுதான் எங்களால முடிஞ்ச அளவுக்கு அதிகாரிகளை முடுக்கி விடறோம். டி.இ.ஓ. இன்சார்ஜ் மோகன் மீது இந்த அளவுக்கு குற்றச்சாட்டுகள் இருக்கிறதா? சீக்கிரமே ஒரு ரெகுலர் டி.இ.ஓ. போட்டு எல்லாத்தயும் சரி பண்ணிருவோம்.” என்றார். 

 

திரைப்படம் ஒன்றில்  ‘கல்வி கலவி ஆயிருச்சு’ என்ற வசனம் காமெடியாகப் பேசப்படும். ஆய்வு என்ற பெயரில்  பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியைகளை விரட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோகனுக்குப் போய் மாவட்ட கல்வி அலுவலர் என்ற கூடுதல் பொறுப்பு தந்திருப்பது கொடுமையிலும் கொடுமைதான்! 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...